தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்த இலங்கை!

Asian Netball Championship 2022

258

சிங்கபூரில் நடைபெற்றுவரும் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் மூன்றாவது தொடர் வெற்றியின் மூலம் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.

ஹொங் கொங் அணிக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சுற்றின் இறுதிப்போட்டியில் 62-51 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றதன் மூலம் தங்களுடைய அரையிறுதி வாய்ப்பையும் இலங்கை தக்கவைத்தது.

>> சிங்கபூரை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய இலங்கை!

தொடர் முழுவதும் மிக்ச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வலைப்பந்தாட்ட அணி, இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் சிங்கபூர் அணிகளை ஏற்கனவே வீழ்த்தி வெற்றிகளை பதிவுசெய்திருந்தது.

அதன்படி ஹொங் கொங் அணியை எதிர்த்தாடிய இலங்கை மகளிர் அணி முதல் கால்பகுதியிலிருந்து ஆதிக்கத்தை செலுத்தியது. முதல் கால் பகுதியில் 20-19 என முன்னிலையை பெற்றுக்கொண்ட இலங்கை அணி, இரண்டாவது கால்பகுதியில் மேலும் 17 புள்ளிகளுடன் 37-22 என முன்னேறியது.

எனினும் மூன்றாவது கால்பகுதியில் ஹொங் கொங் அணி சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் 16 புள்ளிகளை ஹொங் கொங் அணி பெற்றுக்கொண்ட போதும், இலங்கை அணி 11 புள்ளிகளை பெற்று 48-38 என முன்னிலையை தக்கவைத்தது. இறுதியாக நடைபெற்ற நான்காவது கால்பகுதியில் இரண்டு அணிகளும் சமபலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும் இலங்கை அணி 62-51 என 11 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

>> மலேசியா அணிக்கு எதிராக திரில் வெற்றிபெற்ற இலங்கை!

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கான E குழுவின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது. இதன்மூலம் சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள அரையிறுதிப்போட்டியில் மீண்டும் ஹொங் கொங் அணியை, இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை மற்றுமொரு அரையிறுதிப்போட்டியில் சிங்கபூர் மற்றும் மலேசிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளின் முடிவுகள்

  • இலங்கை 62 – 51 ஹொங் கொங்
  • சீன தைபே 96 – 16 ஜப்பான்
  • மாலைத்தீவுகள் 40 – 50 புரூனே

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<