கொரோனா அச்சத்தால் 37 கோல்களை விட்டுக்கொடுத்த ஜெர்மனி அணி

212
Socially distanced

ஜெர்மனியில் கீழ் நிலை லீக் கால்பந்து அணியான ரிப்டோப், கொரோனா வைரஸ் தொற்றுக்கான சமூக இடைவெளியை பேணி ஏழு வீரர்களுடன் கால்பந்து போட்டியில் ஆடியதால் எதிரணிக்கு 37 கோல்களை விட்டுக்கொடுத்து படு தோல்வி அடைந்துள்ளது. 

உயெல்சன் நகரைச் சேர்ந்த ரிப்டோப் அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நகரின் போட்டி அணியான ஹோல்டன்ஸ்டட் கழகத்தை எதிர்கொண்டது. ஜெர்மனி கால்பந்தின் கீழ் நிலை லீக்கான கிரைஸ்லிகா தொடருக்காகவே இந்த இரு அணிகளும் மோதிக்கொண்டன. 

>> 43 வயதிலும் கால்பந்து ஆடும் பிரேசில் வீரர்

என்றாலும் ஹோல்டன்ஸ்டட் அணி ஆடிய முந்தைய போட்டியில் எதிரணி வீரர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகி இருந்தது. இதனால் ஹோல்டன்ஸ்டட் அணி வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு எவருக்கும் நோய் தொற்றவில்லை என்பது உறுதியானது.  

ஆனால் 14 நாள் நோய் தொற்றுக் காலம் பூர்த்தியாகாததால் ரிப்டொப் வீரர்கள் ஹோல்டன்ஸ்டட் அணியுடன் விளையாட பயப்பட்டார்கள். இதனால் போட்டியை ஒத்திவைக்க நாம் கடுமையாக முயன்றாலும் ஹோல்டன்ஸ்டட் அணி போட்டியில் ஆடுவதில் உறுதியாக இருந்ததாக ரிப்டொப் கழகத்தின் இணைத்தலைவர் பட்ரிக் ரிஸ்டோவ் தெரிவித்தார்.   

இதனால் கொரோனா அச்சம் காரணமாக ரிப்டொப் அணியின் பல வீரர்களும் போட்டியில் பங்கேற்பதில் தயக்கம் காட்டினார்கள். எவ்வாறாயினும் கால்பந்து போட்டி ஒன்றில் விளையாடுவதற்கு தேவையான குறைந்த பட்சம் ஏழு வீரர்களை திரட்டுவதற்கு ரப்டோப் அணியினால் முடிந்தது. 

>> நெய்மார் உட்பட பலருக்கு போட்டித் தடை

‘போட்டியில் ஆடுவதற்கு சுயமாக முன்வந்ததற்காக நாம் அந்த ஏழு வீரர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இல்லாவிட்டால் போட்டியை கைவிட்டதற்காக 200 யூரோ அபராதம் செலுத்த வேண்டி ஏற்பட்டிருக்கும்’ என்று ரிஸ்டோவ் கூறினார். ‘இந்தப் பெருந்தொற்றுக்கு இடையே அது எமக்கு பெரும் தொகை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.  

எனினும், போட்டி ஆரம்பித்த போது மைதானத்திற்கு வந்த ரிப்டோப் அணி வீரர்களில் ஒருவர் பந்தை எதிரணி பக்கமாக உதைத்து விட்டு தொடர்ந்து ஆடாமல் ஒதுங்கிக்கொண்டார்கள்.     

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹோல்டன்ஸ்டட் அணியினர் கோல் மழை பொழிய ஆரம்பித்தனர். என்றாலும் விளையாட்டுத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று ரிப்டோப் அணித் தலைவருக்கு நடுவர் மஞ்சள் அட்டை காட்டினார்.

‘ஹோல்டன்ஸ்டட் அணி வீரர்களுக்கு நிலைமை புரியவில்லை. ஆனால் நாம் எந்த ஆபத்துக்கும் முகம்கொடுக்க விரும்பவில்லை. அந்தப் போட்டி முழுவதும் வீரர்கள் மைதானத்தில் இருந்தபோதும் வெறுமனே அங்கு நின்றுகொண்டிருந்தார்கள்.

>> Video – PSG இற்கு சண்டையுடன் மோசமான சாதனை ! | FOOTBALL ULAGAM

அவர்கள் எதிரணி வீரர்களுடன் இரண்டு மீற்றர் இடைவெளியை தக்கவைத்துக் கொண்டு சமூக இடைவெளி விதியை பின்பற்றியதோடு நேரடியாக மோதிக்கொள்ளவில்லை’ என்று ரிப்டோப் கழக இணைத் தலைவர் கூறினார். 

இதனால் ஹோல்டன்ஸ்டட் அணி ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு கோல் வீதம் போட்டது. ‘இந்தப் போட்டியை நிறுத்துவதற்கு எந்த அடிப்படையும் இல்லை’ என்று போட்டிக்குப் பின் ஹோல்டன்ஸ்டட் பயிற்சியாளர் ப்ளோரியன் ஸ்கீர்வோடர் குறிப்பிட்டார். 

எனினும், இந்தப் போட்டி தேசிய மற்றும் சர்வதேச அளவில் அவதானத்தை பெற்றுள்ளது. போட்டியை தாம் கேலிக்கூத்தாகப் பார்க்கவில்லை என்று ரிஸ்டோவ் தெரிவித்தார். 

‘கொரோனா தொற்றுக்கு மத்தியில் அது 22 பேருக்கு தொற்ற வாய்ப்பு இருந்தது. இதற்கு சிறந்த தீர்வு இருக்கவில்லை. இதில் இருந்து நாம் வெளிவர விரும்புகிறோம்’ என்றும் அவர் கூறினார்.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<