சமரி, ஓசதியின் பிரகாசிப்புகளுடன் இலங்கைக்கு இலகு வெற்றி

Bangladesh women's tour of Sri Lanka 2023

162

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியனை பதிவுசெய்துள்ளது.

முதலிரண்டு போட்டிகளும் மழைக்காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாவது போட்டியை இலங்கை கிரிக்கெட் சபை மீண்டும் நடத்த தீர்மானித்திருந்தது. அதன்படி நடைபெற்ற இந்தப் போட்டியில் அணித்தலைவி சமரி அதபத்து மற்றும் ஓசதி ரணசிங்க ஆகியோரின் பிரகாசிப்புகளுடன் இலங்கை மகளிர் அணி இலகுவாக வெற்றிபெற்றது.

அதிரடி துடுப்பாட்டத்துடன் பஞ்சாபை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியானது மழைக்காரணமாக சற்று தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், அணிக்கு தலா 30 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த இலங்கை மகளிர் அணிக்கு சமரி அதபத்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். இவர் 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவரைத்தொடர்ந்து ஹர்சிதா மாதவி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும், கவீஷா டில்ஹாரி 15 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கலாக 25 ஓட்டங்களை பெற, இலங்கை மகளிர் அணி 30 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் சுல்தான் கடுன் 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை சாய்த்தார்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி மந்தமான ஓட்டவேகத்துடன் ஓட்டங்களை பெறத்தொடங்கியது. மறுபக்கத்தில் இலங்கை மகளிர் அணி சார்பில் ஓசதி ரணசிங்க அற்புதமாக பந்துவீசினார்.

பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மத்தியவரிசையில் நிகார் சுல்தானா 37 ஓட்டங்களையும், பர்காானா சுல்தான் 24 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பங்களாதேஷ் அணி 30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் பிரகாசித்திருந்த ஓசதி ரணசிங்க 6 ஓவர்கள் பந்துவீசி 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

இலங்கை மகளிர் மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<