இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக இளஞ்சிவப்பு பந்து

7871
sri lanka cricket

எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி கொழும்பு R.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறவிருக்கும் இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இலங்கை மண்ணில் முதல் தடவையாக இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படவுள்ள போட்டியாக அமையவுள்ளது.

இலங்கை A அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் A அணிக்கும் இடையிலான முதல் தர, நான்கு நாள் கொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியில் கொக்கபுரா வகையை சேர்ந்த இளஞ்சிவப்பு பந்தை அறிமுகப்படுத்தி விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. எனினும் இப்போட்டிகள் பகலிரவு போட்டிகளாக நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) மாலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் சந்திப்பில் ”முற்கிந்திய தீவுகள் A அணியின் இந்த விஜயத்தின்போது, நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் மூன்றும், ஒரு நாள் போட்டிகள் மூன்றும் நடைபெறவுள்ளதாக” இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச மட்டத்தில் விளையாடுவதற்கு வழியேற்படுத்தி கொடுக்கும் நோக்கில் இப்போட்டித் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் A அணி, இறுதியாக 2014ஆம் ஆண்டு கார்லோஸ் பிரத்வைட் தலைமையின் கீழ் இலங்கையில் மேற்கொண்ட சுற்று பயணத்தின் பின் எவ்விதமான போட்டிகளிலும் பங்குபற்றவில்லை.

இலங்கை A அணி 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன, அவுஸ்திரேலியாவுடனான போட்டி தொடரில் தான் விளையாடிய இறுதி 6 இன்னிங்ஸ்களில் வெறும் 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டமையினால், தன்னுடைய திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

எதிர்வரும் காலங்களில் இலங்கை தேசிய அணி ஆபிரிக்க பிராந்தியத்தில்  சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு எதிரான போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளது. இந்நிலையில், அவ்வணிகளுடனான தொடரில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ள துணைத்தலைவர் மற்றும் அதிரடி துடுப்பாட்டக்காரர் குஷால் ஜனித் பெரேராவுடனே திமுத் கருணாரத்ன ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

இந்தத் தொடர் குறித்து அணித்தலைவர் கருணாரத்ன குறிப்பிடும்பொழுது, “இளஞ்சிவப்பு பந்தில் விளையாடுவது எங்களுக்கு இதுவே முதல் தடவை. இரண்டு நாட்கள் இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்தோம். பெரிதாக எதுவும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை, ஆனால் சிலவேளை பந்து பழமைப்படும் போது சிவப்பு பந்தை விட கடினமாக இருக்கலாம்” என தெரிவித்தார்.

லஹிரு திரிமான்னெ கடந்த ஜூன் மாதத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் பிரதான அணியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்த்துள்ள நிலையில், வலது கை துடுப்பாட்ட வீரர் ரோசென் சில்வா மற்றும் 19வயதுக்குட்பட்ட அணித்தலைவர் ஷரித் அசலங்க ஆகியோருடன் இணைந்து அவரும் நடுத்தர துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்தலாம்.

19 வயதுக்குட்பட்ட இளம் வேகப்பந்து வீச்சாளர் அசுத்த பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரவுடன் NCC விளையாட்டு கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 21 வயதுடைய இடது கை ஸ்விம் பந்து வீச்சாளர் அணுக் பெர்னாண்டோ மீதும் அதிக நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன வேகப்பந்து வளங்களை இனங்கண்டு அவற்றை எதிர்வரும் போட்டித் தொடர்களில் பயன்படுத்தக்கூடும்.

இது குறித்து பயிற்சியாளர் கருத்து தெரிவிக்கையில், ”எங்களுடைய முக்கிய நோக்கம், விளையாட்டு வீரர்களுக்கு உந்துசக்தியை அளிக்கும் அதே வேளை போட்டிகளை வென்று கொள்வதே ஆகும். அது மாத்திரமன்றி, சிம்பப்வே மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுடனான போட்டிகளுக்கு திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை. அதனால் இப்போட்டிகளுக்கு முடிந்தளவு வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

நான்கு நாட்கள் கொண்ட முதல் இரண்டு போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இலங்கை A அணி வீரர்கள்

திமுத் கருணாரத்ன (அணித்தலைவர்), குஷால் ஜனித்த பெரேரா (துணைத் தலைவர் ), லஹிரு திருமன்னெ, ரோசென் சில்வா, நிரோஷான் டிக்வெல்ல, அசேல குணரத்ன, சரித அசலங்க, அவிஷ்கா பெர்னாண்டோ, அனுக் பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமார லக்சன் சண்டகன், விமுக்தி பெரேரா, கசும் மதுஷங்க.

மேற்கிந்திய தீவுகள் A  அணி 

வலது கை நடுத்தர துடுப்பாட்ட வரிசை துடுப்பாட்ட வீரரும் அனுபவம் வாய்ந்த வீரருமான ஷாமர் ப்ரூக்ஸ் மேற்கிந்திய தீவுகள் A அணியை நான்கு நாட்கள் கொண்ட முதல் மூன்று போட்டிகளிலும் வழிநடத்துவார். அதே நேரம், மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் அணித்தலைவராக ஜேசன் முஹம்மத் செயல்படுவார்.

மேற்கிந்திய தீவுகள் A அணியில் 2009ஆம் ஆண்டு டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் பந்து வீச்சுக்கு தலைமை தாங்குகிறார். அதே நேரம், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ராஜேந்திர சந்திரிகா கடந்த மாதம் இந்தியாவுடனான இரண்டு போட்டியிலும் பிரகாசிக்க தவறியமையால் அணியில் இருந்து நீக்கி விடப்பட்ட இவர் மீண்டும் இப்போட்டிகளுக்காக அணயில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இடது கை சூழல்பந்து வீச்சாளர் வீராசம்மி பெர்மால், மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஆண்ட்ரே பிளெட்சர் மற்றும் விக்கெட் காப்பாளர் சாட்விக் வால்டன் ஆகியோர் ஒரு நாள் போட்டி அணியில் அங்கம் வகிப்பார்கள்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கிந்திய தீவுகள் A அணித்தலைவர் ஷாமர்ஹ ப்ரூக்ஸ் கருத்து தெரிவிக்கும்பொழுது, “கரீபியனில் நடைபெற்ற முதல் தர போட்டிகளில் இரு முறை இளஞ்சிவப்பு பந்துடன் விளையாடியுள்ளேன். ஆனால் அந்தப் பந்து துயிக் வகையை சேர்ந்தது. இது கொக்கபுரா வகையை சேர்ந்தது. சில ஓவர்களுக்கு பிறகு இதை காண்பதற்கு கடினமாக இருக்கும். எனினும் இது சற்று கருத்த நிறமாக இருப்பதால் பரவாயில்லை என்றே நினைக்கின்றேன். அதனால் சவால்கள் எதிர்த்து வெல்லவே பார்க்கின்றேன்” என தெரிவித்தார்.

நான்கு நாட்கள் கொண்ட முதல் மூன்று போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் A அணி

ஷாமர் ப்ரூக்ஸ் (அணித் தலைவர்), விஷுவல் சிங் (துணைத் தலைவர்), ராஜேந்திர சந்திரிகா, கேரன் பவல், எவின் லூயிஸ், சிம்ரோனின் ஹெட்மயேர், டேமியன் ஜேக்கப்ஸ், ரகீம் கார்ன்வால், குடகேஷ் மொட்டி , கெமர் ரோச், கேன் ஜோசப்,டெலான் ஜான்சன், ரெய்னார்ட்லெவெரிட்ஜ், ஜஹமர் ஹாமில்டன்.

ஒரு நாள் போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள்  A  அணி 

ஜேசன் மொம்மட் (அணித் தலைவர்), ஆண்ட்ரே பிளேர்சேர் (துணைத் தலைவர்), ரோன்ஸ் பீடன், கேஷ்ரிக் வில்லியம்ஸ், கைல் மாயேர்ஸ், ரோவ்மன் பவல், கைல் ஹோப், சாட்விக் வால்டோன், ஆண்ட்ரே மெக்கார்த்தி, அசாத் பியூடடின், வீராசாமி பெர்மையுள், ஜான் ரஸ், ஜஃகேசர் டேமியன் ஜேக்கப்ஸ், டெலான் ஜான்சன்.

மேற்கிந்திய தீவுகள் அணியிடனான போட்டி அட்டவணை

நான்கு நாள் கொண்ட முதல் போட்டி – ஒக்டோபர் 4 முதல் 7ஆம் திகதி வரை – R. பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்

நான்கு நாள் கொண்ட 2ஆவது போட்டி – ஒக்டோபர் 11 முதல் 14ஆம் திகதி வரை – பல்லேக்கலெ சர்வதேச கிரிக்கெட் மைதானம்

நான்கு நாள் கொண்ட 3ஆவது போட்டி – ஒக்டோபர் 18 முதல் 21ஆம் திகதி வரை – ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

முதல் ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 24ஆம் திகதி – ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

2ஆவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 27ஆம் திகதி – வெலகெதர கிரிக்கெட் மைதானம், குருநாகல்

3ஆவது ஒருநாள் போட்டி – ஒக்டோபர் 30ஆம் திகதி – R. பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம்