இலங்கை தொடருக்கான அவுஸ்திரேலிய குழாத்தில் கொவிட்-19

Australia tour of Sri Lanka 2022

312

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலிய குழாத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் அன்ரு மெக்டொனால்ட்டிற்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் தொடர்ச்சியான சிக்கல்கள் ஏற்பட்டுவருகின்றன. இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக அவுஸ்திரேலியா அணி இலங்கை வருமா? என்ற கேள்விகள் ஏற்கனவே எழுந்திருந்தன.

>> இலங்கை – அவுஸ்திரேலிய தொடர் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்

எவ்வாறாயினும், இரண்டு கிரிக்கெட் சபைகளும் தொடர் திட்டமிட்டவாறு நடைபெறும் என்ற விடயத்தினை இன்றைய தினம் உறுதிப்படுத்தியிருந்தன. அத்துடன், இன்று பிற்பகல் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு புறப்படும் என்ற அறிவிப்புகளும் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அன்ரு மெக்டொனால்ட்டிற்கு நேற்றைய தினம் (31) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்காரணமாக இலங்கைக்கு பயணிக்கவிருக்கும் T20I குழாத்துடன் அன்ரு மெக்டொனால்ட் பயணிக்கமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், முதல் T20I போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக, உதவி பயிற்றுவிப்பாளர் மைக்கேல் டி வெனுடோ செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கொவிட்-19 சிகிச்சைகளுக்கு பின்னர் எதிர்வரும் 8ம் திகதி இரண்டாவது T20I போட்டி நடைபெறும் போது அன்ரு மெக்டொனால்ட் அணியுடன் இணைந்துக்கொள்வார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் 7ம் திகதி ஆரம்பமிக்கவுள்ளதுடன், அதனைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<