இன்சமாம் உல் ஹக்குக்கு மீண்டும் தலைவர் பதவி

129

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக அவ்வணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக் 2ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக பணியாற்றிய ஹாரூன் ரஷித் கடந்த மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்தப் பதவிக்கு பாகிஸ்தான் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்கின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது 

இந்த நிலையில், மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவானது புதிய தேசிய தேர்வுக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது.   

இதில் முன்னாள் தலைவரும், முன்னாள் தேர்வுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கை மீண்டும் தலைமை தேர்வாளராக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.   

53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார். 

இன்சமாம், 1991 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். மொத்தமாக 499 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 20,580 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 35 சதங்கள் அடங்கும். 2003 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 

இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் செயலாளர் ஹசன் சீமா ஆகியோரும் புதிய தேர்வுக் குழுவின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் அணி, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 30ஆம் திகதி ஆரம்பமாகும் ஆசியக் கிண்ண கிரிக்கெட்டிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடர்களுக்குமான பாகிஸ்தான் அணியை இன்சமாம் உல் ஹக் தலைமையிலான தேர்வு குழு தெரிவு செய்து அறிவிக்க உள்ளது 

அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவரது முக்கிய பணியாக இருக்கும். இறுதியாக கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் அணியை இவர் தான் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<