தைஜூல் இஸ்லாமிற்கு அபராதம் விதித்த ஐசிசி!

Sri Lanka tour of Bangladesh 2022

285

பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் தைஜூல் இஸ்லாமிற்கு, அவருடைய போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்றைய தினம் (26) நடைபெற்றுவருகின்றது.

இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறியது RCB

இந்தப்போட்டியில் பங்களாதேஷ் அணிக்காக விளையாடிவரும் தைஜூல் இஸ்லாம், மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ஐசிசியின் விதிமுறையை மீறியதாக போட்டி மத்தியஸ்தர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக பங்களாதேஷ் அணியின் 69வது ஓவரை தைஜூல் இஸ்லாம் வீசினார். இதன்போது பந்தை அஞ்செலோ மெதிவ்ஸ் துடுப்பெடுத்தாடிய போது, பந்தானது நேரடியாக தைஜூல் இஸ்லாமிடம் சென்றது.

அஞ்செலொ மெதிவ்ஸ் துடுப்பாட்ட வீரர்களுக்கான எல்லையில் இருந்த போதும், பந்தை எடுத்து உடனடியாக தைஜூல் இஸ்லாம் விக்கெட்டுக்கு வீச முற்பட்டார். எனினும் குறித்த பந்து மெதிவ்ஸின் பெருவிரல் பகுதியை தாக்கியது. இதனால், மெதிவ்ஸ் சிறிய சிகிச்சையொன்றையும் பெற்றுக்கொண்டார்.

எனவே,  வீரர் அல்லது போட்டி அதிகாரிகளுக்கு எதிராக பந்தை அபாயகரமாக வீச முற்பட்டமை தொடர்பில், ஐசிசியின் கட்டுரை 2.9 சரத்தின்படி, தைஜூல் இஸ்லாமிற்கு போட்டிக்கட்டணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதுமாத்திரமின்றி அவருக்கு எதிராக ஒரு தரமிறக்க புள்ளியும் வழங்கப்பட்டது.

தைஜூல் இஸ்லாம் தான் செய்த குற்றத்தை போட்டி மத்தியஸ்தர் கிரிஸ் புரோட்டிடம் ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் அவசியமில்லை என ஐசிசி குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், பந்தை மெதிவ்ஸிற்கு எதிராக வீசியவுடன், தைஜூல் இஸ்லாம் மெதிவ்ஸிடம் மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<