2ஆவது ஒருநாள் போட்டியை தவறவிடும் பங்களாதேஷ் பயிற்சியாளர்

Bangladesh Tour of Sri Lanka 2025

51
Phil Simmons

பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஏற்கனவே திட்டமிட்டிருந்த மருத்துவ ஆலோசனைக்காக வெள்ளிக்கிழமை லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இலங்கைக்கு எதிராக தற்போது நடைபெற்றுவரும் வெள்ளைப் பந்து தொடருக்காக சிம்மன்ஸ் கொழும்பில் பங்களாதேஷ் அணியுடன் இருந்தார். எனினும், நாளை (05) நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இல்லாவிட்டாலும், ஜூலை 8ஆம் தேதி நடைபெறும் 3ஆவது ஒருநாள் போட்டிக்கு அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் அமினுல் இஸ்லாம் இலங்கையுடனான டெஸ்ட் தொடர் மற்றும் முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணி வெளிப்படுத்திய செயல்திறன் குறித்து பேசுவதற்காக பில் சிம்மன்ஸை மீண்டும் அந்நாட்டுக்கு அழைத்ததாக சில செய்திகள் வெளியானாலும், இந்தப் பயணம் முற்றிலும் இங்கிலாந்தில் முன்பதிவு செய்யப்பட்ட மருத்துவரை சந்திப்பதற்காக மட்டுமே என்பதை கிரிக்பஸ் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் நபீஸ் இக்பால் கருத்து தெரிவிக்கையில், பில் சிம்மன்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டு நாட்களுக்கு லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருக்கு பெப்ரவரி மாதம் ஒரு மருத்துவ சந்திப்பு இருந்தது. ஆனால் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் காரணமாக அதை அவர் தவறவிட்டார். தற்போது மருத்துவர்களுடனான சந்திப்பு திகதியை மாற்ற முடியாத நிலை. அவர் அந்த சந்திப்பை மாற்ற முயற்சித்தார், ஆனால் எப்படியோ அவரால் அதை செய்ய இயலவில்லை. சுற்றுப்பயணம் ஆரம்பமாவதற்கு முன்னரே, இது குறித்து (மருத்துவர்களை சந்திப்பது பற்றி) அவர் கிரிக்கெட் சபையிடம் பேசி அதற்கேற்ப திட்டமிட்டிருந்தார். என தெரிவித்தார். 

>>மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க<<