சுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20  தொடரின் முதல் போட்டி நாளை மறுதினம் (01) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்துள்ள காரணத்தால், இந்த இரண்டு அணிகளும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட T20  தொடரின் மீதான அவதானத்தை செலுத்தியுள்ளன. 

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவிக்கும் பாகிஸ்தான் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு….

ஆரம்பமாகவுள்ள இந்த T20  தொடரானது இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு மிக முக்கியமான தொடராக அமையவிருக்கின்றது. இரு தரப்பு தொடர் என்பதை தவிர்த்து, அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்துக்கான அடித்தளமாக இந்த தொடர் அமையவிருக்கின்றது.

T20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டுள்ள இரண்டு அணிகளும் புதிய சில வீரர்களை அணிக்குள் அழைத்து மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளன. 

இலங்கை அணியை பொருத்தவரை, அனுபவ வீரராகவும், தலைவராகவும் லசித் மாலிங்க பொறுப்பை ஏற்றுள்ளதுடன், ஏனைய வீரர்களில் பெரும்பாலும் இளம் வீரர்களே இணைக்கப்பட்டிருக்கின்றனர். இதில், உள்ளூர் T20 போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் வனிந்து ஹசரங்க, ஷெஹான் ஜயசூரிய மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். இதனால், மெதிவ்ஸ் மற்றும் திசர பெரேரா ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20  உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணிக்கு 20 இற்கும் குறைவான T20  போட்டிகள் மாத்திரமே உள்ள நிலையில், இளம் வீரர்களை வைத்து, அனுபவ வீரர் லசித் மாலிங்க சிறந்த T20  அணியொன்றை உருவாக்கும் முயற்சியிலும், இந்த தொடரை வெற்றிபெற வேண்டும் என்ற முயற்சியிலும் இறங்கியுள்ளார்.

Photos: Sri Lanka practice session ahead of 1st T20 against New Zealand

நியூசிலாந்து அணியும் தங்களுக்குள் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு, டிம் செய்பர்ட், டார்லி மிச்சல், ஸ்கொட் குகலெய்ன் மற்றும் டொம் ப்ரூஸ் ஆகிய புதிய வீரர்கள் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிய வீரர்களுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியானது, இந்த தொடரின் மூலமாக தங்களுடைய எதிர்கால T20 வீரர்களை அடையாளம் காண்பதற்கு தயாராகியுள்ளது. பயிற்சிப் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த அணி முதல் போட்டியை வெற்றியுடன் ஆரம்பிக்க காத்திருக்கிறது.

நியூசிலாந்துடன் மோதவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணி வெளியீடு

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து….

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்கள்

இந்த இரண்டு அணிகளும் மொத்தமாக 16 T20  போட்டிகளில் இதற்கு முன்னர் மோதியுள்ளன. இதில், 8 போட்டிகளில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி முன்னிலை வகிப்பதுடன், 6 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றிருக்கிறது.

ஆனால், பல்லேகலை மைதானத்தை பொருத்தவரை, நியூசிலாந்து அணியாது இலங்கை அணியை இதுவரை வீழ்த்தவில்லை. நடைபெற்றுள்ள 3 போட்டிகளில் ஒரு போட்டியில் இலங்கை வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமநிலையிலும் மற்றுமொரு போட்டி வெற்றி தோல்வியின்றியும் நிறைவுபெற்றுள்ளன.

எதிர்பார்ப்பு வீரர்கள்

  • குசல் பெரேரா

இலங்கை அணியில் வேகமாக ஓட்டங்களை பெறக்கூடிய துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா. கடந்த காலங்களில் T20 போட்டிகளில் அணிக்காக மிகச்சிறப்பாக ஓட்டங்களை குவித்துள்ளார்.

மொத்தமாக 36 T20  போட்டிகளில் 29.05 என்ற ஓட்ட வேகத்தில் 1046 ஓட்டங்களை குவித்துள்ள இவர், கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து 6 T20 போட்டிகளில் மாத்திரமே விளையாடி 3 சதங்கள் மற்றும் 38.33 என்ற ஓட்ட சராசரியில் 230 ஓட்டங்களை குவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் இவரது ஓட்ட வேகம் 159.72 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  • கொலின் மன்ரோ

நியூசிலாந்து அணியை பொருத்தவரை அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படும் கொலின் மன்ரோ மிகச் சிறந்த T20 துடுப்பாட்ட வீரராக உள்ளார். ஐசிசி T20 துடுப்பாட்ட தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள இவர், 49 T20 போட்டிகளில் 1411 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கு எதிரான பயற்சிப் போட்டியில் 27 பந்துகளில் 48 ஓட்டங்களை விளாசியிருந்த இவர், இலங்கை அணிக்கு மிகச் சவாலான துடுப்பாட்ட வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photos: New Zealand practice session ahead of 1st T20 against Sri Lanka

உத்தேச பதினொருவர்

  • இலங்கை உத்தேச பதினொருவர்

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நிரோஷன் டிக்வெல்ல மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுவதுடன், மத்திய வரிசையை குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் பலப்படுத்துவர். அதேநேரம், வேகமாக ஓட்டங்களை குவிக்கும் வீரர்களாக தசுன் ஷானக, ஷெஹான் ஜயசூரிய மற்றும் இசுரு உதான ஆகியோர் உள்ளனர்.

முறையற்ற பந்துவீச்சு குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருக்கும் அகில தனன்ஜய, பரிசோதனை முடிவுகள் வரும் வரை போட்டிகளில் பங்கேற்பார். முதல் நிலை சுழல் பந்துவீச்சாளராக இவர் செயற்படும் அதேவேளை, இரண்டாம் சுழல் பந்துவீச்சாளராக வனிந்து ஹசரங்க செயற்படுவார். இவரின் துடுப்பாட்டமும் அணிக்கு வலுவளிக்கும்.

வேகப்பந்துவீச்சை லசித் மாலிங்கவுடன் இணைந்து, இசுரு உதான வழிநடத்தவுள்ளதுடன், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் இடத்துக்கு லஹிரு குமார, கசுன் ராஜித மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இலங்கை – நிரோஷன் டிக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, அகில தனன்ஜய, இசுரு உதான, லசித் மாலிங்க (தலைவர்), கசுன் ராஜித 

நியூசிலாந்து உத்தேச பதினொருவர்

நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பாளராக இளம் டிம் செய்பர்ட் செயற்படவுள்ளதுடன், கொலின் மன்ரோ, ரொஸ் டெய்லர் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுவளிப்பர்.

பயிற்சிப் போட்டியில் சிறப்பாக செயற்பட்ட இஸ் சோதி முதன்மை சுழல் பந்துவீச்சாளராக செயற்படவுள்ளதுடன், அவருடன் மிச்சல் சென்ட்னர் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக இணைவார்.

அதேநேரம், பயிற்சிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஸ்கொட் குகலெய்ன் அணியில் இணைவார் என்பதுடன், வேகப்பந்துவீச்சை அணித் தலைவர் டிம் சௌதி மற்றும் லொக்கி பேர்கஸன் ஆகியோர் வழிநடத்தவுள்ளனர்.

Photos: New Zealand vs Sri Lanka Board President’s XI – T20 Match

ThePapare.com | Viraj Kothalawala | 29/08/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

நியூசிலாந்து – மார்டின் கப்டில், கொலின் மன்ரோ, டிம் செய்பர்ட், ரொஸ் டெய்லர், கொலின் டி கிரெண்டோம், டார்லி மிச்சல், மிச்சல் சென்ட்னர், ஸ்கொட் குகலெய்ன், டிம் சௌதி (தலைவர்), லொக்கி பேர்கஸன், இஸ் சோதி

ஆடுகளம் மற்றும் காலநிலை

பல்லேகலை காலநிலையை பொருத்தவரை போட்டி தினத்தன்று மழை குறுக்கிடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. மந்தமான காலநிலையாக இருந்தாலும், ஆடுகளமானது துடுப்பாட்ட வீரர்களுக்கு மிகச்சிறந்த ஆடுகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<