தென்னாபிரிக்க இளம் வேகப் பந்துவீச்சாளர் மீது கொடூர தாக்தகுல்

17042
Getty Image

தென்னாபிரிக்க இளையோர் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான மொண்ட்லி குமாலோ (Mondli Khumalo) இங்கிலாந்தில் வைத்து கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ICC 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்காக மொண்ட்லி குமாலோ விளையாடியிருந்தார். தற்போது இங்கிலாந்தின் North Petherton கழகத்துக்காக விளையாடி வருகின்றார்.

இவர் கடந்த சனிக்கிழமை (28) இரவு இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் பகுதியில் சமீபத்தில் முடிந்த கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக சக அணி வீரர்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை ஹோட்டலுக்கு வெளியில் வைத்து மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலே மொண்ட்லி குமாலோ மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமாலோவுக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டதாகவும், சவுத்மீட் மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதாகவும் Cricinfo இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, மொண்ட்லி குமாலோவின் தற்போதைய நிலை குறித்து; North Petherton கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், “முழுமையாகவும் விரைவாகவும் குணமடைய மொண்ட்லிக்கு நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான ஆதரவை வழங்குகிறோம். மொண்ட்லிக்கு உதவியவர்களுக்கு, குறிப்பாக சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் அவருக்கு உதவிய, உதவி வரும் சுகாதார சேவை ஊழியர்களுக்கு எங்கள் நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொண்ட்லி குமாலோ இதுவரை 4 முதல்தர போட்டிகளிலும், ஒரு List A போட்டியிலும் விளையாடியுள்ளார். தென்னாபிரிக்க 19 வயதுக்குட்பட்ட அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளிலும், 10 ஒருநாள் போட்டிளிலும் விளையாடியுள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்தின் ;North Petherton  கழகத்துக்காக விளையாடி வருகின்ற அவர், அந்த அணிக்காக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வருகின்ற அவர், இதுவரை 7 இன்னிங்ஸ்களில் ஆடி 2 அரைச்சதங்கள் உட்பட 191 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<