2024 மகளிர் T20 உலகக் கிண்ண நேரடித் தகுதியை இழந்த இலங்கை

ICC Women's T20 World Cup 2024

153

பங்களாதேஷில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நேரடி தகுதி பெறத் தவறி இருக்கின்றது. இதனால், அதே ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றில் ஆட வேண்டிய நிலைக்கு இலங்கை உள்ளாகியுள்ளது.

ஐசிசியின் 8ஆவது மகளிர் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் கடந்த வாரம் தென்னாபிரிக்காவில் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு (2024) பங்களாதேஷில் நடைபெறவுள்ள 9ஆவது மகளிர் T20 உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதிபெற்ற அணிகள் குறித்த விபரங்களை ஐசிசி செவ்வாய்க்கிழமை (28) வெளியிட்டுள்ளது.

இதன்படி, நடைபெற்று முடிந்த மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த 6 அணிகள் அடுத்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாடத் தகுதிபெற்றுக்கொண்டன.

இம்முறை மகளிர் T20 உலக சம்பியனான அவுஸ்திரேலியா, 2ஆவது இடத்தைப் பிடித்த தென்னாபிரிக்கா மற்றும் 3ஆவது இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ஆகிய நாடுகள் குழு 1இலிருந்தும், இங்கிலாந்து, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் குழு 2இலிருந்தும் 2024 மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெற்றன.

இந்த அணிகளுக்கு மேலதிகமாக, அடுத்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை நடத்தும் வரவேற்பு நாடான பங்களாதேஷ் மற்றும் மகளிர் T20 அணிகள் தரவரிசையின் படி 7ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் நேரடி தகுதி பெற்றுள்ளன.

இதன்படி, 10 அணிகள் மோதும் 2024 மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் எஞ்சிய இரண்டு அணிகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெறும் தகுதிகாண் சுற்றுப்போட்டியில் இருந்து தெரிவு செய்யப்படும்.

எனவே, இந்த ஆண்டு மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடி குழு 1இல் கடைசி இடத்தைப் பிடித்த இலங்கை அணியும், குழு 2இல் கடைசி இடத்தைப் பிடித்த அயர்லாந்து அணியும் அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<