101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் அடுத்த வாரம் கொழும்பில்

101st National Athletics Championship

108

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 101வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிலிருந்து 2 அஞ்சலோட்ட அணிகளுடன் 28 பேர் கொண்ட அணியொன்று பங்குபற்றவுள்ளதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார். 

101வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஜுலை 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்முறை போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியிலிருந்து 750 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

அதேபோல, இந்தியா மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து 2 அணிகள் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

101வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி வெளிப்படுத்திய திறமைகள், முன்னேற்றம் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று (20) கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் அதிகாரிகள், அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், அடுத்த வார இறுதியில் நடைபெறவுள்ள 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் குறித்து மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை நடைபெறவுள்ள 101ஆவது தேசிய மெய்வல்லுனர்; சம்பியன்ஷிப் தொடருக்கு இந்தியாவில் இருந்து 28 வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இதில் 2 அஞ்சலோட்ட அணிகள் மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களும் அடங்குவர்.

மேலும், மாலைதீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அணியொன்றும் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளது. அதேபோல ஜப்பான் அஞ்சலோட்ட அணியொன்றை இணைத்துக்கொள்ள திட்டமிட்டோம். ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த திட்டங்களை கைவிட வேண்டியதாயிற்று.

மேலும், ஒக்டோபர் மாதம் இந்தியாவின் ராஞ்சியில் நடைபெறவுள்ள தெற்காசிய சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான தெரிவுப் போட்டியாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

இதனிடையே, சீனாவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் விழவில் பங்குபற்றவுள்ள இலங்கை மெய்வல்லுனர் அணி ஏற்கனவே பெயரிடப்பட்டுள்ளதாகவும், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் வெளிப்படுத்துகின்ற திறமைகளின் அடிப்படையில் இறுதி அணி தெரிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணி விரர்கள் வெளிப்படுத்திய திறமைகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட எமது வீரர்கள் சாதனைகளை படைத்து பதக்கங்களை குவித்தனர். இந்த போட்டித் தொடருக்காக சிறந்த முறையில் தயாரிகினோம். இதனால் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கங்களையும் வெல்கின்ற வாய்ப்பு எமக்கு கிடைத்தது.

எனவே, எதிர்காலத்தில் எமது வீரர்கள் இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தினால் இன்னும் நல்ல பலன்களைப் பெறலாம். எம்மிடம் தற்போது பல திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களை சரியான முறையில் வழிநடத்தி முன்னோக்கிச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<