டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம்

46

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கன்னி இரட்டைச் சதத்தை விளாசிய இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் 20 வீரர்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் தென்னாபிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னதான டெஸ்ட் வீரர்கள் தரவரிசையை ஐ.சி.சி இன்று (24) வெளியிட்டுள்ளது.

அபார வெற்றியைப் பதிவு செய்த இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே….

வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசையில் இலங்கை அணியின் வீரர்கள் பலர் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர். இதில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைக் குவித்த மெதிவ்ஸ் 8 இடங்கள் முன்னேறி 16 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

மெதிவ்ஸ் இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 3 ஆவது இடத்தை பிடித்திருந்ததுடன், அதே காலப்பகுதியில் முதல் 10 ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையிலும் இடம்பிடித்திருந்தார்.

அஞ்செலோ மெதிவ்ஸை தவிர்த்து, குசல் மெண்டிஸ் 30 ஆவது இடத்திலிருந்து 26 ஆவது இடத்துக்கும், தனன்ஜய டி சில்வா 39 ஆவது இடத்திலிருந்து 37 ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளதுடன், பந்துவீச்சாளர்கள் வரிசையில் சுரங்க லக்மால் 26 ஆவது இடத்திலிருந்து 22 ஆவது இடத்துக்கும், லஹிரு குமார 32 ஆவது இடத்திலிருந்து 30 ஆவது இடத்துக்கும், லசித் எம்புல்தெனிய 18 இடங்கள் முன்னேறி 56 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வே அணியை பொருத்தவரை, சிக்கந்தர் ராஸா  7 இடங்கள் முன்னேறி பந்துவீச்சாளர்கள் வரிசையில் 72 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்கா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவுகளின் பின்னர், 135 ஓட்டங்களை விளாசிய ஒல்லி போப் 52 இடங்கள் முன்னேறி 61 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், செம் கரன் மற்றும் டொம் சிப்லி ஆகியோர் முறையே 4 இடங்கள் முன்னேறி 64 மற்றும் 76 ஆவது இடங்களை பிடித்துள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது போட்டியில் 120 ஓட்டங்களை விளாசியதன் ஊடாக சகலதுறை வீரர்கள் தரவரிசையில், 2 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், துடுப்பாட்ட வரிசையில் 10 ஆவது இடத்தையும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் 29 ஆவது இடத்தையும் பிடித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசையை பொருத்தவரை, துடுப்பாட்ட வரிசையில் விராட் கோஹ்லி முதல் இடத்தை பிடித்துள்ளதுடன், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பெட் கம்மின்ஸ் மற்றும் சகலதுறை வீரர்கள் வரிசையில் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<