உலகக் கிண்ண வாய்ப்பை இழக்கும் நான்கு இலங்கை வீரர்கள்

1211

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, வேகபந்துவீச்சாளரான லஹிரு குமார, சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் சானக்க ஆகியோர் இழந்துள்ளனர்.

உபாதை காரணமாக குறித்த நான்கு வீரர்களும் மாகாண ஒருநாள் போட்டித் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பந்து வீசுவதற்கான எண்ணமில்லை; அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், சகலதுறை வீரருமான அஞ்செலோ மெதிவ்ஸ் முழுமையான உடற்தகுதி…

இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் மே மாதம் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளதால், அதில் பங்கேற்கவுள்ள வீரர்களை ஒவ்வொரு நாடுகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதிக்கு முன் அறிவிக்க வேண்டும். எனவே உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இறுதி அணியை தேர்வு செய்வதில் ஒவ்வொரு நாடுகளும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இதனிடையே, இலங்கை அணிக்காக இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாடலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நான்கு வீரர்களும் உபாதைக்குள்ளாகியிருப்பது இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகைப் போட்டிகளிலும் விளையாடிய இலங்கை அணி, அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும், இறுதியாக தென்னாபிரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்தது.

இதில் நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடைப் பகுதியில் காயமடைந்த நிலையில், அந்தத் தொடரிலிருந்து வெளியளேறியதுடன், அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் என்பவற்றில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியத் தொடரில் விளையாடச் சென்ற வேகப்பந்துவீச்சாளரான நுவன் பிரதீப், முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் ஹோர்பார்டில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின்போது தொடை பகுதியில் தசைப்பிடிப்புக்கு உள்ளானார். அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணிக்கு எதிரான அந்தப் பயிற்சிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர் இரண்டு ஓவர்கள் மாத்திரம் வீசிய நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறியதுடன், அவுஸ்திரேலிய தொடரிலிருந்து நாடு திரும்பினார்.

இதன்படி, தத்தமது உபாதைகளிலிருந்து பூரண குணமடைந்த குறித்த இரண்டு வீரர்களும், சுமார் 2 மாதகால ஓய்விற்குப் பிறகு அண்மையில் நிறைவுக்கு வந்த முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி தமது உடற்தகுதியினை நிரூபித்து இருந்தனர்.

இது இவ்வாறிருக்க, நாளை (04) ஆரம்பமாகவுள்ள மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் தம்புள்ளை அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸும், கண்டி அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக நுவன் பிரதீப்பும் களமிறங்கவுள்ளனர்.

உலகக் கிண்ண இலங்கை அணி குறித்து தேர்வுக் குழுத் தலைவர் சூசகம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக்காக பதினொரு…

குசலின் தொடைத்தசை உபாதை

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, கடந்த மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இடது தொடைத்தசையில் உபாதை ஒன்றினை எதிர்கொண்டிருந்தார்.

இந்த உபாதையின் காரணமாக குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்க அணியுடனான எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகினார்.

உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் முக்கிய துருப்புச்சீட்டு குசல் பெரேரா என்பதில் சந்தேகமில்லை. உலகக் கிண்ணப் போட்டிக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், குசல் பெரேராவின் உடல் தகுதி மிகவும் முக்கியம் என்று தேர்வாளர்கள் கருதினார்கள். இதனையடுத்து அவரை உடனே நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இது இவ்வாறிருக்க, குசல் ஜனித் பெரேராவின் உபாதை குறித்து இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் பிரிவின் பிரதானி அசங்க குருசிங்க கருத்து வெளியிடுகையில், ”வைத்திய அறிக்கையின்படி, குசல் பெரேராவுக்கு ஏற்பட்டுள்ள உபாதையானது குணமடைவதற்கு இன்னும் 2 மாதங்கள் எடுக்கும். எனவே அவருக்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாட முடியாமல் போனாலும், மிகவிரைவில் அவருடைய உபாதையை குணப்படுத்துவதற்கு முயற்சி செய்வோம்” என தெரிவித்தார்.

எனினும், முன்னதாக அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்தார்

பயிற்சிப் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் டில்ருவான் பெரேராவின் ஓவருக்கு ஷோர்ட் லெக் (short leg) பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்ட நிலையில், ஜெக் டொரன் அடித்த பந்து வேகமாக வந்து அவரது கைவிரலை பதம் பார்த்திருந்தது. இதன் பின்னர் களத்திலிருந்து சிகிச்சைக்காக வெளியேறிய குசல் மெண்டிஸ், எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், துடுப்பெடுத்தாடுவதற்கும் களமிறங்கவில்லை.

எனினும், குசல் மெண்டிஸிற்கு மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை அறிக்கையின்படி, அவரது விரலில் முறிவுகளோ அல்லது பெரிய காயங்களோ இல்லையெனவும், உபாதை தீவிரமாக இல்லையென தெரியவந்தது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 71

23 வயதுக்குட்பட்ட AFC கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் தகுதிச்சுற்றோடு வெளியேறி வெறுங்கையோடு…

இதேவேளை, இலங்கை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக விளங்கிய குசல் ஜனித் பெரேராவுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாமல் போனது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன், அந்த குற்றத்திலிருந்து அவர் நிரபராதி என உரிய விசாரணைகளின் பிறகு தெரிய வந்ததுடன், அவருக்கு நஷ்டஈடும் வழங்கப்பட்டது. எனவே, இம்முறை உலகக் கிண்ணத்திலும் அவருக்கு உபாதை காரணமாக பங்கேற்க முடியாது போனமை இலங்கை ரசிகர்களிடையே மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

லஹிரு, துஷமந்தவின் உபாதை

தொடைத்தசை உபாதையினால் இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவும். கணுக்காலில் ஏற்பட்ட உபாதையினால் துஷ்மந்த சமீரவும் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் உபாதைக்குள்ளாகிய 21 வயதுடைய இளம் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமார போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் மூன்றாம் இடைவேளையில் பந்துவீச மைதானத்திற்கு வந்திருக்கவில்லை.

உபாதைக்கு ஆளாகிய பின்னர் லஹிரு குமாரவினை பரிசோதனை செய்த போது அவரது தொடைத் தசையில் உக்கிரமான கிழிவு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்படி, வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார அடுத்த ஆறு வாரங்களுக்கு விளையாட முடியாதென அறிவிக்கப்பட்டது.

தற்போது பூரண ஓய்வில் இருக்கும் லஹிரு குமாரவுக்கு, இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல, நாளை (04) ஆரம்பமாகவுள்ள மாகாண ஒருநாள் போட்டித் தொடரிலும் அவர் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, லஹிரு குமார தவிர இலங்கை அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான துஷ்மந்த சமீரவும் கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவுஸ்திரேலியாவுடனான இரண்டவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு தென்னாபிரிக்க அணியுடனான சுற்றுப்பயணத்தில் இருந்து நீக்கப்பட்ட துஷ்மந்த சுமார் ஒரு மாதங்களாக பூரண ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், நாளை (04) ஆரம்பமாகவுள்ள மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் காலி அணிக்காக களமிறங்கவுள்ளார்.

அசேல, தசுன் சானக்கவின் உபாதை

இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியில் இடம்பெறலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் சானக்க ஆகியோர் உபாதைகளுக்கு முகங்கொடுத்துள்ளதால் அவர்களால் மாகாண ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு இம்முறை உலகக் கிண்ணத்தில் விளையாட முடியாமல் போவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் புத்துயிர் பெறவுள்ள லங்கன் ப்ரீமியர் லீக்

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) ஏற்பாட்டின் கீழ் கடந்த வருடம் ஆரம்பிக்கப்படவிருந்த …

இதில் அசேல குணரத்ன, பங்களாதேஷ் உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ப்ரீமியர் லீக் போட்டித் தொடரில் களத்தடுப்பில் ஈடுபட்ட போதும், தசுன் சானக்க கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிகளின் போதும் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், குறித்த இரண்டு வீரர்களும் இறுதியாக நியூசிலாந்து அணிக்கெதிராக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தனர். எனினும், அவர்களுக்கு எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது.

அதன்பிறகு நடைபெற்ற உள்ளூர் கழகமட்ட முதல்தர ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடியிருந்த குறித்த இரு வீரர்களும் தலா 3 அரைச்சதங்களை குவித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க