MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ், MODE அணிகள்

301

வர்த்த நிறுவனங்கள் (MCA) இடையிலான சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்த தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் HNB அணியினை வீழ்த்திய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் அணியும், ஹேய்லிஸ் குழுமத்தினை வீழ்த்திய MODE Engineering அணியும் தெரிவாகியிருக்கின்றன.

இலங்கையுடன் மோதும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

HNB எதிர் ஜோன் கீல்ஸ்

NCC மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் HNB வங்கி அணிக்கு எதிராக ஜோன் கீல்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்திருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய HNB அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்கள் பெற்றது. HNB அணிக்காக துடுப்பாட்டத்தில் கிரிஷான் சஞ்சுல (41) பிரகாசித்திருந்தார். அதேநேரம் ஜோன் கீல்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அகில தனன்ஞய, மொஹமட் டில்சாத் மற்றும் மலிங்க அமரசிங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 131 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய ஜோன் கீல்ஸ் அணி வெற்றி இலக்கினை 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து அடைந்து கொண்டது. ஜோன் கீல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சசித்த ஜயத்திலக்க 35 ஓட்டங்களை எடுத்து தனது தரப்பு வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் சுழல்பந்துவீச்சாளரான கயான் சிறிசோம HNB அணியின் வெற்றிக்காக போராடிய போதும் அவரின் பந்துவீச்சு வீணானது.

போட்டியின் சுருக்கம்

HNB (A) – 130/9 கிரிஷான் சஞ்சுல 41, அகில தனன்ஞய 2/18, மாலிங்க அமரசிங்க 2/25, மொஹமட் டில்சாத் 2/30

ஜோன் கீல்ஸ் குழுமம் (A) – 131/8 (19.1) சசித்த ஜயத்திலக்க 35, கயான் சிறிசோம 4/26

முடிவு – ஜோன் கீல்ஸ் குழுமம் 2 விக்கெட்டுக்களால் வெற்றி 

MODE Engineering எதிர் ஹேய்லிஸ் குழுமம்

MCA மைதானத்தில் நடைபெற்றிருந்த இரண்டாவது அரையிறுதியில் MODE Engineering அணி ஹேய்லிஸ் குழுமத்தினை 19 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய MODE Engineering அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்கள் எடுத்தது. MODE Engineering அணிக்காக துடுப்பாட்டத்தில் துஷான் ஹேமன்த (47), சஜித் டி சில்வா (45) மற்றும் அருள் பிரகாஷ் (37) ஆகியோர் சிறப்பாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கினை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய ஹேய்லிஸ் குழும அணியினர் 20 ஓவர்கள் நிறைவிற்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவினர். ஹேய்லிஸ் அணியின் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான டில்ருவான் பெரேரா 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

மறுமுனையில் MODE Engineering அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் இம்தியாஸ் ஸ்லாஷா, T. விதுஷன் மற்றும் அருள் பிரகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

MODE Engineering – 169/8 (20)  துஷான் ஹேமன்த 47, சஜித் டி சில்வா 45, அருள் பிரகாஷ் 37, சத்துரங்க டி சில்வா 3/20

ஹேய்லிஸ் குழுமம் – 150/9 (20) டில்ருவான் பெரேரா 42, இம்தியாஸ் ஸ்லாஷா 2/15, T. விதுஷன் 2/17, அருள் பிரகாஷ் 2/24, துஷான் ஹேமன்த 2/36

முடிவு – MODE Engineering அணி 19 ஓட்டங்களால் வெற்றி

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<