பார்சிலோனாவுக்கு விடை கொடுக்கும் சுவாரெஸ், விடால்; மொராட்டா புதிய அணியில்

195
 

பார்சிலோனா அணியின் முன்னணி வீரரான லுவிஸ் சுவாரெஸ், லா லிகா போட்டி அணியான அட்லெடிகோ மெட்ரிட்டில் இணைவதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பார்சிலோனாவில் மற்றொரு முன்னணி வீரர் ஆர்டுரோ விடால் இத்தாலியின் இன்டர் மிலான் கழகத்திற்கு நிரந்தரமாகச் செல்கிறார். 

மெஸ்ஸியின் நண்பரான சுவாரெஸ் பார்சிலோனாவுக்கு தேவை இல்லை என்ற நிலையில் அவரை சுதந்திரமாக விடுவிப்பதற்கு அந்த அணி விருப்பத்தை வெளியிட்டுள்ளது. எனினும், குறிப்பிட்ட முன்னணி கழகங்களில் இணைவதை தவிர்க்கும் வகையிலேயே அவரை விடுவிப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. 

பேல், தியாகோ புதிய அணிகளில்

உருகுவேயின் சுவாரெஸ் ஆரம்பத்தில் இத்தாலியின் ஜுவன்டஸ் அணியுடன் இணைய முயன்றபோதும் கடவுச்சீட்டு விவகாரம் காரணமாக அது தோல்வி அடைந்தது. இந்நிலையில் சம்பளம் குறைக்கப்பட்டே அவர் அட்லடிகோவில் இணையவுள்ளார். 

ஸ்பானிய போட்டி அணி ஒன்றுக்கு சுவாரஸை விற்க விரும்பாத பார்சிலோனா தலைவர் ஜோசெப் பார்டோமியு, முன்னர் அந்த உடன்படிக்கையை தடுத்தார். எனினும் சுவாரெஸ் பிரதிநிதிகளுடன் சந்திப்பை ஏற்படுத்திய அவர் பின்னர் அதற்கு இணங்கியுள்ளார்.

இதன்படி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தகுதி போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 33 வயதுடைய சுவாரெஸுக்கு 4 மில்லியன் யூரோவுக்கும் குறைவான பெயரளவுக் கட்டணம் ஒன்றை அட்லடிகோ வழங்கும். 

அவர் பார்சிலோனாவில் இருந்தபோது பெற்ற 30 மில்லியன் யூரோவில் பாதியையே அட்லடிகோவில் ஈட்டவுள்ளார். 

இந்த நகர்வு மூலம் பார்சிலோனாவின் ஒரு முன்கள வீரராக தனது ஆறு ஆண்டு பயணத்தை சுவாரெஸ் முடித்துக் கொள்ளவுள்ளார். அவர் அந்த அணிக்காக 283 போட்டிகளில் ஆடி 198 கோல்களை பெற்றுள்ளார். முன்னார் பார்சிலோனாவின் ஆபத்து மிக்க மூன்று முன்கள வீரர்களில் மெஸ்ஸி மற்றும் நெய்மருடன் சுவாரெஸும் இருந்தார். 

கொரோனா அச்சத்தால் 37 கோல்களை விட்டுக்கொடுத்த ஜெர்மனி அணி

லிவர்பூல் கழகத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டு 74 மில்லியன் பௌண்ட் தொகைக்கே அவர் பார்சிலோனாவில் இணைந்தார். பார்சிலோனா நான்கு லா லிகா கிண்ணங்கள், நான்கு கோபா டெல் ரேய் மற்றும் 2015இல் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் மற்றும் கழக உலகக் கிண்ணங்களை வெல்ல சுவாரெஸ் பங்காற்றியுள்ளார்.   

மறுபுறம் பார்சிலோனாவில் இருந்து விடாலை ஒரு மில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் இன்டர் மிலான் வாங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த 33 வயதுடைய விடால் அந்த அணிக்காக 96 போட்டிகளில் விளையாடி 11 கோல்களை பெற்றதோடு, 2018ஆம் ஆண்டு லா லிகாவை வெல்லவும் பார்சிலோனாவுக்கு பங்காற்றினார்.  

சர்வதேச கால்பந்து உலகில் மற்றொரு முக்கிய வீரர் பரிமாற்றமாக அட்லெடிகோ மெட்ரிட் முன்கள வீரர் அல்வாரோ மொராட்டா இத்தாலியின் ஜுவன்டஸ் கழத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார். 2020/21 பருவம் முடியும் வரை ஒரு தற்காலிக ஒப்பந்தமாகவே அவர் ஜுவன்டஸுடன் இணைகிறார். 

Video –வெற்றிகளுடன் இந்த பருவத்தை ஆரம்பித்த நடப்பு சம்பியன்கள்! | FOOTBALL ULAGAM

இதற்கு முன்னர் 2014-2016 காலப்பகுதியிலும் மொராட்டா ஜுவன்டஸுடன் தற்காலிகமாக இணைந்து வெற்றிகரமாக 27 கோல்களை பெற்றதோடு அதில் 2015இல் பார்சிலோனா அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியிலும் அவர் ஜுவன்டஸ் சார்பில் ஆடியமை குறிப்பிடத்தக்கது.   

ஜுவன்டஸ் கழகம் முன்னதாக பார்சிலோனாவின் லுவிஸ் சுவாரெஸ் மற்றும் ரோமா அணியின் எடின் ட்செகோவை இணைக்க முயன்றபோதும் அந்த இரு முயற்சிகளும் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.     

எனினும் மொராட்டா வலுவான முன்கள வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் பவுலோ டிபாலாவுடன் ஜுவன்டஸில் ஆடவுள்ளார். ஜுவன்டஸ் தொடர்ச்சியாக பத்தாவது முறை சீரி A கிண்ணத்தை வெல்ல எதிர்பார்த்துள்ளது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<