சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தரங்க

The 98th National Athletics Championship Day 3 Report - Tamil

141

ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டத்தில்  கடந்த இரண்டு வருடங்களாக தேசிய சம்பியனாக வலம்வந்த மலையக வீரரான குமார் சண்முகேஸ்வரன், இம்முறை நடைபெறும் 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி  இலங்கை விமானப் படையைச் சேர்ந்த .கே தரங்க தங்கப் பதக்கத்தை வென்று ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சம்பியனாகத் தெரிவாகினார்.  

இதனிடையே, இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வடக்கு மாகாணம் சார்பாக பங்குபற்றிய ஒரேயோரு வீரரான ஆர்.பி முருகைய்யா, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அனித்தாவின் தேசிய சாதனையை முறியடிப்பு: ஆஷிக்கிற்கு தங்கம்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் நாளான இன்று (28) திங்கட்கிழமை காலை முதலாவது போட்டியாக ஆண்களுக்கான 10,000  மீற்றர் நடைபெற்றது.

குறித்த போட்டியில் நடப்பு தேசிய சம்பியனான குமார் சண்முகேஸ்வரனுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வந்த .கே தரங்க, போட்டியை 30 நிமிடங்கள் 42.15 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதகத்தினை வென்றார்.

இதன்மூலம் சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தரங்க முற்றுப்புள்ளி வைத்தார்

கடந்த வருட இறுதியில் நேபாளத்தில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 10,000 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்ற சண்முகேஸ்வரன், இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டித் தூரத்தை 31 நிமிடங்கள் 07.53 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்

100 மீற்றரில் ஹிமாஷ, அமாஷா சம்பியன்

பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை ஹிமாஷ ஷான் பெற்றுக்கொண்டார். போட்டித் தூரத்தை அவர் 10.27 செக்கன்களில் நிறைவு செய்தார்

இப்போட்டியில் சனுக சந்தீப (10.49 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், வினோஜ் சுரன்ஜய டி சில்வா (10.50 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

இதேநேரம், தெற்காசியாவின் முன்னாள் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க மற்றும் நடப்பு தேசிய சம்பியனான லக்ஷிகா சுகன்தியை ஆகிய இருவரையும் பின்தள்ளி பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை இளம் வீராங்கனையான அமாஷா டி சில்வா பெற்றுக்கொண்டார்.  

200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் வென்ற சபான்! : சாரங்கி தேசிய சாதனை

குறித்த போட்டியை 11.55 செக்கன்களில் நிறைவுசெய்த அமாஷா டி சில்வா தங்கப் பதக்கத்தையும், ருமேஷிகா ரத்னாயக்க (11.88 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், பாத்திமா சபியா யாமிக் (12.05 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர் 

குறித்த போட்டியில் பங்குபற்றிய நடப்பு தேசிய சம்பியனான லக்ஷிகா சுகன்தி போட்டியை 12.06 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

முருகைய்யாவுக்கு மூன்றாமிடம்

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் நடப்பு தேசிய சம்பியன் மற்றும் தெற்காசியாவின் நடப்பு சம்பியனுமாகிய ஷா சந்தருவன், இம்முறை தேசிய மெய்வல்லுனரில் முதல் சுற்றோடு வெளியேறினார்.

இதன்படி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எஸ்.சி ஜனித் (4.70 மீற்றர்), எஸ். ஜயன்த (4.30 மீற்றர்), ஆர்.பி முருகைய்யா (4.30 மீற்றர்) ஆகிய மூவரும் முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வெற்றி கொண்டனர்

400 மீற்றர் தடைதாண்டல்

பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் இராணுவத்தைச் சேர்ந்த ஸ்யாமா துலானி (ஒரு நிமி. 02.90 செக்.) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 52.09 செக்கன்களில் நிறைவுசெய்த அசங்க ரத்னசேன முதலாம் இடத்தைப் பெற்றார்.

இதனிடையே, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் பாய்தலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சி.எல் மெண்டிஸ் (2.10 மீற்றர்) தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

ஒரு வருடத்தின் பின் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் போட்டிகள்

மறுபுறத்தில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தேசிய சம்பியனான இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நதீகா லக்மாலி (53.97 மீற்றர்) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்

அத்துடன், பெண்களுக்கான குண்டு போடுதலில் நடப்பு சம்பியனான தாரிக்கா பெர்னாண்டோ. 14.10 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்

இதுஇவ்வாறிருக்க, பெண்களுக்கான முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தை ஹசினி ப்ரபோதா பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 13.07 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்.

நாளை போட்டியின் நான்காவதும், கடைசியும் நாளாகும்

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<