சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் தொடர் செப்டம்பரில்

72

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்த முடியாமல் இருந்த சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் 89ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டித் தொடரானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அல்லது தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான தெரிவுப் போட்டியாக இம்முறை சேர். ஜோன் டார்பர்ட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தப் போட்டித் தொடருக்கான விதிமுறைகள், வயதுப் பிரிவுகள் மற்றும் பங்குபற்றவுள்ள வீரர்களுக்கான விண்ணப்பப்படிவம் உள்ளிட்ட விடயங்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இறுதியாக, கடந்த 2018 செப்டம்பர் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<