ஆப்கான் பிரீமியர் லீக்கில் நான்கு இலங்கை வீரர்கள் ஒப்பந்தம்

Afghanistan Premier League 2026/27

1
Afghanistan Premier League 2026/27

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தும் அங்குரார்ப்பண ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு நான்கு இலங்கை வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பிளாட்டினம் பிரிவில் பக்தியா (Team Paktia) அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில், சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் கோல்ட் பிரிவில் நங்கர்ஹார் கொஸ்மிக் (Nangarhar Cosmic) அணிக்காக உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் அனுபவ அதிரடி துடுப்பாட்ட வீரரும், விக்கெட் காப்பாளருமான குசல் பெரேரா கோல்ட் பிரிவில் கந்தஹார் வொரியஸ் (Kandahar Warriors) அணிக்காக இடம்பெற்றிருப்பதோடு வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவை டயமன்ட் பிரிவில் அக்சல் யுனைடெட் காபுல் (Akcel United Kabul) அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

அங்குரார்ப்பண ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி20 தொடர் எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்கும் தொடரில் மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ரஷீத் கான், மொஹமட் ஆமிர், அலெக்ஸ் ஹேல்ஸ், மொயின் அலி மற்றும் கொலின் முன்ரே உட்பட பல சர்வதேச நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

எவ்வவாறாயினும், இந்த லீக் தொடருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இதுவரை முறையான அனுமதி வழங்கவில்லை என கிரிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் ஊக்கமருந்து தடுப்பு போன்ற குறைந்தபட்ச போட்டி மேலாண்மைத் தரநிலைகளைக் கருத்தில் கொண்டு, இத்தொடருக்கான அனுமதி வழங்கும் செயல்முறைகள் தற்போது நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது.

தற்போதைய சூழ்நிலையில், இத்தொடருக்கு ஐசிசியின் ஒப்புதல் கிடைக்குமா என்பதில் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஐசிசியின் விண்ணப்ப விதிமுறைகளின்படி, உரிமையாளர்களின் முழு விபரங்களையும் சம்பந்தப்பட்ட கிரிக்கெட் சபை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இதுவரை ஏலம் விடப்பட்ட ஐந்து அணிகளில் மூன்றின் உரிமையாளர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளனர். ‘டீம் பக்தியா’ மற்றும் ‘டீம் பால்க்’ ஆகிய இரு அணிகளும் உரிமையாளர்கள் இன்றி தற்காலிகப் பெயர்களிலேயே ஏலத்தில் இடம்பெற்றன.

பொதுவாக இது போன்ற தொடர்களுக்கான ஐசிசியின் ஒப்புதல் கடைசி நேரத்திலேயே வழங்கப்படும். உதாரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற முதலாவது ‘ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்’ தொடருக்கும் போட்டி தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை 2018-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரை அறிமுகப்படுத்தியது. எனினும், ஐந்து அணிகள் பங்கேற்ற இத்தொடர் ஒரே ஒரு பருவத்துடன் நிறுத்தப்பட்டது. கிறிஸ் கெயில், பிரெண்டன் மெக்கலம் மற்றும் சஹீட் அப்ரிடி போன்ற உலகத் தரம் வாய்ந்த முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் பங்கேற்று விளையாடினர். இருப்பினும், வீரர்களுக்கான கட்டணக் கொடுப்பனவுப் பிரச்சினைகள் மற்றும் தொடரின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து இத்தொடர் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<