உலக சாதனையுடன் நேபாளத்தை அபாரமாக வெற்றி கொண்ட இலங்கை மகளிர் அணி

3669
Women's T20 Asia Cup - Sri Lanka v Nepal

தமது பந்து வீச்சில் முழு திறமையினையும் வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி, சர்வதேச  டுவென்டி – 20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த மொத்த ஓட்ட எண்ணிக்கைக்குள் ஒரு அணியினை மடக்கி புதிய உலக சாதனையினை பதிவு செய்துள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்று வரும், மகளிர் அணிகளிற்கு இடையிலான ஆசிய கிண்ண T20 சம்பியன்சிப் தொடரில் இன்றைய போட்டியில் இலங்கை மகளிர் அணி மற்றும் நேபாள மகளிர் அணிகள் மோதின. இதில், 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று இத்தொடரில் தமது முதல் வெற்றியினை இலங்கை மகளிர் அணி சுவைத்துள்ளது.

இன்று பெங்கொக் நகரில் நடந்த இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவி ஹசினி பெரேரா, முதலில் நேபாள மகளிர் அணியினரை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இதன்படி ருபினா செட்ர்ரி தலைமையில் களமிறங்கிய நேபாள மகளிர் அணி, ஒரு நிதானமான ஆரம்பத்தை வெளிப்படுத்தியது.

எனினும் அவ்வணி 12 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தங்களது முதலாவது விக்கெட்டினை சுஹந்திக்க குமாரியின் பந்து வீச்சில் பறிகொடுத்தது. இதனை அடுத்து அவ்வணியின் இரண்டாவது விக்கெட் 8.3 ஓவர்கள் நிறைவில் 19 ஓட்டங்களை பெற்றிருந்த போது இனோகா ரணவீரவின் பந்தில் பறிபோக, அதன் பின்னர் இலங்கை மகளிர் அணியின் விக்கெட் வேட்டை ஆரம்பமானது.

இதனை அடுத்து தனது சுழல் பந்து வீச்சாளர்களின் துணை கொண்டு இலங்கை மகளிர் அணி மேலதிக 4 ஓட்டங்களிற்குள் அனைத்து விக்கெட்டுகளையும்  மளமளவென கைப்பற்றியது. இதனால், 16.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 23 ஓட்டங்களை மாத்திரமே நேபாள மகளிர் அணி பெற்றது.

இது சர்வதேச டுவென்டி-20 கிரிக்கெட் வரலாற்றில் மகளிர் அணியொன்று பெற்ற மிகவும் குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையாகும். இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இதே தொடரில், இந்திய மகளிர் அணி மற்றும் பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், பங்ளாதேஷ் மகளிர் அணி பெற்ற 54 ஓட்டங்களே மிகவும் குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கையாக இதற்கு முன்னர் பதிவாகியிருந்தது.

இன்றைய துடுப்பாட்டத்தில், நேபாள மகளிர் அணியின் 8 வீராங்கனைகள் ஒரு ஓட்டத்தையேனும் பெறவில்லை. அவ்வணி சார்பாக அதிகபட்சமாக, விக்கெட் காப்பாளரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான ஜோதி பாண்டி மாத்திரம் 16 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில், இலங்கை மகளிர் அணி சார்பாக நேபாள மகளிர் அணியை சுழலில் புரட்டிய இடது கை சுழல் பந்து வீச்சாளர் இனோகா ரணவீர 4 ஓவர்களை வீசி 3  ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது சிறப்பான பந்து வீச்சினை பதிவு செய்தார்.

இவருடன், சுஹந்திக்க குமாரியும் தனது சுழல் மூலம் 7 ஓட்டங்களை கொடுத்து 3  விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, வலது கை சுழல்பந்து வீச்சாளர் ஒசாதி ரணசிங்கவும் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றி இந்த குறைவான மொத்த ஓட்ட எண்ணிக்கைக்குள் எதிரணியை மட்டுப்படுத்த மிகவும் உதவினர்.

இதனை அடுத்து, இலகுவான வெற்றி இலக்கான 24 ஓட்டங்களை பெற களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 4.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது. இதனால் 8 விக்கெட்டுக்களால் நேபாள மகளிர் அணியை இலங்கை அணி வீழ்த்தியது.

புள்ளி அட்டவணைpoints

இவ்வெற்றியுடன், தொடரின் புள்ளிகள் அட்டவணையில் இலங்கை மகளிர் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தனது தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த இலங்கை மகளிர் அணி, இந்த சாதனை வெற்றியுடன் ஒரு புதிய உட்சாகத்தினைப் பெற்றுள்ளது. எனவே, இந்த ஆசிய கிண்ண மகளிர் T20 தொடரில் இலங்கை மகளிர் அணி சாதிக்குமா என்ற ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இத்தொடரில் இலங்கை மகளிர் அணி மோதும் அடுத்த போட்டி தாய்லாந்து அணியுடன் எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறும்.

போட்டி முடிவுஇலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி