2022ஆம் ஆண்டு IPL பிளே ஒப் சுற்று வாய்ப்பை பெற்ற அணிகள் எவை?

352

டெல்லி கெபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான 2022ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரின் 69ஆவது போட்டியினை தொடர்ந்து, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2022 ஆம் ஆண்டு IPL தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகும் நான்காவது அணியாக மாறியிருக்கின்றது.

>>பங்களாதேஷ் அணியிலிருந்து விலகும் முஷ்பிகூர் ரஹீம்

குஜாராத் டைடன்ஸ் (20 புள்ளிகள்), ராஜாஸ்தான் ரோயல்ஸ் (18 புள்ளிகள்) மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் (18 புள்ளிகள்) ஆகிய அணிகள் ஏற்கனவே IPL தொடரின் புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்றதனைத் தொடர்ந்து, தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகிய முதல் மூன்று அணிகளாக மாறியிருந்தன.

இந்த நிலையில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு 16 புள்ளிளுடன் தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு செல்லும் நான்காவது அணியாக மாறுவதற்கான வாய்ப்பு காணப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக ரிசாப் பாண்ட் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ் அணி சிறந்த ஓட்டவீதத்தினை (Net Run Rate) கொண்டிருந்த காரணத்தினால் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியினை வெற்றி கொள்ளும் பட்சத்தில், பிளே ஒப் சுற்று செல்வதற்கான அதிக வாய்ப்பினைக் கொண்ட அணியாக காணப்பட்டிருந்தது.

எனினும் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியினைத் தழுவிய டெல்லி கெபிடல்ஸ் அணி, தொடரில் தமது அனைத்துப் போட்டிகளிலும் 7 வெற்றிகளை மாத்திரம் பதிவு செய்து 14 புள்ளிகளுடன், தொடரின் பிளே ஒப் சுற்றில் ஆடுகின்ற வாய்ப்பினை இழந்திருக்கின்றது.

>>பங்களாதேஷ் அணியிலிருந்து விலகும் முஷ்பிகூர் ரஹீம்

மறுமுனையில், 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் 8 போட்டிகளில் வெற்றியினைப் பதிவு செய்து 16 புள்ளிகளுடன் காணப்படும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தொடரின் பிளே ஒப் சுற்றில் விளையாடும் வாய்ப்பினை நான்காவது அணியாக பெற்றுக் கொள்கின்றது.

இதேவேளை IPL தொடரின் கடைசி லீக் போட்டியானது இன்று (22) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதாரபாத் அணிகள் இடையே மும்பையில் நடைபெறுகின்றது.

பிளே ஒப் சுற்று அட்டவணை

குவாலிபையர் 1 – குஜாராத் டைடன்ஸ் எதிர் ராஜாஸ்தான் ரோயல்ஸ் – மே 24 – கொல்கத்தா

எலிமினேட்டர் – லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் எதிர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – மே 25 – கொல்கத்தா

குவாலிபையர் 2 – எலிமினேட்டார் வெற்றி அணி எதிர் குவாலிபையர் 1 தோல்வி அணி – மே 27 – அஹமதாபாத்

இறுதிப் போட்டி – குவாலிபையர் 1 வெற்றி அணி எதிர் குவாலிபையர் 2 வெற்றி அணி – மே 29 – அஹமதாபாத்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<