இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியின் தலைவியும், திறமைமிக்க சுழற்பந்து வீச்சாளருமான சமுதி பிரபோதா, காயம் காரணமாக 2026 ஐசிசி மகளிர் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதனையடுத்து சமுதி பிரபோதாவிற்குப் பதிலாக நிமாஷா மதுஷானி மீபாகேவை இலங்கை குழாத்தில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஐசிசி வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச இருபது 20 போட்டித் தொடராக நடத்தப்படவுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 10 நாடுகள் பங்குபற்றவுள்ளன.
கடந்த ஆண்டு முதல் தடவையாக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்றிருந்ததுடன், இதில் தாய்லாந்து அணி சம்பியனாகியிருந்தது. இந்தத் தடவை இரண்டு அணிகள் மேலதிகமாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் பங்குபற்றும் தொடராக நடத்தப்பட்டுள்ளது.
>>இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவியாக ஹர்சிதா சமரவிக்ரம நியமனம்<<
இதன் படி, குழு ‘ஏ’ யில் இலங்கை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகினி, ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியனவும், குழு ‘பி’ யில் நடப்புச் சம்பியனான தாய்லாந்து, பாகிஸ்தான், ஜிம்பாய்வே, பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகியனவும் அங்கம் வகிக்கின்றன.
இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ள இலங்கை வளர்ந்து வரும் அணியின் தலைவியாக ஹர்ஷித்தா சமரவிக்கிரம செயல்படவுள்ளார்.
எனவே, இத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகவுள்ளது.
இலங்கை மகளிர் குழாம்
ஹர்ஷித்தா சமரவிக்கிரம (அணித்தலைவி), கவிஷா தில்ஹாரி (உப அணித் தலைவி), சஞ்ஜனா காவிந்தி, இமேஷா துலானி, ஹசினி பெரேரா, விஷ்மி குணரத்ன, நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுத்யங்கனா, சத்யா சந்தீப் பனி, ரஷ்மிகா செவ்வந்தி, சுகந்திகா குமாரி, மல்கி மதாரா, சேத்தனா விமுக்தி மற்றும் நிமாஷா மதுஷானி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.






















