இறுதி நிமிடம் வரை போராடி மாலைதீவுகளிடம் வீழ்ந்த இலங்கை

SAFF Championship 2021

207
SAFF Championship 2021
Vaguthu Images (Abdulla Abeedh)

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரில் தமது இறுதி லீக் போட்டியில் மாலைதீவுகள் அணியை எதிர்கொண்ட இலங்கை வீரர்கள் இறுதி நிமிடம் வரை போராடிய போதும், 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டனர் .

இந்த தோல்வியினால், இம்முறை SAFF சம்பியன்ஷிப் தொடரில் எந்தவொரு வெற்றியையும் பெறாமல் இலங்கை அணி முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற பங்களாதேஷ் மற்றும் நேபாளம் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வி கண்டிருந்த இலங்கை அணி, இந்தியாவை சமப்படுத்தியிருந்தது. அதேபோன்று, மாலைதீவுகள் தமது முன்னைய போட்டியில் நேபாளத்திடம் தோல்வியடைந்த அதேவேளை, பங்களாதேஷை வெற்றி கொண்ட நிலையில் இந்த போட்டியில் களம் கண்டது.

இலங்கை முதல் பதினொருவர்

மாலைதீவுகள் தேசிய அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் நான்காவது நிமிடத்தில் இலங்கை அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது, டிலன் டி சில்வா செலுத்திய பந்தை ஷலன சமீர ஹெடர் மூலம் கோலாக்கினாலும், அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. எனினும், அந்த தீர்ப்பு சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது.

அடுத்த இரண்டு நிமிடங்களில் மாலைதீவுகள் வீரர் இலங்கை அணியின் கோல் பகுதியின் ஒரு எல்லையில் இருந்து கோல் திசைக்கு செலுத்திய பந்தை அலி அஷ்பாக் வேகமாக கோலுக்குள் ஹெடர் செய்து மாலைதீவுகள் அணியை ஆரம்பத்திலேயே முன்னிலைப் படுத்தினார். இது அலி அஷ்பாக் SAFF சம்பியன்ஷிப் போட்டிகளில் பதிவு செய்த தனது 22ஆவது கோலாகும்.

அதன் பின்னர் அலி அஷ்பாக் வழங்கிய் பந்துப் பரிமாற்றத்தைப் பெற்று கோல் நோக்கி இப்ராஹிம் ஹுஸைன் உதைந்த பந்தை சுஜான் லாவகமாப் பிடித்துக் கொண்டார்.

மீண்டும் 20 நிமிடங்கள் கடந்த நிலையில், இப்ராஹிம் ஹுஸைன் இலங்கை பின்கள வீரரை தாண்டி பந்தை எடுத்துச் சென்று கோல் எல்லையில் இருந்து சக வீரருக்கு பரிமாற்றம் செய்யும்போது ஹர்ஷ பெர்னாண்டோ வேகமாக வந்து பந்தை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

பின்னர் மாலைதீவுகள் கோல்காப்பாளர் மொஹமட் பைசால் உபாதைக்குள்ளாகி மைதானத்தில் இருந்து வெளியேற, மாற்று கோல் காப்பாளராக மொஹமட் சபீயு மைதானத்திற்குள் நுழைந்தார்.

34ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் கவிந்து இஷான் இப்ராஹிம் ஐசாம் மூலம் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, இலங்கைக்கு பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதன்போது டக்சன் பியுஸ்லஸ் அதே இடத்தில் பந்தை உயர்த்த ஹமில்டன் கோல் நோக்கி உதைந்த பந்து கோல் கம்பத்திற்கு மேலால் சென்றது.

தொடர்ந்து 40 நிமிடங்களின் பின்னர் முதல் பாதி நிறைவு வரை மாலைதீவுகள் அணியினர் கோலுக்கு எடுத்த மூன்று முயற்சிகளை சுஜான் பெரேரா தடுத்தார்.

எனவே, முதல் பாதி ஆட்டம் மாலைதீவுகள் அணியின் ஆதிக்கத்துடன் நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: மாலைதீவுகள் 1 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பமாகியதும் ஹர்ஷ பெர்னாண்டோவுக்கு மாற்று வீரராக மொஹமட் பசால் களமிறக்கப்பட்டார்.

குறித்த பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் பங்களாதேஷின் ஹம்ஸா கோலுக்கு உதைந்த பந்து வலது பக்க கம்பத்தில் பட்டு மைதானத்தில் எதிர் திசைக்கு சென்றது. அதே நிமிடத்தில் மீண்டும் உள்ளனுப்பப்பட்ட பந்து அலி அஷ்பாக்கின் கால்களில் சரியாக படாமல் கோலுக்குள் வர சுஜான் அதனைத் தடுத்தார்.

50 நிமிடங்களின் பின்னர் பாஷீர் உள்ளனுப்பிய பந்தை அலி அஷ்பாக் பெறுவதற்குள் சுஜான் தடுத்தார். இதன்போது மீண்டும் இப்ராஹிம் உதைந்த பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

அடுத்த 5 நிமிடங்களில் ஷமோத் டில்ஷான் மத்திய களத்தில் இருந்து எடுத்துச் சென்று உதைந்த பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது. அதன் பின்னர் இலங்கை அணி வீரர்கள் தாக்குதல் ஆட்டம் ஒன்றை காண்பிக்க ஆரம்பித்தனர். அதனால் தொடர்ந்து எதிரணியின் கோல் எல்லையில் கோலுக்கான முயற்சிகளை எடுத்தனர்.

மத்திய களத்தில் இருந்து வசீம் ராசிக், எதிரணியின் தடுப்பு வீரருக்கு மேலால் மாற்று வீரராக வந்த ஆகிப்பிற்கு பந்தை வழங்க வேகமாக செயற்பட்ட எதிரணி வீரர் அதனை வெளியேற்றினார்.

60 நிமிடங்களின் பின்னர் மொஹமட் பசால் எதிரணியின் ஒரு கோணர் திசையில் இருந்து வேகமாக கோல் திசைக்கு கொடுத்த பந்தை டிலன் பெற்று கோலுக்கான முயற்சியை மோற்கொள்ள முயற்சிக்கும்போது பின்கள வீரர்கள் அதனை தடுத்தனர்.

அதன் பின்னர் டிலன் டி சில்வாவுக்கு மாற்று வீரராக மொஹமட் சிபான் மைதானத்திற்குள் நுழைந்தார். தொடர்ந்தும் இலங்கை வீரர்களின் பந்துப் பரிமாற்றங்களில் வேகம் ஏற்பட போட்டி மேலும் சூடு பிடித்தது.

70 நிமிடங்ளின் பின் பசால் ஒரு திசையில் இருந்து கோல் திசைக்கு உயர்த்தி அனுப்பிய பந்தை கவிந்து பெற்று இரண்டு வீரர்களைத் தாண்டி எடுத்து வந்து கோல் நோக்கி உதைந்தபோது பந்து கம்பங்களை விட்டு உயர்ந்து வெளியே சென்றது.

மீண்டும் அடுத்த நிமிடங்களில் அதேபோன்று கவிந்து எதிரணியின் பின்கள வீரர்களைத் தாண்டி எடுத்து வந்த பந்தை கோலுக்கான முயற்சியாக நிறைவு செய்ய முயற்சிக்கையில் அவர் கீழே விழுந்தார்.

தொடர்ந்து ஆகிப் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து கோலுக்கான உதையை எடுக்கும்போதும் பின்கள வீரர் அதனைத் தடுத்தார்.

மாலைதீவுகளுக்கு 85 நிமிடங்களின் பின்னர் இலங்கை அணியின் மத்திய களத்தில் கிடைத்த பிரீ கிக்கை அலி பாசிர் பெற்று உதைந்துபோது கோலின் வலது பக்க கம்பத்தில் பட்டு மிண்டும் அது மைதானத்திற்குள் சென்றது.

90 நிமிடங்களின் பின்னர் மாலைதீவுகளின் மாற்று வீரர் ராயிப் இலங்கை பின்கள வீரர்களை தாண்டி பந்தை எடுத்து வந்து கோலுக்கு உதைய, பந்து உயர்ந்து வெளியே சென்றது.

அடுத்த நிமிடம் மத்திய களத்தில் இருந்து டக்சன் எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்தைப் பெற்ற பசால், மீண்டும் பெனால்டி எல்லைக்கு வெளியே வந்து கோலுக்குள் உதைய, பந்து மேல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது.

எனவே, இலங்கை வீரர்கள் இரண்டாம் பாதியில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாக, மாலைதீவுகள் 1-0 என வெற்றி பெற்று, தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்:  மாலைதீவுகள் 1 – 0 இலங்கை

  • கோல் பெற்றவர்கள்

மாலைதீவுகள் – அலி அஷ்பாக் 6’

  • மஞ்சள் அட்டை

மாலைதீவுகள் – இப்ராஹிம் ஐசம் 90’

இலங்கை – கவிந்து இஷான் 43’, அமான் பைசர் 79’, டக்சன் பியுஸ்லஸ் 87, அமாஹமட் ஆகிப் 90’

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<