மகளிர் T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு அடுத்த வெற்றிகள்

46

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் நேற்று (27) ஸ்கொட்லாந்தை எதிர்கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை அடுத்தடுத்த வெற்றிகளோடு தொடரில் முன்னேறுகின்றது.

T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி

மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை வீராங்கனைகளும், ஸ்கொட்லாந்தும் அபுதாபியில் வைத்து மோதியிருந்தன. குழு A அணிகளுக்கான இந்த மோதலில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீராங்கனைகள் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்தனர்.

பின்னர் நாணய சுழற்சிக்கு அமைய போட்டியில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 18.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 94 ஓட்டங்களை எடுத்தது. ஸ்கொட்லாந்து தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை லோர்னா ஜாக் 4 பௌண்டரிகளோடு 24 ஓட்டங்கள் எடுத்து பதிவு செய்தார். இலங்கை பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், இனோஷி பிரியதர்ஷினி 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 95 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை மகளிர் அணியானது போட்டியின் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி 10.1 ஓவர்களில் அடைந்தது. இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த வீராங்கனைகளில் சாமரி அத்தபத்து தன்னுடைய 10ஆவது T20I அரைச்சதத்துடன் ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 59 ஓட்டங்கள் எடுத்தார்.

போட்டியின் ஆட்டநாயகியாக கவீஷா டில்ஹாரி தெரிவாகினார். மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை அடுத்ததாக உகண்டாவை மே மாதம் 01ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து – 94 (18.1) லோர்னா ஜேக் 24, கவீஷா 4/13, இனோஷி 3/11, சுகந்திக்கா 2/27

 

இலங்கை – 95/0 (10.1) சாமரி அத்தபத்து 59*, விஷ்மி குணரட்ன 24*

 

முடிவு – இலங்கை 10 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<