இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி இன் 12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் தேர்வுக் குழுவினால் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட உத்தேச இலங்கை குழாத்தை மேலதிக நான்கு வீரர்களுடன் சேர்த்து பெயரிடுவதற்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான Thepapare.com நடவடிக்கை எடுத்துள்ளது.

கேள்விக்குறியாகும் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்…

பத்து நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி மாத்திரமே உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இறுதி பதினொரு பேரையும் தேர்வு செய்வதில் குழப்பத்தை சந்தித்துள்ளது. எனினும், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் ஸ்கொட்லாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளின் பிறகு இதற்கான இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் அந்த அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி வீரர்களின் ஓய்வும், காயங்களும், புதுமுக வீரர்களின் தடுமாற்றமும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த இரண்டு வருடங்களாக தொடர் சறுக்கலை ஏற்படுத்தியிருந்தது. அதுமாத்திரமின்றி, இந்த வருடத்தில் விளையாடிய எட்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. அத்துடன், 2015 நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு 84 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 23 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதுடன், 55 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. அதிலும், ஐந்து போட்டிகளில் எந்தவொரு முடிவும் கிடைக்கிவில்லை.

அதிலும் குறிப்பாக, இலங்கை அணி கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மாத்திரமே வெற்றியைப் பெற்றுக்கொண்டது.

அந்தவகையில், உலகக் கிண்ணப் போட்டிகள் மே மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதால் அதில் பங்கேற்கவுள்ள வீரர்களை ஒவ்வொரு நாடுகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதிக்கு முன் அறிவிக்க வேண்டும். எனவே உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இறுதி அணியை தேர்வு செய்வதில் ஒவ்வொரு நாடுகளும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை தெரிவுசெய்வதற்கும், இலங்கை அணியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பெரும்பாலான தேசிய வீரர்கள் பங்குபற்றியிருந்த இம்முறை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (11) கண்டியில் நடைபெற்றது. இதில் லசித் மாலிங்க தலைமையிலான காலி அணியும், தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. எனினும், சீரற்ற காலநிலையால் போட்டி தடைப்பட இறுதியில் இரண்டு அணிகளுக்கும் இணை சம்பியன் பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்ளூரில் பிரகாசித்த இவர்களுக்கு உலகக் கிண்ண வாய்ப்பு கிடைக்குமா?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில்…

எனினும், உலகக் கிண்ணத்தில் விளையாடலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் இப்போட்டித் தொடரில் பிரகாசிக்கவில்லை. அதிலும் குறிப்பாக இந்தத் தொடரில் 3 சதங்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்த முடிவுகள் தேர்வாளர்களுக்கு பதில் கொடுப்பதை மேலும் பல கேள்விகளையே ஏற்படுத்திக் கொடுத்தது. எனவே மாகாண ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்ற நான்கு அணிகளையோ அல்லது அதில் ஒருசில வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகளையோ மாத்திரம் கருத்திற் கொண்டு உலகக் கிண்ணத்துக்கான அணித் தேர்வு இடம்பெறாது என்பது உறுதி.

எனவே, ThePapare.com இனால் அறிவிக்கப்பட்டுள்ள உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இந்த குழாமனாது சிரேஷ்ட வீரர்களின் அனுபவம், அணி ஒருங்கிணைப்பு, காயங்கள் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்

ஒருநாள் போட்டிகளில் வழமையாக களமிறங்குகின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களையோ அல்லது சிறப்பான ஆரம்பத்தைப் பெற்று சதமடிக்க தவறுகின்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இம்முறை உலகக் கிண்ண அணியில் இருந்து நீக்கிவிட்டு புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை களமிறக்குவதற்கு  தேர்வாளர்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளனர்.

அண்மையில் இலங்கை ஒருநாள் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்ட விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல, கடந்த காலங்களில் நடைபெற்ற எந்தவொரு தொடரிலும் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரிலும் அவரால் பிரகாசிக்க முடியாமல் போனது. எனவே இம்முறை உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் அவர் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

இதேநேரம், இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்ன, கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த காரணத்தால், நிச்சயம் உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு இலங்கைக்காக எந்தவொரு ஒருநாள் போட்டியிலும் விளையாடாத அவர், மீண்டும் உலகக் கிண்ணப் போட்டிகளில் களமிறங்குவதற்கு தயாராக உள்ளார்.

தலைமை கிடைக்காவிட்டால் உலகக் கிண்ணத்திற்கு முன் ஓய்வுபெற தயாராகும் மாலிங்க

எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டியில்…

உபாதைக்குள்ளாகியுள்ள குசல் ஜனித் பெரேரா தற்போது குணமடைந்து வருகின்ற காரணத்தால், நிச்சயம் உலகக் கிண்ண இலங்கை குழாத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாத்திரமல்லாது விக்கெட் காப்பாளராகவும் செயற்படுகின்ற அவருக்கு, உலகக் கிண்ண அணியில் எந்தவொரு தடையுமின்றி இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், அவரை உலகக் கிண்ண அணியில் இடம்பெறச் செய்தவதற்கு தேர்வாளர்கள் மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். ஏனெனில் அவர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் உபாதையிலிருந்து பூரண குணமடைந்தவிடுவாரா என்பது சந்தேகம் தான்.

இதேவேளை, இறுதி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அணியில் இணைந்துகொள்ள அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது. இதில் அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் தனுஷ்க குணதிலக்கவினால் பிரகாசிக்க முடியாமல் போனது. எனவே, அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அவிஷ்க பெர்னாண்டோவுக்கு இம்முறை உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய வரிசை

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் மத்திய வரிசையில் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருந்த ஓஷத பெர்னாண்டோவுக்கு, அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஆனால், புதுமுக வீரராக இருந்தாலும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பயப்படாமல் துடுப்பெடுத்தாடுகின்ற ஓஷத பெர்னாண்டோவை உலகக் கிண்ண இலங்கை அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற நிரோஷன் திக்வெல்லவுக்குப் பதிலாக தினேஷ் சந்திமாலை மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ள தேர்வாளர்கள் அவதானம் செலுத்தலாம். இலங்கை அணி, இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இதில் இலங்கை அணியை தினேஷ் சந்திமால் வழிநடத்தியிருந்தார். எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் அவர் விக்கெட் காப்பாளராக செயற்பட்டு துடுப்பாட்டத்தில் 3 ஆவது அல்லது 4 ஆவது இடத்தில் களமிறங்க வேண்டும்.

உலகக் கிண்ண வீரர்கள் குழாத்தினை அணிகள் எப்போது அறிவிக்கும்?

அடுத்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள…

அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணிக்குத் தேவை என தேர்வாளர்கள் குறிப்பிட்டதன் பிரகாரம், சந்திமால் கட்டாயம் உலகக் கிண்ண அணியில் இடம்பெற வேண்டும். ஆனால் அவர் இறுதி பதினொருவர் அணியில் சேர்க்கப்பட வேண்டுமா என்பது போட்டியைப் பொறுத்து தீர்மானிக்கலாம்.

இம்முறை மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் லஹிரு திரிமான்ன சதமடித்து அசத்தினார். தாமதமாகி அவ்வாறு திரமான்ன துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். எனினும், அவரை உலகக் கிண்ண அணியில் சேர்க்க நேரிட்டால் அணியில் மற்றுமொரு முன்னணி வீரரை நீக்க வேண்டிவரும்.

இதேநேரம், மத்திய வரிசையில் குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் களமிறங்கவுள்ளனர். இதில் உபாதையிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள மெதிவ்ஸ், மத்திய வரிசையில் களமிறங்குவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பலத்தை கொடுக்கும். அத்துடன், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் 3 ஆவது இடத்துக்காக நடைபெற்ற போட்டியில் மெதிவ்ஸ் சதமடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேகப் பந்துவீச்சாளர்கள்

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கையின் வேகப் பந்துவீச்சை பலப்படுத்துவதற்கு முன்னணியில் இருக்கின்ற வீரர்கள் யார் என்பதில் சந்தேகம் இல்லை. லசித் மாலிங்க தனது நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளார். அவரது அனுபவம், திறமை, நுணுக்கம் மற்றும் பந்துவீசும் திறன் ஆகியவை இலங்கை அணிக்கு மிகப் பெரிய சாதகத்தைப் பெற்றுக்கொடுக்கும்

மாலிங்கவுக்கு உதவுவதற்கு அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளரான சுரங்க லக்மாலும் தயாராக உள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் பந்தை ஸ்விங் செய்கின்ற திறமை அவருக்கு உண்டு. ஆனால், இறுதி பதினொருவர் அணியில் இடம்பெறுவதற்கு அவருக்கு போராட வேண்டிவரும்.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த இசுரு உதானவும் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுக்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்குவார்.

வேகப்பந்து வீச்சாளரும், சகலதுறை ஆட்டக்காரருமான திசர பெரேரா, இம்முறை உலகக் கிண்ணத்தில் 6 முதல் 8 ஓவர்கள் வரை பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுவதால் அடுத்த சில வாரங்களில் தனது பந்து வீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, இசுரு உதானவுடன் இணைந்து போட்டியின் இறுதி ஓவர்களில் அதிரடியாக துடுப்பெடுத்தாடி அணிக்கு ஓட்டங்களைப் பெற்றுக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீர விளையாட்டின் பின் மீண்டும் மும்பை அணியில் இணையும் மாலிங்க

இலங்கையில் நடைபெற்ற சுபர் ப்ரொவின்சியல்…

இதேநேரம், வேகப் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்கு மேலதிகமாக துஷ்மன்த சமீர அல்லது நுவன் பீரதீப் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். குறித்த இரு வீரர்களும் உபாதைகளிலிருந்து பூரண குணமடைந்து அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியிருந்தனர். எனினும், நுவன் பீரதீப்பை விட சமீரவுக்கு வேகமாகவும், பவுண்சர் பந்துகளையும் வீச முடியும் என்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காலம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுழல் பந்துவீச்சாளர்கள்

ஐ.சி.சி இன் விதிமுறைகளை மீறி பந்துவீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டு போட்டித் தடைக்குள்ளாகிய அகில தனன்ஞய, மீண்டும் தனது பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரில் களமிறங்கியிருந்தார். எனினும், அவருக்கு குறித்த தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க முடியாமல் போனது. ஆனால் அவருடைய வேறுபட்ட பந்துவீச்சு நுணுக்கங்கள் இங்கிலாந்து ஆடுகளங்களில் பயனுள்ளதாக இருக்கும் என தேர்வாளர்கள் சிந்திக்கலாம். அதேபோல, தனன்ஞய டி சில்வாவுக்கும் ஒரு சுழல் பந்துவீச்சாளராக மிக முக்கிய பங்கு வகிக்க முடியும்.

இதேநேரம், மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளராக அணியில் இடம்பெறுவதற்கு ஜீவன் மெண்டிஸ், லக்‌ஷான் சந்தகன் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகின்றது. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலான அணிகள் எதிணியின் மத்திய வரிசையை கட்டுப்படுத்துவதற்கு பொதுவாக மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தி வருகின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணி அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இதில் குறிப்பாக லக்‌ஷான் சந்தகனுக்கு வழங்கப்பட்ட பல வாய்ப்புகளை அவர் வீணடித்துவிட்டார். அதேபோல மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்த ஜீவண் மெண்டிஸ் 3 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். அதேபோல துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்த ஜீவன் மெண்டிஸை உலகக் கிண்ணப் குழாத்தில் இணைத்துக் கொள்வது குறித்து தேர்வாளர்கள் சிந்திக்க வேண்டும். இலங்கை அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவராக உள்ள ஜீவன் மெண்டிஸ், இங்கிலாந்தின் டேர்பர்ஷயார் அணிக்காக விளையாடிய அனுபவத்தையும் கொண்டவராவார். எனவே அவருடைய அனுபவம் இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு பயனுள்ளதாக அமையும்.  

மேலும், தென்னாபிரிக்க அணியுடனான டி-20 தொடரில் சிறப்பாக விளையாடியிருந்த ஜெப்ரி வெண்டர்சேவுக்கும் உலகக் கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம்.

உலகக் கிண்ணத்தை வெல்ல கொக்கா கோலாவுடன் கைகோர்க்கும் இலங்கை

இலங்கை அணி வீழ்ச்சி அடையும்போது…

இறுதியாக தலைவர் பதவி…

உலகக் கிண்ணத்துக்கு இன்னும் 2 மாதங்கள் எஞ்சியிருக்க, உலகக் கிண்ண அணித் தலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் தேர்வு குழு எண்ணியுள்ளது. அதன்படி, திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க அல்லது அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய மூவரில் ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் லசித் மாலிங்கவும் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், இதில் எவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும், இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகவும் நிதானத்துடனும், புத்திசாதூர்யத்துடனும் யோசித்து செயற்பட வேண்டிவரும்.

ஐ.சி.சி இனால் நடத்தப்படுகின்ற எந்தவொரு போட்டித் தொடராக இருந்தாலும், இலங்கை அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும் அணியாக இருந்துள்ளது. இதற்கு கடந்தகால உலகக் கிண்ணப் போட்டிகள் நல்ல உதாரணங்களாகும். ஆனால், இம்முறை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கு இலங்கை அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற வேண்டும்.  

எனவே, இலங்கை கிரிக்கெட்டை நேசிக்கின்ற ரசிகர்களாக உங்களுக்கும் இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை தெரிவு செய்வதற்கான அரிய வாய்ப்பை ThePapare.com ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அதற்காக நீங்கள் cwc19.thepapare.com இணையத்தளத்துக்குச் சென்று உங்களது உலகக் கிண்ண இலங்கை அணியை தெரிவுசெய்யுங்கள்.

ThePapare.com இன் உலகக் கிண்ண உத்தேச அணி விபரம்

லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், திமுத் கருணாரத்ன, தினேஷ்சந்திமால், குசல் ஜனித் பெரேரா, தனன்ஞய டி சில்வா, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ், திசர பெரேரா, இசுரு உதான, சுரங்க லக்மால், துஷ்மன்த சமீர, ஓஷத பெர்னாண்டோ, அகில தனன்ஞய

மேலதிக வீரர்கள் விபரம்

தனுஷ்க குணதிலக்க, நுவன் பிரதீப், கமிந்து மெண்டிஸ், லக்‌ஷான் சந்தகன்

இலங்கை அணியின் போட்டி அட்டவணை

  • ஜுன் 01 – நியூசிலாந்து – கார்டிப்
  • ஜுன் 04 – ஆப்கானிஸ்தான் – கார்டிப்
  • ஜுன் 07 – பாகிஸ்தான் – பிரிஸ்டெல்
  • ஜுன் 01 – பங்களாதேஷ் – பிரிஸ்டெல்
  • ஜுன் 01 – அவுஸ்திரேலியா – தி ஓவெல்
  • ஜுன் 01 – இங்கிலாந்து – லீட்ஸ்
  • ஜுன் 01 – தென்னாபிரிக்கா – செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
  • ஜுன் 01 – மேற்கிந்திய தீவுகள் – செஸ்டர் லீ ஸ்ட்ரீட்
  • ஜுன் 01 –இந்தியா – லீட்ஸ்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<