சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி டெல்லியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த மாற்றத்தை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
டெல்லியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் அருண் ஜெட்லி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக இப்போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2017 டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, கடுமையான காற்று மாசுபாடு காரணமாக இலங்கை வீரர்கள் முகக்கவசம் அணிந்து மூச்சுத்திணறி விளையாடியது உலகளவில் பெரும் சர்ச்சையானது. அத்தகைய விரும்பத்தகாத சூழல் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், மைதானப் பணிகள் முடிவடையாததாலும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பிசிசிஐயிடம் டெல்லி கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>இந்தியாவிற்கு எதிரான நியூசிலாந்து ஒருநாள் குழாம் வெளியீடு<<
சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி 13ஆம் திகதி விசாகப்பட்டினத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டி 16ஆம் திகதி பெங்களூரிலும், 3ஆவது ஒருநாள் போட்டி 19ஆம் திகதி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளன.
இத்தொடரைத் தொடர்ந்து டிசம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய திகதிகளில் ராஜ்கோட், கட்டாக் மற்றும் புனே ஆகிய இடங்களில் மூன்று T20i போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9ஆம் திகதி தொடங்குகிறது. அதேவேளை, இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரிலும், அதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாடவுள்ளது.






















