கொவிட்-19 காரணமாக மாலைத் தீவுகளில் சிக்கியுள்ள சுஜான் பெரேரா

92

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை கால்பந்து அணியின் கோல் காப்பாளர் சுஜான் பெரேரா மற்றும் இலங்கை கால்பந்து அணியின் முன்னாள் கோல் காப்பாளர் மொஹமட் அஸ்வர் ஆகியோருக்கு மாலைத் தீவுகளிலிருந்து, நாட்டுக்கு திரும்பிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுஜான் பெரேரா மாலைத் தீவுகளில் உள்ள ஈகல்ஸ் கழகத்துக்காக 2019-21ம் ஆண்டு பருவாலத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகின்றார். அத்துடன், மொஹமட் அஸ்வர் கோல் காப்பாளருக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். 

பிஃபா தரவரிசையில் இறுதி நிலைகளுக்கு நகரும் இலங்கை அணி

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ள ……

திவெஹி ப்ரீமியர் லீக் தொடரில் ஈகல்ஸ் கழகம் விளையாடி வருவதுடன், குறித்த தொடரின் இந்த பருவத்திற்கான புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதுமாத்திரமின்றி, AFC தொடருக்கான ப்ளே-ஓஃப் சுற்றுக்கும் தகுதிபெற்றுள்ளது. இதேநேரம், ஈகல்ஸ் அணி கொவிட்-19 காரணமாக மாலைத் தீவுகளில் ஊரடங்கு அமுல்படுத்துவதற்கு முன்னர், எப். ஏ. கிண்ண அரையிறுதிப் போட்டியில், டிசி ஸ்போட்ஸ் அணியை எதிர்கொள்ளவிருந்தது.

எனினும், மாலைத் தீவுகளில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரத்தில் மருத்துவ அவசர சேவை அமுல்படுத்தப்பட்டது. எனினும், இலங்கையில் இதற்கு முன்னரே ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், சுஜான் பெரேரா நாட்டுக்கு திரும்பிவர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

“எமக்கு மருத்துவ அவசர சேவை மாத்திரமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது, 86 நோயாளர்கள் இணங்காணப்பட்டதால், மலே நகரத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இப்போது, நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என சுஜான் பெரேரா எமது இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்டார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், “நான் இங்கு நலமாக இருக்கிறேன். எனது கழகம் மற்றும் அணி வீரர்கள் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், அதிகமான இலங்கையர்கள் இங்கு துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இங்குள்ள இலங்கையர்கள் அதிகமாக பாதிக்கப்படுவர்.

அதிலும், நகரத்துக்கு வெளியில் தொழில் புரியும் இலங்கையர்கள் நகரத்துக்கு வந்து உணவு பெற்றுக்கொள்வதிலும், சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதேநேரம், மாலைத் தீவுகளில் வாழ்வதென்பது வேறு நாடுகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. இங்கு அதிகமான தீவுகள் இருப்பதால், அனைத்து பொருட்களும் நகரத்திலிருந்தே அனுப்பப்படுகின்றன. 

அதற்காக நாட்டில் பல விடயங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுபோன்ற தருணத்தில் நாட்டுக்கு திரும்பிச் செல்வதுதான் சிறந்த விடயம். எனினும், இங்குள்ள இலங்கையர்கள் தங்களுடைய தொழிலை விட்டுச்செல்வதற்கு அச்சமடைகின்றனர். எனவே, இதற்கான சரியான தீர்வை இலங்கை  தூதரகம் செய்ய வேண்டும்” என்றார்.

அதேநேரம், இலங்கையின் தற்போதை நிலை குறித்தும் சுஜான் பெரேரா தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார். “நாம் இப்போது நாட்டுக்கு திரும்புவதற்கு சில நிபந்தனைகள் காணப்படுகின்றன. இலங்கை அரசு, வைத்திய அதிகாரிகள் மற்றும் படையினர் என அனைவரும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதனால், நாம் சற்று அமைதியாக இருக்க வேண்டும். அரசாங்கம் இதனை சரிப்படுத்துவதற்கான கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனால், அவர்களுடன் இருந்து ஒத்துழைப்பை வழங்கி ஒற்றுமையாக செயற்பட வேண்டும்.

நான் இங்கு வருகைத்தந்து மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. எனது மனைவி மற்றும் குழந்தையை சீக்கிரமாக பார்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாட்டுக்கு திரும்புவதுதான் நம்பிக்கையாக இருந்தாலும், அதற்காக அரசாங்கத்துக்கு நேரம் கொடுக்க வேண்டும். நாட்டின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்ட பின்னர், எம்மை அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என நினைக்கிறேன். அனைவரும் இணைந்து கொவிட்-19 இற்கு எதிராக போராடுவோம்” என்றார்.

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ …….

இதேவேளை, சுஜான் மற்றும் அஸ்வர் ஆகியோரின் நிலைமைகள் குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொது செயலாளர் ஜஸ்வர் உமர் கருத்து வெளியிடுகையில், 

“நாம், சுஜான் மற்றும் அஸ்வரை தொடர்புக்கொண்டோம். நாம் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளிடம் மாலைத் தீவுகளில் இருக்கும் வீரர்களை விரைவாக அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்திருந்தோம். அதுமாத்திரமின்றி, மாலைத் தீவுகள் கால்பந்து சம்மேளனத்திடம், வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்”

இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் அரசாங்கம் இணைந்து சுஜான் மற்றும் இலங்கை வீரர்களை மாலைத் தீவுகளில் இருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.

 >> மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<