பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் ஆதிக்கத்தை கைப்பற்றிய இலங்கை

The 98th National Athletics Championship - 2020

139

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) நிறைவுக்குவந்த 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட டில்ஷி குமாரசிங்க, கயன்திகா அபேரட்ன மற்றும் நிமாலி லியனாரச்சி ஆகிய மூவரும் ஆசிய தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர். 

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 21வயதான டில்ஷி ஷியாமலி குமாரசிங்க தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தேசிய மெய்வல்லுனரில் காலிங்க, நதீஷாவுக்கு இரட்டை தங்கம்: சப்ரினுக்கு பின்னடைவு

இப்போட்டியை 2 நிமிடங்கள் 02.80 செக்கன்களில் நிறைவு செய்த டில்ஷி, தேசிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மிக அருகாமையில் தவறவிட்டார்.

அதுமாத்திரமின்றி, அவருடன் போட்டியிட்ட தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான கயன்திகா அபேரட்ன, போட்டி சாதனைக்கு சொந்தக்காரரான நிமாலி லியனாரச்சி ஆகிய இருவரையும் டில்ஷி குமாரசிங்க வெற்றிகொண்டமை விசேட அம்சமாகும்.

இதன் மூலம் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாரச்சி, கயன்திகா அபேரட்ன ஆகியோர் செலுத்திவந்த ஆகதிக்கத்துக்கு டில்ஷி முற்றுப்புள்ளி வைத்தார்

இப் போட்டியில் நிமாலி லியனாரச்சி (2:03.20) வெள்ளிப் பதக்கத்தையும் கயன்திகா அபேரட்ன (2:03.20) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

Video – உபாதைகளால் மீளுமா இலங்கை அணி? |Sports RoundUp – Epi 142

இதுஇவ்வாறிருக்க, 2020ஆம் ஆண்டுக்கான பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த டில்ஷி குமாரசிங்க, ஆசியாவில் இவ்வருடத்தில் சிறந்த காலத்தைப் பதிவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பஹ்ரைன் வீராங்கனை நெலீ ஜெப்கொஸ்ஙி பதிவுசெய்த காலத்தை விட 0.73 செக்கன்கள் குறைவானதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த நிலையில், இவ்வருடத்தில் பெண்களுக்கான 800 மீற்றரில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்த வீராங்கனைகளில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களை கயன்திகா அபேரட்ன மற்றும் நிமாலி லியனாரச்சி ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டுள்ளனர்

இதனிடையே, பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.55 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை வென்ற அமாஷா டி சில்வா, பெண்களுக்கான 100 மீற்றர் ஆசிய தரப்படுத்தலில் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அனித்தாவின் தேசிய சாதனையை முறியடிப்பு: ஆஷிக்கிற்கு தங்கம்

2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவிற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியொன்றில் அதிசிறந்த நேரத்தை அமாஷா டி சில்வா இந்தப் போட்டியில் பதிவுசெய்ததுடன், இலங்கை வரலாற்றில் பெண்களுக்கான 100 மீற்றரில் பதிவுசெய்யப்பட்ட நான்காவது அதிசிறந்த காலமாகவும் அது பதிவாகியமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

இந்த நிலையில், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் (53.37 செக்.) தங்கப் பதக்கத்தை வென்ற நதீஷா ராமநாயக்க ஆசிய தரப்படுத்தலில் 8ஆவது இடத்தையும், பெண்களுக்கான 1500 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற கயன்திகா அபேரட்ன ஆசிய தரப்படுத்தலில் 10ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதுஇவ்வாறிருக்க, இத்தாலியில் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற குறுந்தூர நட்சத்திர வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டிப் பிரிவுக்கான ஆசிய தரப்படுத்தலில் 10.16 செக்கன்களுடன் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 400 மீற்றரில் தங்கப் பதக்கம் வென்ற காலிங்க குமாரகே, ஆசிய தரப்படுத்தலில் 9ஆவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தரங்க

இதுஇவ்வாறிருக்க, ஆண், பெண் இருபாலாருக்குமான 5000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் ஆசியாவில் முதல் 10 இடங்களை ஜப்பான் நாட்டு வீர, வீராங்கனைகள் தக்கவைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<