இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விருத்திமான் சஹா

579
 

பெங்கால் ரஞ்சி அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் இனி ஒருபோதும் பெங்கால் அணிக்கு ஆடப்போவதில்லை எனவும், தயவு செய்து தனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குமாறும் விருத்திமான் சஹா கோரிக்கை விடுத்துள்ளது இந்திய கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் காப்பாளர் விருத்திமான் சஹாவுக்கும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வந்த முறுகல் நிலை தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான விருத்திமான் சஹா கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 143 IPL போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ச்சியாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தாலும் டோனி விளையாடியதால் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஆனாலும் இன்றுவரை தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புக்கான வரிசையில் காத்திருக்கும் அவர் அவ்வப்போது இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கம் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான முக்கிய ஆட்டத்தில் விளையாட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி ஜூன் 7ஆம் திகதி பெங்களூரில் நடைபெற இருக்கும் ரஞ்சி தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிரான காலிறுதி சுற்றுக்கான போட்டியில் பெங்கால் அணிக்காக அவர் விளையாட அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இந்த அழைப்பை மறுத்து தான் இந்தத் தொடரில் விளையாட போவதில்லை என்று சஹா கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அவிஷேக் டால்மியா, சஹா எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

இதனிடையே, Espncricinfo இணையத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரையின்படி, சஹாவுக்கும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையேயான சர்ச்சையைத் தீர்க்க பாரிய முயற்சியொன்று மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் சஹாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அவருடைய விருப்பத்திற்கு அமைய பிரிதொரு அணியில் இணைந்துகொள்வதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சஹா நீக்கப்பட்ட பிறகு, இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியுடன் இந்த விடயத்தைப் பற்றி விவதித்துள்ளார். அதன்பிறகு அவர் ரஞ்சி கிண்ணத்தில் பெங்கால் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதில்லை என்று முடிவு செய்தார்.

இந்த நிலையில், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அவிஷேக் டால்மியா சஹாவின் முடிவு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

“சஹா ரஞ்சி கிண்ணத்தில் விளையாடாமல் இருப்பதற்கு தகுந்த காரணம் என்ன என்று சொல்ல முடியுமா? தற்போது அவர் இந்திய குழாத்தில் இல்லாவிட்டால் பெங்கால் அணிக்காக ஏன் அவருக்கு விளையாட முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் பெங்கால் அணியில் அவருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது தான் தெட்டத் தெளிவான உண்மை, அதேபோல, அவர் இப்படி விளையாட முடியாது என்று மறுப்பது இது முதல் முறை அல்ல.

ஒவ்வொரு முறையும், அவர் உடம்பு வலிக்கிறது அல்லது கால் வலிக்கிறது என்று காரணம் சொல்வார். இதை பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு எமக்கும் ஒரு எல்லை உண்டு. அவர் இவ்வளவு பிடிவாதமாக இருந்தால் இனி அவருக்கு பயப்பட தேவையில்லை. மாநில கிரிக்கெட் சங்கம் என்பது ஒரு வீரர் தான் விரும்பியபடி செயல்படும் இடம் அல்ல என்பதை எந்த வீரரும் மனதில் கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இதுஇவ்வாறிருக்க, பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரின் இந்த கருத்தால் தனது கணவர் மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அவரது மனநிலையை மீட்டெடுப்பதன் மூலம் பெங்கால் அணியை மீண்டும் பிரதிநிதித்துவப்படுத்த அவர் கடுமையாக உழைத்ததாகவும் சஹாவின் மனைவி Espncricinfo இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், காலிறுதியில் விளையாடவுள்ள பெங்கால் அணியில் சாஹாவின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டபோது அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின.

இதன்காரணமாக, பெங்கால் வீரர்களுக்கான வாட்ஸ்அப் குழுவிலிருந்து சஹாவும் வெளியேறிவிட்டார். மேலும் அவர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்ற தெளிவான செய்தியை அவர் அனுப்பியுள்ளார்.

எனவே, பெங்கால் அணிக்காக முதல்தரப் போட்டிகளில் அறிமுகமாகி சுமார் 15 ஆண்டுகள் பெங்கால் அணிக்காக விளையாடி வந்த விருத்திமான் சஹா, அந்த அணியில் இருந்து விடைபெற முடிவு செய்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<