இலங்கை கிரிக்கெட் அணிக்கு நன்றி தெரிவிக்கும் பாகிஸ்தான் வீரர்கள்

724

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு அடுத்த மாத (செப்டெம்பர்) இறுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணியுடன் ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வெள்ளிக்கிழமை (23) அறிவித்திருந்தது.

இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி : போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மாத…

இந்த அறிவிப்பு மூலம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வழமை போன்று நடைபெறுவதற்கான ஒரு சூழ்நிலை ஒன்று பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.  

கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினை இலக்குவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடாத்தப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்களை அடுத்து சர்வதேச நாடுகளின் அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுப்புத் தெரிவித்திருந்தன. 

இவ்வாறாக பாகிஸ்தானில் ஏனைய நாடுகளின் அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்தது, அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்திருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) தமது நாட்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் நடாத்த பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.  

தமது நாட்டுக்கு சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எடுக்கும் முயற்சிகள் படிப்படியாக வெற்றியளித்து வரும் நிலையில், இலங்கை அணியுடன் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு கிடைத்த மிகப் பெரிய அடைவுமட்டமாக கருதப்படுகின்றது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இந்த மிகப்பெரிய அடைவுமட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியே காரணமாக இருப்பதால் அதனை கருத்திற்கொண்டே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் இலங்கை அணிக்கு நன்றிகளை தெரிவித்திருக்கின்றனர். 

இலங்கை பாகிஸ்தான் செல்வது உறுதி : போட்டி அட்டவணை வெளியானது!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் மாத…

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட சகலதுறை வீரர்களில் ஒருவரான மொஹமட் ஹபீஸ், இலங்கை அணியுடன் இரண்டு வகை போட்டிகளும் கொண்ட முழுமையான தொடர் ஒன்று இடம்பெறுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி எனக் குறிப்பிட்டார். அதேநேரம், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினை பாராட்டிய மொஹமட் ஹபீஸ் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மிகப் பெரிய நன்றியினை தெரிவித்து இலங்கை அணியினை வரவேற்க காத்திருப்பதாக கூறியிருந்தார்.

மறுமுனையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான கம்ரான் அக்மல், இந்த தொடர்களால் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் வருகின்றது எனக் குறிப்பிட்டு முழுமையான தொடர் ஒன்றுக்காக பாகிஸ்தான் வரும் இலங்கை அணிக்கும் நன்றிகளை தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினையும் பாராட்டியிருந்தார். 

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள இந்த ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் முதலாவதாக ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்டதாக அமையும் இந்த ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டி செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் கராச்சி நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ஒருநாள் தொடரின் பின்னர், இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெறவிருக்கின்றது. இந்த T20 தொடரின் முதல் போட்டி ஒக்டோபர் 5 ஆம் திகதியும், இரண்டாவது போட்டி ஒக்டோபர் 7 ஆம் திகதியும், மூன்றாவது போட்டி ஒக்டோபர் 9 ஆம் திகதியும் நடைபெறவிருக்கின்றது. அதேநேரம், இந்த T20 தொடரின் போட்டிகள் யாவும் லாஹூர் நகரில் நடைபெறவிருக்கின்றது. 

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு…..

இந்த சுற்றுத் தொடர்களுக்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்லும் போது அவர்களுக்கு அரச உயர் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. 

இதேநேரம், இலங்கை – பாகிஸ்தான் அணிகள் இடையே செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் இடம்பெறவுள்ளதால்  குறித்த காலப்பகுதியில் இரு அணிகளுக்கும் இடையில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறவிருந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் பிற்போடப்பட்டுள்ளது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<