பும்ராவுக்கு ஓய்வு; மீண்டும் விலகினார் கே.எல் ராகுல்

England Tour India 2024

62

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அதேபோல, 3ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கேஎல் ராகுல் முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார் 

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. எனினும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. 

இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி இந்த தொடரில் இருந்து விலகி இருக்கும் நிலையில், கே.எல் ராகுல் தசைப் பிடிப்பு காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் ஓய்வில் இருக்கிறார். 

அவர் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது அணியில் இணைந்து கொள்வார் என கூறப்பட்ட நிலையில், அவர் இன்னும் உடற்தகுதி பெறவில்லை எனக் கூறி பிசிசிஐ அவரை நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் நீக்கி உள்ளது 

அத்துடன், 2ஆவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளரும், அணியின் உதவி தலைவருமான ஜஸ்ப்ரித் பும்ராவி;ற்கு 4ஆவது டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது 

ஜஸ்ப்ரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகளிலும் விளையாடியதுடன், 17 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் துருப்புச்சீட்டாக இருந்தார். இந்நிலையில் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 5ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.. தெரிவித்துள்ளது. 

இதனிடையே, 3ஆவது டெஸ்ட் போட்டியின் போது அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக மொஹமட் சிராஜ் 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 

4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விபரம் 

ரோஹித் சர்மா (தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் பட்டிதார், சர்ப்ராஸ் கான், துருவ் ஜூரல், கேஎஸ் பரத், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<