விராட் கோஹ்லி தலைமையில் பஞ்சாப் அணியை வீழ்த்திய RCB

IPL 2023

195
IPL 2023

IPL தொடரில் இன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் விராட் கோஹ்லி மற்றும் பெப் டு பிளெசிஸ் ஆகியோரின் அபாரமான துடுப்பாட்ட பங்களிப்புகளின் உதவியுடன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி 24 ஓட்டங்களால் வெற்றியை பதிவுசெய்தது.

பெங்களூர் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த பெப் டு பிளெசிஸின் உடற்தகுதியில் சற்று கேள்வியிருந்ததன் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோஹ்லி தலைவராக செயற்பட்டிருந்தார். எனினும் டு பிளெசிஸ் மாற்றீடு வீரராக (Impact sub) துடுப்பாட்ட வீரராக மாத்திரம் செயற்பட்டிருந்தார்.

>>இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியிருந்த பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லி மற்றும் பெப் டு பிளெசிஸ் ஆகியோர் அற்புதமான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் அரைச்சதங்களை கடந்ததுடன் முதல் விக்கெட்டுக்காக 137 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் விராட் கோஹ்லி 47 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, டு பிளெசிஸ் 56 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார். இவர்கள் இருவரும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காவிட்டாலும், ஓட்டவேகமானது கேள்விக்குறியாக மாறியிருந்தது.

முதல் விக்கெட்டின 17வது ஓவரில் 137 ஓட்டங்களுக்கு பெங்களூர் அணி இழந்திருந்த நிலையில், அந்த அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் ஹர்பிரீட் பிரார் 2 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

ஆரம்பத்தில் பெங்களூர் அணி நிர்ணயித்திருந்த வெற்றி சவாலனதாக மாறுமா? என்ற கேள்வியிருந்த போதும், மொஹமட் சிராஜ் மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோரின் பந்துவீச்சு அணிக்கு நம்பிக்கை கொடுத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுத்து மொஹமட் சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதுமாத்திரமின்றி ஹர்ப்ரீட் சிங் மற்றும் செம் கரன் ஆகியோரின் விக்கெட்டுகளை முறையே சிராஜ் மற்றும் ஹஸரங்க ஆகியோர் ரன்-அவுட் மூலம் கைப்பற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கனவு சரியத்தொடங்கியது.

>>WATCH – அயர்லாந்துக்கு எதிரான பிரகாசிப்பு தொடர்பில் கூறும் பிரபாத் ஜயசூரிய!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 46 ஓட்டங்களையும், ஜித்தேஸ் சர்மா 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 18.2 ஓவர்கள் நிறைவில் 10 பந்துகள் மீதமிருக்க 150 ஓட்டங்களை மாத்திரமே பஞ்சாப் கிங்ஸ் அணி பெற்றுக்கொண்டது. எனவே 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விராட் கோஹ்லி தலைமையில் பெங்களூர் அணி வெற்றியை பதிவுசெய்தது.

இந்தப்போட்டியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி தங்களுடைய மூன்றாவது வெற்றியுடன் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தங்களுடைய மூன்றாவது தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் 7வது இடத்தை தக்கவைத்துள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<