முதல் பாதியில் போராடிய இலங்கை நேபாளத்திடம் வீழ்ந்தது

717

தற்போது நடைபெற்று வரும் 15 வயதின்கீழ் தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் (SAFF Championship) போட்டித் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளம் வீரர்கள் 2-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளனர். 

ஏற்கனவே இடம்பெற்ற முதல் போட்டியில் இரண்டாம் பாதியில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் காரணமாக பூட்டான் அணியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நிலையிலேயே இலங்கை வீரர்கள் கொல்கத்தாவின் கல்யாணி அரங்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியை எதிர்கொண்டனர். 

மிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை

இரண்டாம் பாதியில் காண்பித்த அபார ஆட்டத்தினால் பதினைந்து வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது…

போட்டியின் ஆரம்பத்தை அதிகம் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நேபாள அணி வீரர்கள் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் கோல் நோக்கி மேற்கொண்ட உதையை இலங்கை கோல் காப்பாளர் தாருக ரஷ்மிக்க சிறந்த முறையில் தடுத்தார்.  

தொடர்ந்தும் போட்டியில் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்ட நேபாள் வீரர்கள், அடுத்தடுத்து கோலுக்கான வாய்ப்புக்களை பெற்ற போதும் அவை இலங்கை பின்கள வீரர்கள் மற்றும் தாருக மூலம் தடுக்கப்பட்டன.  

33ஆவது நிமிடத்தில் நீண்ட தூர உதை மூலம் வந்த பந்தை தாரூக முன்னே பாய்ந்து தடுத்தார். இதன்போது, மீண்டும் நேபாள் வீரர்கள் கோல் நோக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பங்களை அண்மித்து வெளியே சென்றது.  

மீண்டும் 37ஆவது நிமிடம் கடந்த நிலையில் நேபாள் வீரர் கிறிஷ்னா அதிகாரி இலங்கை கோலுக்கு அண்மையில் வந்து கோல் நோக்கி அடித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது.  

முதல் பாதியின் அதிக வாய்ப்புக்களை எதிரணி வீரர்கள் பெற்ற போதும் இலங்கை இளம் வீரர்களால் போட்டியின் முதல் 45 நிமிடங்களையும் கோல்கள் இன்றி நிறைவு செய்ய முடிந்தது.

முதல் பாதி: இலங்கை 0 – 0 நேபாளம்

இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களுக்குள் போட்டியின் முதல் கோல் பெறப்பட்டது. நேபாள் வீரர்கள் கோல் நோக்கி மேற்கொண்ட முதல் முயற்சியின்போது பந்து மேல் கம்பத்தில் பட்டு வந்தது. மீண்டும் அவர்கள் கோல் நோக்கி செலுத்திய பந்து இலங்கை வீரர்களின் தடுப்பில் பட்டு வர அடுத்த வாய்ப்பில் சசன்க் போஹ்ரா பந்தை கோலுக்குள் செலுத்தி நேபாள அணியை முன்னிலை பெறச் செய்தார். 

அதன் பின்னரும் நேபாள் வீரர்கள் நீண்ட தூர உதை மூலமும் கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். 

75ஆவது நிமிடத்தில் தாருக தனது எல்லைக்கு வெளியே வந்து பந்தை பிடித்தமைக்காக எதிரணிக்கு ப்ரீ கிக் வழங்கப்பட்டது. கோலுக்கு நேரே இருந்து உதையப்பட்ட பந்து கம்பத்தை விட சற்று அண்மித்து வெளியே சென்றது. 

இரண்டாம் பாதியில் தமது கோல் எல்லையில் எதிரணி வீரர்களை தடுத்தாடுவதில் இலங்கை வீரர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். 

போட்டியின் 80 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட பந்தை ராய் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கம்பங்களுக்குள் செலுத்தி நேபாள் அணிக்கான இரண்டாவது கோலையும் பதிவு செய்தார். 

எனவே போட்டி நிறைவில் இரண்டாம் பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களின் உதவியுடன் நேபாள அணி வீரர்கள் இலங்கையை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தினர். 

ஏற்கனவே தமது முதல் போட்டியில், இம்முறை போட்டித் தொடரை நடத்தும் இந்தியாவிடம் 5-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த நேபாள அணியினர் இந்த வெற்றியினால் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.  

முழு நேரம்: இலங்கை 0 – 2 நேபாளம்

கோல் பெற்றவர்கள் 

  • நேபாளம் – சசன்க் போஹ்ரா 46, ராய் 83, 

பூட்டான் எதிர் பங்களாதேஷ் 

இன்று இதே மைதானத்தில் இடம்பெற்ற மற்றைய போட்டியில் பங்களாதேஷ் அணி வீரர்கள் பூட்டானை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.  பூட்டான் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். 

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க