மலேசியாவை வீழ்த்தி U19 ஆசியக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை

1

கௌஷிக குமாரசிங்க, விக்னேஸ்வரன் ஆகாஷ் அசத்தல் பந்துவீச்சு மற்றும் ஆரம்ப துடுப்பட்ட வீரர் ரெஹான் பீரிஸ் அரைச் சதம் என்பவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டியில் மலேசிய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றயீட்டியது. 

ஆசிய கிரிக்கெட் பேரவையினால் 13ஆவது தடவையாக நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (05) ஓமானில் ஆரம்பமாகியது. 

ஓமானின் அல் அமீரத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவர் விரான் சமுதித்த முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முடிவை மெய்ப்பிக்கும் வகையில் செயற்பட்ட இலங்கை பந்துவீச்சாளர்கள், மலேசியா அணியை வெறும் 88 ஓட்டங்களுக்கு சுருட்டினர். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அபார திறமையை வெளிப்படுத்திய கௌஷிக குமாரசிங்க 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவருக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கிய சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ், 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.   

இதனையடுத்து 89 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை அணி, 13.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை மிக இலகுவாக அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அசத்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரெஹான் பீரிஸ், 45 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த செனுஜ வேகுனகொட ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

போட்டியின் ஆட்டநாயாகனாக கௌஷிக குமாரசிங்க தெரிவானார். 

இதனிடையே, இன்று நடைபெற்ற 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் 19 வயதுக்குட்பட்ட அணியை 113 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றயீட்டியது.  

போட்டிச் சுருக்கம்: 

 

மலேசிய 19 வயதிற்குட்பட்ட் அணி: 88/10 (28.1 ஓவர்கள்) – ஷமில் அகில் 51, கௌஷிக குமாரசிங்க 5/30, விக்னேஸ்வரன் ஆகாஷ் 3/7 

 

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி: 91/1 (13.5 ஓவர்கள்) – ரெஹான் பீரிஸ் 54*, செனுஜ வேகுனகொட 30* 

 

முடிவு: இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<