தேசிய விளையாட்டு நிதியத்துக்கு 120 மில்லியன்களை வழங்கும் SLC

84

தேசிய விளையாட்டு நிதியத்துக்கு 120 மில்லியன் ரூபா நிதியை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது போட்டி டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தேசிய விளையாட்டு நிதியத்திற்கு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாட்டின் அனைத்து விளையாட்டுகளையும் அபிவிருத்தி செய்கின்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் சபை 100 மில்லியன் ரூபா நிதியை தேசிய விளையாட்டு நிதியத்திற்கு வழங்கியிருந்தது. அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை அணிக்கு 22.5 மில்லியன் ரூபாவை இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவியாக வழங்கியது.

அத்துடன், சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை தலா 2 மில்லியன் ரூபா வீதம் 36 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<