கொலம்பியாவின் காலியில் நடைபெற்றுவரும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் (U20) போட்டித்தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டிகள் நிறைவுக்கு வந்திருந்தன.
இந்தப்போட்டித்தொடரில் ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்ற ருமேஷ் தரங்க 7வது இடத்தையும், முப்பாய்ச்சல் போட்டியில் பசிந்து மல்ஷான் 11வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.
உலக கனிஷ்ட மெய்வல்லுனர் அரையிறுதிக்கு தகுதிபெற்ற தனுஷ்க தர்ஷன
ருமேஷ் தரங்க – ஈட்டி எறிதல்
புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க தன்னுடைய மிகச்சிறந்த பிரதியொன்றினை பதிவுசெய்து ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் 7வது இடத்தை பிடித்துக்கொண்டார்.
இவர் இலங்கையிலிருந்து புறப்படும் போது 06.93 மீற்றர் தூரத்தை பதிவுசெய்திருந்த போதும், இந்த இறுதிப்போட்டியில் 69.98 மீற்றர் தூரம் வீசி 7வது இடத்தை பிடித்தார். இந்தப்போட்டியில் உக்ரைனின் ஆர்தர் பெல்ப்னர் 79.36 மீற்றர் தூரம் வீசி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார்.
இதேவேளை ருமேஷ் தரங்க தகுதிச்சுற்றில் 70.68 மீற்றர் தூரம் எறிந்து, கனிஷ்ட தேசிய சாதனையை பதிவுசெய்திருந்தார். அதுமாத்திரமின்றி இலங்கை 20 வயதின் கீழ் வீரர்களில் முதன்முறையாக 70 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.
பசிந்து மல்ஷான் – முப்பாய்ச்சல்
இலங்கை சார்பில் முப்பாய்ச்சல் இறுதிப்போட்டியில் பங்கேற்ற பசிந்து மல்ஷான் தகுதிச்சுற்றில் திறமையை வெளிப்படுத்திய அளவில் இறுதிப்போட்டியில் பிரகாசிக்கவில்லை.
இவர் இறுதிப்போட்டியில் 15.14 மீற்றர் தூரம் பாய்ந்து 11வது இடத்தை பிடித்துக்கொண்டார். இதேவேளை இறுதிப்போட்டியில் ஜமைக்கா வீரர் ஜெய்டன் ஹிப்பெர்ட் சம்பியன்ஷிப் சாதனையை பதிவுசெய்து 17.27 மீற்றர் தூரம் பாய்ந்திருந்து தங்கப்பதக்கத்தை வென்றிருந்ததுடன், இந்தியாவின் செல்வா திருமாறன் (16.15) வெள்ளிப்பதக்கத்தை வென்றிருந்தார்.
எவ்வாறாயினும் பசிந்து மல்ஷான் தகுதிச்சுற்றில் 15.73 மீற்றர் தூரம் பாய்ந்து தன்னுடைய சிறந்த பிரதியுடன் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<