பேல், தியாகோ புதிய அணிகளில்

308
New teams for Bale and Thiago
Image Courtesy - Getty Image

2020/21 பருவகால கால்பந்து போட்டித்தொடர்கள் இந்த மாதம்  ஆரம்பமாகின. தற்பொழுது வீரர்களை வாங்கும் காலப்பகுதியும் ஆரம்பமாகியுள்ள நிலையில்  பல்வேறு அணிகள் தங்கள் குழாத்தை பலப்படுத்துவதற்காக வேறு அணிகளிலிருந்து வீரர்களை வாங்கி கொண்டு இருக்கின்றன. 

>> 43 வயதிலும் கால்பந்து ஆடும் பிரேசில் வீரர்

இந்த நிலையில் ரியல் மட்ரிட் அணியின் முன்கள  வீரரான க்ரத் பேல்  மற்றும் பேயர்ன் முனிச் அணியின் மத்தியகள வீரரான தியாகோ அல்கான்ட்ரா ஆகியோரை ப்ரீமியர் லீக்கைச் சேர்ந்த முன்னணி கழகங்கள் வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டொட்டன்ஹமுக்கு செல்லும் பேல் 

க்ரத் பேலை கடந்த 2013 இல் இங்கிலாந்தின் டொட்டன்ஹம் ஹொட்ஸ்பர் அணியிடம் இருந்து 100.8 மில்லியன் யூரோக்களுக்கு ரியல் மட்ரிட் வாங்கியது.  அந்த காலத்தில் அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஒரு வீரருக்கான சாதனையாகவும் அது இடம்பிடித்தது. 

2007 இல் டொட்டன்ஹ்முக்காக விளையாடும் பேல்(Photo by Tommy Hindley/Professional Sport/Popperfoto via Getty Images/Getty Images)

எனினும், போல் போக்பாவை 2016 இல் மன்செஸ்டர் யுனைடெட் 105 மில்லியன் யூரோக்கள் கொடுத்து வாங்கியதால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது

அடிக்கடி உபாதைகளினால் பாதிக்கப்பட்ட  பேல், ரியல் மட்ரிட் அணிக்காக இதுவரையில் 171 போட்டிகளில் விளையாடி 81 கோல்களை அடித்துள்ளார். 

வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த  பேலுக்கும், ரியல் மட்ரிட் அணியின் முகாமையாளரான சினேடின் சிடேனுக்கும் சிறந்த உறவு இல்லாததனால் அவர் அடிக்கடி அணியை விட்டு தூக்கப்பட்டார்.  

கடந்த பருவகாலத்தில் வெறும் 16 போட்டிகளையே ரியல் மட்ரிட்டுக்காக விளையாடிய பேலை வாங்க, சீனக் கழகமான ஜியாங்கு சுன்னிங் முயற்சித்தது. எனினும்  பேலை விற்க ரியல் மட்ரிட் மறுத்தது.

>> நெய்மார் உட்பட பலருக்கு போட்டித் தடை

இந்நிலையிலேயே மீண்டும் பேலை டொட்டன்ஹம் அணி ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் வாங்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து இன்னும் உத்தியோகபூர்வமாக இரு அணிகளாலும் அறிவிக்கப்படாத நிலையில்,  அவர் வெள்ளிக்கிழமை டொட்டன்ஹம்  அணியுடன் இணைவதற்காக, இங்கிலாந்துக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

31 வயதுடைய பேல், முன்னதாக டொட்டன்ஹம்  அணிக்காக  2007 இலிருந்து 2013 வரை 146 போட்டிகளில் விளையாடி 42 கோல்களை அடித்துள்ளார். 

ஏற்கனவே, ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியை தொற்றுள்ள டொட்டன்ஹம் அணி, பேலை வாங்கும் பட்சத்தில் அவர்களது முன்களம் மேலும் பலப்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

லிவர்பூலுக்கு செல்லும் தியாகோ  

கடந்த 3 மாதகாலமாக ப்ரீமியர் லீக் வெற்றியாளர்களாக பெருமையுடன் இருக்கும் லிவர்பூல் அணிக்கும் சம்பியன்ஸ் கிண்ண வெற்றியாளர்களான பேயர்ன் முனிச் அணியைச்  சேர்ந்த தியாகோ அல்கான்ட்ராவுக்கும் இடையே நிலவி வந்த ஒப்பந்த சந்தேகம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத்தில் லிவர்பூலுக்கு எதிராக விளையாடும் தியாகோ (Photo by Etsuo Hara/Getty Images)

29 வயதுடைய ஸ்பெய்னைச்  சேர்ந்த மத்தியகள  வீரரான தியாகோ 2013 இலிருந்து பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார். 

இப்பருவகால சம்பியன்ஸ் கிண்ணத்தினை பேயர்ன் அணி கைப்பற்றுவதற்கு பலத்த உறுதுணையாக இருந்த அவர், பேயர்ன் அணிக்காக இதுவரை 150 போட்டிகளில் 17 கோல்களை அடித்துள்ளார்.  

>> Video – PSG இற்கு சண்டையுடன் மோசமான சாதனை ! | FOOTBALL ULAGAM

கடந்த 3 மாத காலமாக அவரை வாங்குவதற்கு லிவர்பூல் அணியும், மன்செஸ்டர் யுனைட்டட் அணியும் முயற்சித்து கொண்டு வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை (17) லிவர்பூல் அணி அவரை வாங்க சம்மதம் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இரு அணிகளும் உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவிப்பினையும் வெளியிடாத போதிலும், பேயர்ன் முனிச் அணியின் பயிற்றுவிப்பாளரான ஹன்சி பிலிக் (Hansi Flick), பேயர்ன் முனிச் அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தியாகோ பேயர்ன் அணியை விட்டு செல்வதை உறுதி செய்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியதாவது, 

“தியேகோ ஒரு சிறந்த வீரர். அவர் எம்முடன் பல வருடங்களை கழித்துள்ளார். அவர் பிரியாவிடை செய்யும் போது எல்லோருக்கும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. நான் ஜுர்கென் க்ளோப்புக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் செல்வதால் அவருடன் சேர்ந்து சிறந்த திறமைகளையும் நாம் இழக்கிறோம்” என ஹன்சி பிலிக் தெரிவித்தார் .

இந்த அறிவிப்பில் அவர், தியாகோ லிவர்பூலுக்கு செல்வதை மறைமுகமாக அறிவித்துள்ளார். 4 வருட காலத்திற்கு  20 மில்லியன் பௌண்ட்கள் மற்றும் 5 மில்லியன் பௌண்ட்களை அவரது பெறுபேறுகளுக்கு அமைய லிவர்பூல் செலுத்த வேண்டும் என்ற சூழ்நிலைகளில் லிவர்பூல் அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. 

லிவர்பூல் அணிக்கு தியாகோ வரும் பட்சத்தில் அவருக்கு 6 ஆம் இலக்க ஜெர்சி  வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<