யுபுன் அபேகோனுக்கு அனுசரணை வழங்கும் இலங்கை கிரிக்கெட்

99

இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோனுக்கு ஆண்டுக்கு தலா 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியை ஊக்கத்தொகையாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தீர்மானித்துள்ளது

அதன்படி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்காக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அவருக்கு ஊக்கத்தொகையாக வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது. இது இலங்கை பணப் பெறுமதியில் சுமார் 40 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தெற்காசியாவின் அதிவேக வீரராக வலம்வருகின்ற யுபுன் அபேகோன், இந்த மாத ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ரெசிஸ்ப்ரின்ட் இன்டர்நெஷனல் 2022 மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தை 9.96 செக்கன்களில் நிறைவு செய்து தனது சொந்த இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தார்.

அத்துடன், 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10 செக்கன்களுக்குள் ஓடிய முதலாவது தெற்காசிய வீரர் என்ற பெருமையையும் யுபுன் அபேகோன் தனதாக்கிக்கொண்டார்.

அது மட்டுமல்லாமல் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை வேகமாக நிறைவு செய்த ஆசிய நாட்டவர்களில் 4ஆவது இடத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

எனவே, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 2015 முதல் இத்தாலியில் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற யுபுன் அபோகோனின் மேலதிக பயிற்சிகள் உள்ளிட்ட இதர தேவைகளுக்காக இலங்கை கிரிக்கெட் சபையினால் எதிர்வரும் 2 ஆண்டுகளுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை ஊக்கத்தொகையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பிலான விசேட வைபவம் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கடந்த 7ஆம் திகதி விளையாட்டுததுறை அமைச்சில் உள்ள டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, இம்மாத இறுதியில் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அனுசரணை வழங்குவதற்காக 22.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு மேலதிகமாக, தேசிய விளையாட்டு நிதியத்தின் நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கும் இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்தது.

அதுமாத்திரமின்றி, மஹரகமவில் உள்ள அபேக்ஷா மருத்துவமனை, பொரளையில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை ஆகியவற்றுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு 2 மில்லியன் ரூபா நிதியை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<