உலகக் கிண்ணத்திற்கு அழைத்தால் விளையாடத் தயார் – குசல் பெரேரா

1746

“குசல் ஜனித்துக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போகுமா?”

“குசல் இப்போது எப்படி இருக்கிறார்?”

“பாதி உடல் தகுதி இருந்தாலும் கூட குசலை உலகக் கிண்ண அணியில் சேர்க்க வேண்டும்…”

எதிர்வரும் உலகக் கிண்ண போட்டியில் விளையாடப் போகும் இலங்கை அணித் தேர்வு மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பற்றி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் கருத்துகள் இவை.

உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நான்கு இலங்கை வீரர்கள்

“10 போட்டிகளில் சோபிக்காமல் போனாலும் குசல் அணியில் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் போட்டி ஒன்றை தனியே வெற்றி பெறச் செய்யக் கூடியவர்” என்று இலங்கை அணிக்கு குசல் ஜனித் பெரேராவின் தேவையை வெளிக்காட்டி கருத்துக் கூறியபோது இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

உலக டெஸ்ட் வரலாற்றில் ‘சிறந்த இன்னிங்ஸ்’ என்று விமர்சகர்களால் வர்ணிக்கப்பட்ட டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றை ஆடி கடந்த பெப்ரவரி மாதம் குசல் ஜனித் பெரேரா இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தார். அதனை உலகக் கிண்ணத்திற்கான நற்செய்தியாகவே அவர்கள் பார்த்தனர்.   

எவ்வாறாயினும் தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் காட்டிய திறமை ஒருநாள் போட்டிகளில் காட்ட அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர் அந்த ஒருநாள் தொடரில் உபாதைக்கு உள்ளானார்.  

தனது உபாதைக்கு பின்னர் குசல் ஜனித் பெரேரா தற்போது மீண்டும் தனது உடற் தகுதி பயிற்சியை ஆரம்பித்திருக்கிறார்.

“நான் உடல் தகுதியை நல்ல நிலைக்கு கொண்டுவர மீண்டுவரும் பயிற்சிகளை ஆரம்பித்து 3 வாரங்கள் ஆகிறது. நினைத்ததை விடவும் வேகமாக சுகம் பெற்று வருகிறேன. அடுத்த வாரம் நான் ஓட ஆரம்பிப்பேன். இரண்டு, மூன்று வாரங்களில் துடுப்பெடுத்தாட முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று ஆர் பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளுக்கு இடையில் BBC சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியின் போது குறிப்பிட்டிருந்தார்.  

உலகக் கிண்ண தொடரில் பங்கேற்க முடியுமா என்பது பற்றிய கேள்விக்கு குசல் ஜனித் பெரேரா பதில் கூறும்போது, “அனைத்தும் சாதகமான சூழலில் உள்ளது. எனக்கு சந்தர்ப்பம் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்றார்.

“எப்படி வேகமாக சுகம்பெறுவது என்றே நான் பார்க்கிறேன். உலகக் கிண்ணத்திற்கு நான் போவேனா என்று என்னால் கூற முடியாது. ஏனென்றால் என்னால் முடிந்தது உடற் தகுதி பெற்று போட்டியில் ஆடும் திறனை பெறுவது மாத்திரமே. தேர்வுக் குழு தான் உலகக் கிண்ண குழாத்தை தேர்வு செய்கிறது. எனவே, அவர்கள் தான் செல்கின்ற இறுதி அணியை தேர்வு செய்கின்றனர்.

ஐ.பி.எல் தொடரை அடுத்து மாகாண ஒரு நாள் தொடரிலும் அசத்திய லசித் மாலிங்க

நான் என்னால் முடிந்ததை செய்கிறேன். உலகக் கிண்ணத்திற்கு செல்லுமாறு தேர்வுக் குழு கூறினால் நான் செல்லத் தயார்” எனக் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக குசல் ஜனித் பெரேரா பல சந்தர்ப்பங்களில் சிறப்பான இன்னிங்சுகளை ஆடி பேசுபொருளாக மாறியபோதும் தமது உபாதை காரணமாக அவரால் தொடர்ச்சியாக பல போட்டிகளில் ஆட முடியாத நிலை உள்ளது.

“உண்மையிலேயே அதிக கவலை தருகிறது. எனது இரு கால்களிலும் உபாதை நிலை இருந்தது.

நான் கடைசி இரண்டு ஆண்டுகளில் சில போட்டிகளில் விளையாடுகிறேன் அதற்கு பின்னர் உபாதைக்கு உள்ளாகி இருக்கிறேன். நான் பல உடற் தகுதி பயிற்சியாளர்களுடன் இணைந்து செயற்படுகிறேன். தற்போது பிரச்சினைகள் குறைவு. ஆனால் போட்டி ஒன்றில் விளையாடும்போது எந்த நேரத்தில் உபாதைக்கு உள்ளாவேன் என்று கூற முடியாது. தான் உடற்தகுதியுடன் இருக்கிறேன் என்பது அந்த இடத்திற்கு பொருந்தாது.

போட்டி ஒன்றின்போது ஓடுவதற்கு, பாய்வதற்கு வேண்டி இருக்கும். உடலைப் பற்றி நினைத்துக் கொண்டு போட்டியில் விளையாட முடியாது. ஏனென்றால் அந்த நேரத்தில் செய்ய வேண்டியது தானாக இடம்பெறுகிறது.       

அதிக நேரங்களில் உண்மையிலேயே துரதிஷ்டமானது. ஏனென்றால் எனது உடற் தகுதியை மாத்திரம் எடுத்துப் பார்த்தால் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே இவ்வாறு உபாதைக்கு உட்படுகிறேன்” என்றார் குசல் ஜனித் பெரேரா.

இலங்கை கிரிக்கெட் அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் இணைவது போட்டியில் பங்கேற்கும் நாடுகளில், அண்மைய ஆண்டுகள் குறைவான வெற்றிகளை பதிவு செய்த அணியாகவாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல அதிக வாய்ப்பு: இன்சமாம்

இவ்வாறு ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக பெற்ற தோல்விகள் பற்றி கருத்து வெளியிட்ட அவர், “நாம் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்ததே இங்கு இருக்கும் சிக்கலாகும். என்றாலும் இம்முறை உலகக் கிண்ணத்தை எடுத்துக் கொண்டால் எங்களிடம் அதிக எதிர்பார்ப்பு இல்லாததால் எம்மால் பெரிய மாற்றம் ஒன்றை செய்ய முடியும் என்று நாம் நினைக்கிறோம். நாம் அனைவரும் எமது தனிப்பட்ட திறமையை அதிகரித்துக் கொண்டு ஆடினால் இந்த தோல்விகளில் இருந்து மீள முடியும்” என்று குசல் நம்பிக்கையுடன் கூறினார்.   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<