ஆஸி. அணியை வாயடைக்க வைத்த மாலிங்க, மெதிவ்ஸ்

254

இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் பல வரலாற்று வெற்றிகளை குவித்த அணி. அணியின் பல வெற்றிகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது மாத்திரமின்றி, அதில் சில வெற்றிகள் இலங்கை அணியை வெறுப்பவர்களையும் ரசிக்க வைத்திருந்தன.

அவ்வாறு கொண்டாடப்பட்டதும், எதிர்பாராத திருப்பு முனைகளையும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மன உளைச்சலுக்கும் ஆளாக்கிய ஒரு போட்டியை இலங்கை அணி தனது ரசிகர்களுக்கு பரிசாக வழங்கியதை யாராலும் மறக்க முடியாது.  

Catch me if you can: முத்தையா முரளிதரன்

கிரிகெட்டின் உயரிய அங்கீகாரமான ஐசிசி Hall of Fame இனுள் உள்வாங்கப்பட்ட முதல் இலங்கை வீரர்………

வெற்றியை சுவைத்துவிட்டோம், போட்டி நமது பக்கம் முழுமையாக திரும்பிவிட்டது, இந்தப் போட்டியை எம்மிடமிருந்து இலங்கை அணியால் ஒரு போதும் பறிக்க முடியாது என்ற ஆஸி, அணியின் கனவை, இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க ஆகியோர் காணாமல் ஆக்கியிருந்தனர். 

கடந்த 2010ம் ஆண்டு பலம் மிக்க அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த நாட்டில் எதிர்கொள்ள தயாராகியிருந்தது இலங்கை அணி. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பிக்க, தங்களுடைய முதல் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.

என்னதான் அவுஸ்திரேலிய அணி தங்களுடைய சொந்த நாட்டில் விளையாட தயாரானாலும், என்றும் போல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானமானது இலங்கை கொடியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இலங்கை அணியின் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக அரங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.   

அவுஸ்திரேலிய அணியை விடவும், இலங்கை அணிக்கான அந்த ஆதரவினை மெல்போர்ன் மைதானத்தில் இன்றும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவ்வாறான ரசிகர்களின் ஆதரவுடன் எம்மால் என்றும் மறக்க முடியாத துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார தலைமையில் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.  

அவுஸ்திரேலிய அணியின் பலத்திலும் பஞ்சமில்லை.  அணித் தலைவர் என்ற ரீதியில் மைக்கல் க்ளார்க் என தொடங்கி, மைக் ஹசி, ஷேன் வொட்சன், ஸ்டீவ் ஸ்மித்,  ஷோர்ன் மார்ஷ், கெமரூன் வைட் மற்றும்  ப்ரெட் ஹெய்டின் என இலங்கை அணியை மிரட்டக்கூடிய வீரர்கள். 

பலம் பொருந்திய இரண்டு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க தயாராக, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆஸி. அணியை அவர்களது சொந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்களுடன் கட்டுப்படுத்துவது என்பது இலங்கை அணி முன்னால் இருந்து முதல் சவால். ஆனால், அந்த சவாலை திசர பெரேராவின் 5 விக்கெட் குவிப்புடன் இலங்கை அணி இலகுவாக கடந்தது.

திசர பெரேரா  5 விக்கெட்டுகளை வீழ்த்த, மறுபக்கம் லசித் மாலிங்க, நுவான் குலசேகர, முத்தையா முரளிதரன், சுராஜ் ரந்தீவ் மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் ஓட்டங்களை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை சரித்தனர். ஆஸி. அணியை தடுமாறச் செய்த இவர்களின் பந்துவீச்சால் அந்த அணியால் 239 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

Espncricinfo

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை, 240 என்ற ஓட்ட எண்ணிக்கை இலகுவாக தெரிந்தாலும், ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்களின் முன்னால் அதனை அடைவதென்பது இலகுவான விடயம் அல்ல.  மிச்சல் ஜோன்சன், பீட்டர் சிட்ல் மற்றும் ஷேன் வொட்சன் ஆகியோர் குறித்த காலப்பகுதியில் ஆஸி. அணியின் மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களாக இருந்தனர்.

இவர்களுக்கு இடையில் தன்னுடைய ஒருநாள் போட்டியின் அறிமுகத்தை பெற்றுக்கொண்ட சேவியர் டொஹெர்ட்டி, இந்தப் போட்டியில் ஆஸி. அணியின் முக்கிய துறுப்புச் சீட்டாக இருந்தார். இவ்வாறான பலம் பொருந்திய ஆஸி.யின் பந்துவீச்சு குழாம் இலங்கை அணியின் எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்து வீணாக்கியது.

தலைவர்களாக ஜொலித்து உலகக் கிண்ணத்தை வெல்லாதவர்கள்

சர்வதேச கிரிக்கெட் ……….

இலங்கை அணியின் எதிர்பார்ப்புமிக்க முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து, ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர். ஆரம்ப விக்கெட்டுகள் விழ, குமார் சங்கக்கார நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும், அவர் 49 ஓட்டங்களை பெற்று வெளியேற, ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.

Espncricinfo

அணிக்கான இலக்கு 240 ஓட்டங்களாக இருந்தாலும், அறிமுக வீரர் சேவியர் டொஹெர்ட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இலங்கை அணி வெறும் 107 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, தோல்வியின் நுணியை நோக்கி சென்றுகொண்டிருந்தது.

களத்தில் ஒரே ஒரு துடுப்பாட்ட வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் மாத்திரம் இருக்க, மறுமுனையில் லசித் மாலிங்க. இதுவரையில் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருந்த போதும், அன்றைய தினம் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக போகும் துடுப்பாட்ட வீரர் இவர் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.  

மாலிங்கவின் வருகையின் போது, இலங்கை அணியின் இன்னிங்ஸில் 25.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்ததுடன், வெற்றிக்கு 133 ஓட்டங்கள் தேவைப்பட்டது. வெற்றி முழுமையாக ஆஸி. அணியின் பக்கம் இருந்தும், இலங்கை அணிக்கான ஆதரவு மைதானத்தில் சற்றும் குறைவதாக இல்லை. ஆரம்பத்திலிருந்த அந்த ஒலிக் கருவிகளின் சத்தம் தொடர்ந்துக்கொண்டே இருந்தன.

ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தியில் இலங்கை அணி மீண்டு எழத் தொடங்கியது. இதுவரை காலமும், துடுப்பாட்டத்தில் அதிகமாக 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த லசித் மாலிங்க, தன்னை துடுப்பாட்ட வீரராக மாற்ற வேண்டிய தருணம் அது. துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில் அணியின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இளம் வயதான அஞ்செலோ மெதிவ்ஸின் கையில். 

Espncricinfo

இவர்கள் இருவரும் ஆஸி. அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ய தொடங்கினர். இதில், அஞ்செலோ மெதிவ்ஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் ஒவ்வொரு ஓட்டத்துக்குமான முயற்சி எந்தவிதத்திலும் தவறவில்லை. எதிரணிக்கு ஆட்டமிழப்புக்கான வாய்ப்பொன்றையும் கொடுக்காமல் நிதானமாக ஓட்டங்களை குவித்தார். 

லசித் மாலிங்க தான் இந்தப் போட்டிக்கான இலங்கை அணியின் நாயகன். வேகப் பந்துவீச்சாளர்களுக்கு விருப்பமான ஆஸி. மைதானங்களில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களும் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறுவர். ஆனால், லசித் மாலிங்கவின் முழு துடுப்பாட்ட திறமையையும் இந்தப் போட்டியில் பார்க்கக்கூடியதாக அமைந்தது.  

ஒரு பக்கம் மெதிவ்ஸ் நிதானமாக துடுப்பெடுத்தாட, மாலிங்க ஆஸி. பந்துவீச்சாளர்களின் பந்துகளை பௌண்டரி எல்லைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அத்தனை நேரமும், வெற்றிக் கனவில் இருந்த ஆஸி. அணி வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்றமடைந்தனர். ஆஸி. அணித் தலைவரான மைக்கல் க்ளார்க்கும் இணைப்பாட்டத்தை தடுக்க பல வழிகளை மேற்கொண்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை. 

இந்திய வீரர்கள் அவர்களுக்காகவே கிரிக்கெட் ஆடினர் – இன்சமாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான …….

தற்போது ஆஸி வீரர்களின் ஒரே எதிர்பார்ப்பு இந்த இணைப்பை உடைக்க வேண்டும் என்பதே. காரணம் அடுத்து, இறுதி விக்கெட்டிற்காக இருப்பவர் முத்தையா முரளிதரன். எனவே, போட்டியின் வெற்றி விக்கெட்டாக காணப்பட்ட இந்த இணைப்பை உடைப்பதே அவர்களது வேட்டையாக இருந்தது. 

மெதிவ்ஸ் அரைச் சதம் கடந்து போக இலங்கை அணி வெற்றியை நெருங்கியது. மாலிங்கவும் கன்னி அரைச் சதத்தை நெருங்கினார். இலங்கைக் கொடி பறக்க, முகம் பொங்கிய சிரிப்புடன், வொட்சனின் பந்துவீச்சில் 2 ஓட்டங்களை பெற்று, தனது 42வது பந்தில் அரைச் சதம் கடந்தார் மாலிங்க. 

அரைச் சதங்கள் இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தது மாத்திரமின்றி வொட்சனின் அதே பந்து ஓவரில் 27 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. 1983ம் ஆண்டு இந்திய அணி வீரர்களான கபில் தேவ் மற்றும் செய்ட் கிரமனி ஆகியோர் 9வது விக்கெட்டுக்காக பெற்ற, அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை மாலிங்க மற்றும் மெதிவ்ஸ் (132 ஓட்டங்கள்) முறியடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்தனர். 

Espncricinfo

இவர்களின் இந்த இணைப்பாட்டம் தான் இன்று வரையும் ஒருநாள் போட்டிகளில் 9வது விக்கெட்டுக்காக பெற்ற, அதிகூடிய இணைப்பாட்டமாக உள்ளது. 

சாதனை இணைப்பாட்டம் பெறப்பட்ட போதும், அடுத்த பந்து ஓவரிலேயே லசித் மாலிங்க ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். இவ்வளவு நேரம் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இவ்விரு வீரர்களுக்கும் இந்த நேரத்தில் ஏன் இவ்வாறான தேவையற்ற ஓட்ட முயற்சி என போட்டியை நேரிலும், தொலைக்காட்சியூடாகவும் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கவலை கலந்த கோபம். 

உலகிற்கு மறைந்திருந்த சனத் மற்றும் டில்ஷான்

பந்துவீச்சாளர்களாக அறிமுகமாகி பின்னர் கிரிகெட் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான்கள் என பெயர்பெற்ற……….

ஆனாலும், இறுதி விக்கெட்டுக்காக வருகைத்தந்த முத்தையா முரளிதரன் தன்னுடைய 2வது பந்திலேயே பௌண்டரி விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதில், இறுதிவரை ஆட்டமிழக்காத அஞ்செலோ மெதிவ்ஸ் 77 ஓட்டங்களை பெற்று, ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை அணியின் இந்த வெற்றியானது ஒரு தசாப்தத்தை நெருங்கும் போதும், இன்றளவிலும் நீங்கா ஞபகத்தை கொண்டிருக்கிறது. அதிலும் ஆஸி. அணியின் தலைவராக செயற்பட்டிருந்த மைக்கல் க்ளார்க், “உண்மையாக இந்தப் போட்டியில் எப்படி தோல்வியடைந்தோம் என தெரியவில்லை” என கூறியிருந்தமை இலங்கை அணியின் போட்டித் தன்மையை வெளிப்படையாக அனைவர் மத்தியிலும் காட்டியிருந்தது.  

எந்தவொரு போட்டியாக இருந்தாலும், இறுதிவரை போராடக்கூடிய அணி இலங்கை அணி என்பதை இந்தப் போட்டி, சர்வதேச கிரிக்கெட்டுக்கு அடையாளமாக காட்டியிருந்தது. அன்று முதல் இன்று வரை இலங்கை அணிக்கான இந்தப் பெயர் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. அன்று மெதிவ்ஸ் மற்றும் மாலிங்க இட்டது  அடித்தளம் என்றால், இன்று குசல் பெரேரா மற்றும் விஷ்வ பெர்னாண்டோவின் ஆட்டம் தொடர் கதையாக தொடர்கிறது. 

காலங்கள் மாறலாம், வீரர்கள் மாறலாம், கிரிக்கெட்டின் தன்மையும் மாறலாம் ஆனால், இலங்கை அணிக்கென இருக்கும் வெற்றிக்கான போராட்டத்தை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு இலங்கை அணியின் இதுபோன்ற பிரகாசிப்புகள் ஓர் அடையாளம் என கூறுவதில் எந்தவொரு ஐயமும் இல்லை. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<