மீண்டும் துளிர்விடும் கால்பந்து!

142

கொரோனா வைரஸ் தொற்றினால் முடங்கிப்போன சர்வதேச கால்பந்து போட்டிகள் தற்போது மெல்ல மெல்ல வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் நீங்காத சூழலிலும் கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான நிர்ப்பந்தம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பொழுது போக்கு அம்சத்திற்கு அப்பால் பொருளாதார ரீதியிலான தாக்கம் பல கால்பந்து கழகங்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

ஐரோப்பாவில் இருக்கும் பார்சிலோனா போன்ற செல்வந்த கழகங்களும் கால்பந்து இல்லாததால் வருமானம் இன்றி பெரும் சரிவை சந்தித்து வருகின்றன

போட்டி நெரிசல்: ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்த பிஃபா பரிந்துரை

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னரான அதிக ………..

எனவே ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகள் தமது கால்பந்து லீக்கை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்ட செயற்பாடுகளில் தீவிரம் காட்டியிருப்பதோடு ஐரோப்பாவின் முதல் நாடாக ஜெர்மனி மீண்டும் கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளது

சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் முழு வீச்சி கண்ட தமது  கால்பந்து லீக் போட்டிகளை நடத்துவதற்கு தயாராகியுள்ளன.   

குறிப்பாக, மேற்கு ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வரும் ஜெர்மனியில் அதன் புன்டஸ்லிகா தொடர் வரும் மே 16 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று ஜெர்மனி கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன்படி ஐரோப்பாவின் முதல் பிரதான கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் ஆரம்பமாகவுள்ளமை உறுதியாகியுள்ளது

கொவிட்-19 காரணமாக ஜெர்மனியில் கடந்த மார்ச் ஆரம்பத்தில் காலவரையின்றி நிறுத்தப்பட்ட கால்பந்து போட்டிகளை மீள ஆரம்பிப்பது குறித்த எதிர்பார்ப்பு கடந்த மாத நடுப்பகுதியில் அதிகரித்தது. அப்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அரசு தற்போது போட்டிகளை நடத்த பச்சைக்கொடி காட்டியுள்ளது.   

போட்டி ஆரம்பிக்கப்படும் முதல் தினத்தில் ஆறு போட்டிகள் நடைபெறவிருப்பதோடு அடுத்த நாளில் நடப்புச் சம்பியனும் தற்போதைய பருவத்தில் 4 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் இருக்கும் அணியுமான பெயார்ன் முனிச் களமிறங்கவுள்ளது.   

இந்தத் தொடரில் பெரும்பாலான அணிகள் இன்னும் ஒன்பது போட்டிகளில் ஆடவேண்டி இருப்பதோடு, பருவத்தில் கடைசி வார இறுதி நாட்களாக வரும் ஜூன் 27-28 ஆம் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.   

எனினும், பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே போட்டிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரங்கில் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் கொவிட்-19 சோதனைக்கு முகம்கொடுக்க வேண்டும்.    

அதாவது போட்டியின்போது வீரர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அரங்கிற்குள் மொத்தம் சுமார் 300 பேரே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

போட்டிகள் மாறுபட்டு இருப்பதை உணரலாம். ரசிகர்களுடன் போட்டி நடைபெறுவதை நாம் ஏன் விரும்புகிறோம் என்பதை முதல் போட்டி தினத்திற்கு பின்னர் எமக்கு தெரியவரும். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளுடனேயே நாம் செயற்பட முடியும். இந்த கட்டுப்பாட்டுடன் சிறந்த விளையாட்டை முன்னெடுக்க முடியும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று ஜெர்மனி கால்பந்து லீக்கின் தலைமை நிறைவேற்று அதிகாரி கிறிஸ்டியன் செய்பேர்ட் தெரிவித்தார்.   

வரும் ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஜெர்மனியில் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் புன்டஸ்லிகா பருவத்தின் எஞ்சிய போட்டிகள் ஆரவாரம், கரகோசங்கள் இன்றியே நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்

அதேபோன்று சுவிட்ஸர்லாந்து, போர்த்துகல் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து லீக் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

எனினும் இத்தாலி சீரி A, இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் ஸ்பெயின் லா லிகா ஆகிய ஐரோப்பாவின் பிரதான லீக் போட்டிகளை ஆரம்பிப்பது பற்றி இன்னும் உறுதியான முடிவு ஒன்று எடுக்கப்படவில்லை

ஜெர்மனியில் இம்மாதம் கால்பந்து போட்டிகள் ஆரம்பம்

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றுக்கு மத்தியில் ……..

லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது பார்சிலோனா சக வீரர்கள் வெள்ளிக்கிழமை (08) தனிப்பட்ட பயிற்சிகளை ஆரம்பித்தனர். லா லிகா போட்டிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே அந்தத் தொடரில் முதலிடத்தில் இருக்கும் பார்சிலோனா கழகம் தமது தயார்படுத்தல்களை தொடங்கியுள்ளது.  

கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தபோது கடந்த மார்ச் மாதம் அனைத்து விளையாட்டுகளையும் ஸ்பெயின் நிர்வாகம் இடைநிறுத்தியது. ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நாட்டில் வைரஸ் தாக்கம் குறைந்தபோதும் அதன் அச்சுறுத்தல் இன்னும் தணியவில்லை.  

எனவே வரும் ஜூன் மாதம் அளவில் லா லிகாவை மீண்டும் ஆரம்பிக்க ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் எதிர்பார்த்துள்ளது. வரும் ஜூன் 20 ஆம் திகதி லா லிகா மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வாரத்திற்குள் இந்தப் பருவத்தின் எஞ்சிய போட்டிகள் பூர்த்தி செய்யப்படும் என்று லேகானஸ் கழக பயிற்சியாளர் ஜாவியே அகுய்ரே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கால்பந்து நிர்வாக வட்டாரத்தில் இருந்து பெற்ற தகவலைக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

லீக் போட்டிகளை ஆரம்பிப்பதற்கான திகதியை நாம் ஏற்கனவே நிர்ணயித்துள்ளோம். ஜூன் 20 ஆம் திகதி லா லிகா போட்டிகளை நாம் ஆரம்பித்து ஐந்து வாரங்களில் நாம் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்வோம். சனிஞாயிறு மற்றும் புதன்வியாழன் என 11 திகதிகளில் போட்டிகள் நடத்தப்படும்

லா லிகா உத்தியோகபூர்வமாக இதனை எனக்குத் தெரிவித்தது. திட்டமிட்டபடி நாம் ஏற்கனவே பயிற்சிகளை ஆரம்பித்த நிலையில் இது மகிழ்ச்சியான செய்தியாகும்என்று அவர் தெரிவித்துள்ளார்.  

 இத்தாலியிலும் இதே நிலை நீடிக்கிறது. சீரி A கழகங்கள் இம்மாத ஆரம்பத்தில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன. ஜுவன்டஸ் நட்சத்திர வீரர் கிறிஸ்டியாகோ ரொனால்டோ போட்டிகளில் பங்கேற்பதற்காக போர்த்தகலில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தற்போது 14 நாள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளார். 

இத்தாலி திரும்பிய ரொனால்டோ 14 நாள் சுய தனிமைப்படுத்தலில்

தனது தாய்நாடான போர்த்துக்கலில் இருந்து இத்தாலி திரும்பி இருக்கும் ஜுவன்டஸ் கால்பந்து கழக ……..

எவ்வாறாயினும் கொரோனா வைரஸினால் ஐரோப்பாவில் மிக மோசமான பாதிப்புக்கு முகம்கொடுத்த இத்தாலி கால்பந்து போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதில் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. சிரி A கழகங்களின் மேலும் எட்டு வீரர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் சூழலில் நிலைமை மேலும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.  

குறிப்பாக, அணிகளுக்கான விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்களுக்கான கட்டுப்பாட்டை தளர்த்த அரசு முடிவு செய்தபோதும், கால்பந்து போட்டிகள் விரைவில் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று இத்தாலி விளையாட்டுத்துறை அமைச்சர் வின்சென்சோ சபடபோரா குறிப்பிட்டுள்ளார்.  

அரசு சில விளையாட்டுகளை ஒருசில மாதங்களுக்கு தடை விதிக்கும் அச்சம் இருப்பதாக இத்தாலி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கப்ரின் க்ரவினா எச்சரித்துள்ளார். அவ்வாறான ஒரு நடவடிக்கை இத்தாலி கால்பந்தின் சாவு காலமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் போட்டிகளை வரும் ஜூன் மாதம் மீண்டும் ஆரம்பித்து ஜூலை இறுதியில் பூர்த்தி செய்வது பற்றி தற்போது தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி ப்ரீமியர் லீக் நிர்வாகம் ஒளிபரப்பாளர்கள், அரசு மற்றும் கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூடிய அரங்கில் நடத்தப்படும் சில போட்டிகளை தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்புவது பற்றியும் பிரதானமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது

கொரோனா வைரஸினால் பிரிட்டனில் 31 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் அங்கு நோய்ப் பாதிப்பு ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. எனவே ப்ரீமியர் லீக்கை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பச்சைக் கொடி காட்டுவதில் அரசு இன்னும் அவதானத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எவ்வாறாயினும் கொவிட்-19 காரணமாக ஐரோப்பாவின் பிரதான கால்பந்து லீக்குகளில் ஒன்றான பிரான்ஸின் லீக் 1 தொடர் ரத்துச் செய்யப்பட்டதோடு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளும் இவ்வாறான தீவிர முடிவை எடுத்தன

ஐரோப்பாவுக்கு அப்பால் கொவிட்-19 வைரஸின் பூர்விகமான சீனாவில் தாமதித்த சீன சுப்பர் லீக் போட்டிகள் முன்னணி வெளிநாட்டு நட்சத்திர வீரர்கள் இன்றி அடுத்த மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த உலகளாவிய தொற்றினால் முதலில் பாதிக்கப்பட்ட கால்பந்து தொடராகவே சீன சுப்பர் லீக் உள்ளது. இந்தத் தொடர் கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது

Getty Image

இந்நிலையில் வரும் ஜூன் கடைசியில் இந்தத் தொடர் ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றபோதும் வெளிநாட்டினர் நாட்டுக்குள் வர சீனா தற்காலிக தடை விதித்திருக்கும் நிலையில் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் பொலின்ஹோ, மார்கோ அர்னாடோவிக் உட்பட வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக சீன கால்பந்து சம்மேளனத் தலைவர் சென் சுவான் தெரிவித்துள்ளார்.  

எவ்வாறாயினும் தென் கொரியாவின் K லீக் கால்பந்து வெள்ளிக்கிழமை (08) மீண்டும் ஆரம்பமானது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் கால்பந்து போட்டிகள் எவ்வாறு அமையும் என்பதற்கான எடுத்துக் காட்டாக ஆரம்பமான அந்தத் தொடர் அமைந்திருந்தது.   

போட்டியின்போது அரங்கு வெறிச்சோடி இருந்ததோடு சில அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் முகக் கவசத்துடன் காணப்பட்டனர். மைதானத்திற்கு வெளியில் அமர்ந்திருந்த பதில் வீரர்களும் முகக் கவசத்துடன் காணப்பட்டனர்.

கொவிட்-19 காரணமாக மாலைத் தீவுகளில் சிக்கியுள்ள சுஜான் பெரேரா

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை கால்பந்து …………

மைதானத்திற்குள் வீரர்கள் முகக் கவசம் இல்லாதபோதும் கைகொடுப்பது தடை விதிக்கப்பட்டிருந்தது. பதிலாக வீரர்கள் முஷ்டிகளை முட்டிக் கொண்டனர். அதேபோன்று வீரர்கள் துப்புவதற்கோ அல்லது ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருந்து பேசுவதற்கோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

Getty Image

வீரர்களின் கூச்சல் தவிர்த்து போட்டியின் பெரும்பாலான நேரத்தில் மைதானம் எங்கும் அமைதி நிலவியது. என்றாலும் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் ரசிகர்களின் ஓசை ஒலிக்கச் செய்யப்பட்டது.  

ஜயோன்புக் மோட்டர்ஸ் மற்றும் சுவோன் ப்ளுவிங் கழகங்களுக்கு இடையிலான இந்தப் போட்டியில் மோட்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.  

ஒலிபெருக்கியில் செயற்கையான ரசிகர்களின் சதத்தத்துடனான கால்பந்து போட்டிகளை எதிர்வரும் காலங்களில் அதிகம் எம்மால் பார்க்க முடியுமாக இருக்கும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<