தேசிய மெய்வல்லுனரில் வடக்கிற்கு பெருமை சேர்த்தவர்கள்

101st National Athletics Championship

122

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஞாயிற்றுக்கிழமை (30) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இம்முறை போட்டித் தொடரில் ஒரு இலங்கை சாதனையுடன், 4 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இந்த நிலையில், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக வட மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன், எஸ். மிதுன்ராஜ் மற்றும் என். டக்சிதா ஆகிய மூவரும் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். வீரர் அருந்தவராசா புவிதரன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கையின் நடப்புச் சம்பியன் சச்சின் எரங்க ஜனித், முன்னாள் சம்பியன் இஷார சந்தருவன் மற்றும் இந்தியாவின் நடப்புச் சம்பியன் சிவ சுபர்மணி ஆகியோர் களமிறங்கியிருந்தனர்.

இந்த 3 வீரர்களும் 4.90 மீட்டர் உயரத்தை பாய்ந்தபோதிலும் அவர்களது முயற்சிகளின் அடிப்படையில் முறையே முதல் 3 இடங்களைப் பெற்றனர்.

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான புவிதரன், தற்போது இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணிக்காக விளையாடி வருவதுடன், அவரது பயிற்சியாளராக கணாதீபன் செயல்பட்டு வருகின்றார்.

இதனிடையே, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மெய்வல்லுனர் சங்கம் சார்பில் போட்டியிட்ட நேசராசா டக்சிதா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியில் அவர் 3.60 மீட்டர் உயரத்தை தாவியிருந்தார்.

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான இவரும் கணாதீபனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆண்களுக்கான தட்டெறிதலில் இலங்கை இராணுவ மெய்வல்லுனர் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லிக் கல்லூரியைச் சேர்ந்த சுசீந்திரகுமார் மிதுன்ராஜ், 44.85 மீட்டர் தூரத்திற்கு தட்டை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் முதல் தடவையாகக் களமிறங்கிய அவருக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

தேசிய ரீதியிலான கனிஷ்ட மட்டப் போட்டிகளில் தட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டெறிதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி தொடர்ச்சியாக வெற்றிகளை ஈட்டிய மிதுன்ராஜ், இறுதியாக கடந்த மே மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்ற 63ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் சம்மட்டி எறிதல், தட்டெறிதல் மற்றும் குண்டெறிதல் ஆகிய 3 போட்டி நிகழ்ச்சிகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதில் தட்டெறிதல் போட்டி நிகழ்ச்சியில் 2010இல் இலங்கை இராணுவ வீரர் சரித் கப்புகொட்டுவவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 42.64 மீட்டர் என்ற போட்டிச் சாதனையை 13 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன்ராஜ் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவருக்கு ஹார்ட்லி கல்லூரியின் மைதான நிகழ்ச்சிக்கான பயிற்சியாளரான ஹரிஹரன் பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சபியாவிற்கு இரட்டைப் பதக்கம்

பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் பங்குகொணட் சபியா யாமிக், வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தார்.

இவர் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 11.92 செக்கன்களில் நிறைவுசெய்ததுடன் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 24.63 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

சப்ரின், ஆஷிக்கிற்கு ஏமாற்றம் 

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் முன்னாள் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட்டுக்கு 4ஆவது இடத்தையும், தட்டெறிதலில் முன்னாள் தேசிய சம்பியனான இஸட்.ரி.எம் ஆஷிக்கிற்கு 6ஆவது இடத்தையுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதனிடையே, கடந்த காலங்களில் தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளை ஈட்டி வந்த சில வீரர்களுக்கு இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பிரகாசிக்க முடியாமல் போனது.

ஆண்களுக்கான 200 மீட்டரில் மொஹமட் சபான் 4ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 100 மீட்டரில் பாசில் உடையார் 5ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 800 மீட்டரில் அரவிந்தன் 5ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் பி.எம் நௌஷாத் 7ஆவது இடத்தையும், ஆண்களுக்கான சம்மெட்டி எறிதலில் ஜி.எப் ஹாஸிம் 6ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் சிவராஜன் 6ஆவது இடத்தையும், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டரில் வக்ஷான் மற்றும் மகேந்திரன் கோபிநாதன் ஆகிய இருவரும் முறையே 5ஆவது மற்றும் 9ஆவது இடங்களையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.

அதேபோல, ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கே. எல்ரோய் மற்றும் எம்.ஐ.எம் அஸான் ஆகிய இருவரும் முறையே 7ஆவது மற்றும் 8ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 >>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<