2023 ஐ வெற்றியுடன் ஆரம்பித்த குமார் சண்முகேஸ்வரன்

117

இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் கனிஷ்ட அணிகளுக்கான வீரர்களை தெரிவு செய்வதற்காக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இன்று (20) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகின.

இன்று நடைபெற்ற போட்டிகளில் ஒரு இலங்கை (தேசிய) சாதனையும், ஒரு கனிஷ்ட சாதனையும் முறியடிக்கப்பட்டன. ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் முதல் சுற்றில் வர்த்தக சேவைகள் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட ஜனிந்து லக்விஜய, 13.82 செக்கன்களில் போட்டித் தூரத்தை கடந்து புதிய இலங்கை சாதனை படைத்தார்.

முன்னதாக இந்த சாதனையை இராணுவ வீரர் ரொஷான் தம்மிக்க ரணதுங்க, 2021இல் நடைபெற்ற 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நிலைநாட்டினார்.

இம்முறை போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட கே. நாசிக், 14.93 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து 2ஆவது இடம்பிடித்தார்.

இதனிடையே, பெண்களுக்கான மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய கனிஷ்ட சம்பியனாக வலம் வருகின்ற 19 வயதுடைய தரூஷி கருணாரத்ன, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியை 02 நிமிடங்களும் 01.39 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய கனிஷ்ட சாதனை படைத்தார்.

பெண்களுக்கான 800 மீட்டரில் இலங்கை வீராங்கனையொருவரால் பதிவு செய்த 2ஆவது அதிசிறந்த தூரமாக இது இடம்பிடித்ததுடன், இலங்கையில் பதிவாகிய அதிவேக நேரமாகவும் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்று முறை இலங்கை சாதனை படைத்த கடற்படை வீராங்கனை கயந்திகா அபேரத்னவை தரூஷி கருணாரத்ன வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கயந்திகாவின் இலங்கை சாதனை 2 நிமிடங்களும் 01.20 செக்கன்களாகும், இது கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் நிலைநாட்டப்படது.

இதுஇவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் பங்குகொண்ட முன்னாள் தேசிய சம்பியனான விமானப்படையைச் சேர்ந்த நிமாலி லியனாரச்சி காயத்திற்கு உள்ளானார். மேலும் 2021இல் பெண்களுக்கான 800 மீட்டரில் இலங்கை சாதனை படைத்த டில்ஷி குமாரசிங்கவும் இதில் பங்கேற்கவில்லை.

இதேவேளை, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 3000 ஆயிரம் மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நிலானி ரத்நாயக்க, போட்டி தூரத்தை 9 நிமிடங்கள் 40.65 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்ததுடன், தனது வாழ்க்கையில் இரண்டாவது அதிவேகமான நேரத்தையும் பதிவு செய்தார்.

முன்னதாக அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் போட்டியை 9 நிமிடங்கள் 40.24 செக்கன்களில் நிறைவு செய்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, பெண்களுக்கான 200 மீட்டர் போட்டியை ருமேஷிகா ரத்நாயக்க 23.75 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார். 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு பெண்களுக்கான 200 மீட்டரில் அவர் பதிவுசெய்த அதிவேக நேரமும், இலங்கையில் விளையாட்டு வீராங்கனை ஒருவர் குறித்த காலப்பகுதியில் பதிவு செய்த அதிவேக நேரமும் இதுவாகும்.

இதேநேரம், போட்டிகளின் முதல் நாளான இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் முதலிடத்தைப் பிடித்தார். போட்டியை நிறைவு செய்ய 30 நிமிடங்கள் 27.11 செக்கன்களை அவர் எடுத்தார்.

நாளை (21) போட்டியின் 2ஆவது மற்றும் கடைசி நாளாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<