ஆர்ஜன்டீனா, நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

267
Argentina - Australia, Netherland - USA

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நொக் அவுட் சுற்று சனிக்கிழமை (03) ஆரம்பமானது. இதில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி ஆர்ஜன்டீன அணியும் அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து அணியும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டன. இதன்படி இந்த இரு அணிகளும் இலங்கை நேரப்படி எதிவரும் சனிக்கிழமை (10) அதிகாலை காலிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முதல் இரு நொக் அவுட் போட்டிகளினதும் விபரம் வருமாறு,

மெஸ்ஸியின் வழிநடத்தலில் அர்ஜன்டீனா வெற்றி

லியோனல் மெஸ்ஸியின் வழிநடத்தலில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

அஹமது பின் அலி அரங்கில் இலங்கை நேரப்படி ஞாயிறு (04) அதிகாலை நடந்த 16 அணிகள் சுற்றில் வலுவான ஆர்ஜன்டீன அணியின் ஆதிக்கம் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக அந்த அணித் தலைவர் மெஸ்ஸி ஆர்ஜன்டீன அணிக்காக முதல் கோலை புகுத்தி வெற்றிக்கு வழிநடத்தினார்.

35ஆவது நிமிடத்தில் வைத்து ஒட்டமன்டி பரிமாற்றிய பந்தை பெற்ற மெஸ்ஸி, பெனல்டி பெட்டிக்கு வெளியில் இருந்து தாழ்வாக எதிரணி கோல் காப்பாளருக்கு எட்ட முடியாத வகையில் அபார கோல் ஒன்றை புகுத்தினார்.

மெஸ்ஸிக்கு இந்தப் போட்டி 1000ஆவது தொழில்முறை ஆட்டமாக இருந்ததோடு உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீன அணிக்காக பெறும் 9ஆவது கோலாகவும் அமைந்தது. இதன் மூலம் அவர் உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீன அணிக்காக அதிக கோல்களை பெற்ற மரடோனாவின் சாதனையை முறியடித்தார்.

>> பிரேசிலுடனான நொக் அவுட் போட்டிக்கு தென் கொரியா தகுதி; வென்றும் வெளியேறியது உருகுவே

35 வயதான மெஸ்ஸி இதற்கு முன்னர் ஐந்து உலகக் கிண்ணத் தொடர்களில் எட்டு கோல்களை போட்டபோதும் நொக் அவுட் சுற்றில் அவர் பெறும் முதல் கோல் இது தான். அதேபோன்று இம்முறை உலகக் கிண்ணத்தில் அவர் இதுவரை

3 கோல்களை பெற்று அதிக கோல்கள் பெற்றவர் வரிசையில் முதல் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மெஸ்ஸியின் கோலுடன் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்ற ஆர்ஜன்டீனாவுக்காக ஜூலியன் அல்வேரஸ் 57ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை புகுத்தினார்.

எனினும் ஆர்ஜன்டீனாவுக்கு ஈடுகொடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி 77ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றதால் பரபரப்பு அதிகரித்தது. கிரெக் குட்வின் அடித்த பந்து ஆர்ஜன்டீன மத்திய கள வீரர் என்வோ பெர்னாண்டஸின் உடலில் பட்டு ஓன் கோலாக மாறியது.

அவுஸ்திரேலிய அணி 2006ஆம் ஆண்டுக்குப் பின்னரே நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதோடு மீண்டும் ஒருமுறை அந்த சுற்றுடன் வெளியேறியது. அப்போது அந்த அணி உலகக் கிண்ணத்தை வென்ற இத்தாலியிடமே தோல்வியை சந்தித்தது.

அமெரிக்காவை இலகுவாக வீழ்த்தியது நெதர்லாந்து

அமெரிக்காவுக்கு எதிராக 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியீட்டிய நெதர்லாந்து அணி உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

கலீபா சர்வதேச அரங்கில் சனிக்கிழமை (03) நடந்த முதலாவது நொக் அவுட் போட்டியில் இளம் அமெரிக்க அணிக்கு எதிராக நெதர்லாந்து ஆரம்பத்திலேயே ஆக்கிரமிப்பு ஆட்டத்தை தொடுத்தது. 10ஆவது நிமிடத்தில் டம்பிரைஸ் உயரப் பரிமாற்றிய பந்தை மம்பிஸ் டிபெய் கோலாக மாற்றினார்.

>> ஜெர்மனி, பெல்ஜியம் வெளியேற்றம்; நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான், மொரோக்கோ

இதன்போது நெதர்லாந்து வீரர்கள் இடையூறு இன்றி 20 பரிமாற்றங்களுக்கு பின்னரே அந்த கோலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து முதல்பாதி முடிவுறும் நேரத்தில் டாலி பிலைன்ட் மூலம் நெதர்லாந்து இரண்டாவது கோலையும் புகுத்த அந்த அணி வலுவான நிலையை பெற்றது.

இந்நிலையில் 76ஆவது நிமிடத்தில் புலுசிக் பரிமாற்றிய பந்தை கோலாக மாற்றி ஹஜி விரைட் அமெரிக்காவுக்கு சிறிய நம்பிக்கையை தந்தார். எனினும் நெதர்லாந்து வீரர்கள் அமெரிக்க கோல் எல்லையை அடிக்கடி ஆக்கரமித்த நிலையில் அமெரிக்கா பெரும்பாலான நேரம் தற்காப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.

81ஆவது நிமிடத்தில் பிளைன் பரிமாற்றிய பந்தை டென்சில் டும்பிரைஸ் கோலாக மாற்ற நெதர்லாந்து காலிறுதிக்கு முன்னேறுவது உறுதியானது.

1974, 1978 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி வரை முன்னேறிய நெதர்லாந்து 19 போட்டிகளில் தோல்வியுறாத நிலையிலேயே காலிறுதியில் ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<