உலக கனிஷ்ட மெய்வல்லுனர் அரையிறுதிக்கு தகுதிபெற்ற தனுஷ்க தர்ஷன

World Athletics U20 Championships - Cali 2022

37
 

கொலம்பியாவின் காலியில் நடைபெற்றுவரும் உலக கனிஷ்ட  மெய்வல்லுனர் (U20) போட்டித்தொடரில் இலங்கை வீரர் தனுஷ்க தர்ஷன, ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் கனிஷ்ட தேசிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அம்பகமுவ மத்தியக் கல்லூரியைச் சேர்ந்த தனுஷ்க தர்ஷன 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் முதல் சுற்றின் 7வது கட்டத்தில் போட்டியிட்டு அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டார்.

>> இலங்கைக்காக வரலாற்று வெண்கலத்தை வென்ற யுபுன் அபேகோன்!

தனுஷ்க தர்ஷன போட்டித்தூரத்தை 51.41 செக்கன்களில் நிறைவுசெய்து 7ம் கட்டத்தில் 2வது இடத்தை பிடித்துக்கொண்டதுடன், முதல் சுற்று நேரப்பிரதிகளின் வரிசையில் 13வது இடத்தையும் பிடித்திருந்தார்.

அதேநேரம் இதற்கு முன்னர் 51.99 என்ற சிறந்த நேரப்பிரதியை இந்த ஆண்டு தியகமவில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பதிவுசெய்திருந்தார். குறித்த இந்த தொடரில் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் சம்பியனாகவும் முடிசூடியிருந்தார்.

தற்போது 51.41 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்துள்ள இவர், கடந்த 2019ம் ஆண்டு நவோதய சன்கல்ப பதிவுசெய்திருந்த 51.96 என்ற கனிஷ்ட தேசிய சாதனையை முறியடித்துள்ளார். இதேவேளை, தனுஷ்க தர்ஷன 400 மீற்றர் சட்டவேலி அரையிறுதிப்போட்டியில் நாளைய தினம் (05) இலங்கை நேரப்படி அதிகாலை 03.10 மணிக்கு போட்டியிடவுள்ளார்.

தனுஷ்க தர்ஷனவை தொடர்ந்து பெண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப்போட்டியில் பங்கேற்ற தருஷி கருணாரத்ன, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இவர் முதல் சுற்றில் 54.13 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்தபோதும், அரையிறுதியை 54.86 செக்கன்களில் நிறைவுசெய்து 7வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதேவேளை உலக கனிஷ்ட  மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் 4வது நாளான இன்றைய தினம் தனுஷ்க தர்ஷனவை தொடர்ந்து மேலும் இரண்டு வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க (இரவு 07.30) மற்றும் முப்பாய்ச்சல் போட்டியில் பசிந்து மல்ஷான் (இரவு 09.30) ஆகியோர்  போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<