U19 ஆசியக் கிண்ணத்தில் பங்களாதேஷிடம் வீழ்ந்தது இலங்கை

U19 Men’s Asia Cup 2026

4

ஓமானில் நடைபெற்று வருகின்ற 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு எதிராக நேற்று (07) நடைபெற்ற போட்டியில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 

ஓமானின் அல் அமீரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுக்க தீர்மானித்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

புங்களாதேஷ் அணியின் அதிகப்படியான ஓட்டங்கள் பெற்றவராக அஹ்சன் அல் முமின் மாறியதுடன், அவருடன் இணைந்த எஸ்.கே. ஜாரிஃப் சியாம் 3ஆவது விக்கெட்டுக்காக 106 பந்துகளில் 68 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டார். எஸ்.கே. ஜாரிஃப் சியாம் 83 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 59 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.  

புங்களாதேஷ் இன்னிங்ஸின் 6ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்த அஹ்சன் அல் முமின், 98 பந்துகளுக்கு முகம்கொடுத்து 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 

பந்துவீச்சில் இலங்கை தரப்பில் செத்மிக செனவிரத்ன 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இன்னிங்ஸின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார். மேலும், கிம்ஹான் மெண்டிஸ் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், கௌஷிக குமாரசிங்க 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து 246 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. 

இலங்கை அணி சார்பாக செனுஜ வெகுணகொடை 95 பந்துகளுக்கு முகம்கொடுத்து 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 85 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெறறுக் கொண்டார்.  

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் டபியுல் அலாம் தமிம், ஷேக் அட்டிகுர் ரஹ்மான், ருபாய் இஸ்லாம் ரிஸான் மற்றும் ரொபியுல் ஹசன் அனிக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 

இலங்கை அணி மோதும் அடுத்த போட்டி எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்  

 

பங்களாதேஷ் U19 அணி: 245/10 (49.4 ஓவர்களில்) — அஹ்சன் அல் முமின் 82, எஸ்.கே. ஜாரிஃப் சியாம் 59, செத்மிக செனவிரத்ன 4/52, கிம்ஹான் மெண்டிஸ் 3/55, கௌஷிக குமாரசிங்க 2/40 

 

இலங்கை U19 அணி: 200/10 (46.1 ஓவர்களில்) — செனுஜ வெகுணகொட 85, ஷேக் ரஹ்மான் 2/28 

 

முடிவு: பங்களாதேஷ் U19 அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<