தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் ஜொலித்த தமிழ் பேசும் வீரர்கள்

National Athletics Trails 2022

340

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இன்று (18) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

இந்த ஆண்டின் கடைசி தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டியாக நடைபெற்ற இப்போட்டித் தொடரில் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்கள் மாத்திரம் பங்குகொண்டனர்.

>> கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடித்தார் யாழ். வீரர் புவிதரன்

இந்த நிலையில், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற ஒருசில முன்னணி தமிழ் பேசுகின்ற வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

புவிதரனின் இலங்கை சாதனை

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீரர் அருந்தவராசா புவிதரன், 5.15 மீட்டர் உயரம் தாவி புதிய இலங்கை சாதனை படைத்தார். இந்த ஆண்டின் கடைசி தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டிகளில் முறியடிக்கப்பட்ட ஒரேயொரு சாதனை இதுவாகும்.

200 மீட்டரில் சபானுக்கு ஏமாற்றம்

ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், 21.61 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 200 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்று தேசிய சம்பியனான அவர், கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற இந்த ஆண்டின் முதலாவது தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் முதல் தடவையாக அவர் பின்னடைவை சந்தித்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

வக்ஷானுக்கு இரண்டாமிடம்

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். போட்டியை நிறைவு செய்ய 15 நிமிடங்கள் 07.41 செக்கன்களை அவர் எடுத்தார்.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டரில் அவர் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சாதனையை நெருங்கிய டக்சிதா 

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவியான நேசராசா டக்சிதா 3.60 மீட்டர் உயரத்தைத் தாவி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

டக்சிதா இந்தப் போட்டியில் வெளிப்படுத்திய திறமையானது வடக்கின் முன்னாள் கோலூன்றிப் பாய்தல் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன், 2016ஆம் ஆண்டு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் நிலைநாட்டிய 3.55 மீட்டர் இலங்கை சாதனையை விட முன்னிலையில் காணப்படுகின்றது. இதன்படி, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலுக்கான முன்னாள் இலங்கை சாதனையை இந்தப் போட்டியின் மூலம் டக்சிதா முறியடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, இந்தப் போட்டியில் 3.70 மீட்டர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பிடித்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த இமேஷா சி;ல்வாவுக்கு டக்சிதா பலத்த போட்டியைக் கொடுத்திருந்தார். எனினும், துரதிஷ்டவசமாக 3.70 மீட்டர் உயரத்தைத் தாவுவதற்கான மூன்று முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவியதால் அவருக்கு இரண்டாவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.

எவ்வாறாயினும், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையான 3.71 மீட்டர் உயரத்தை டக்சிதா மிக விரைவில் முறியடிப்பார் என அவரது பயிற்சியார் கணாதீபன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரியாக வலம் வருகின்ற சச்சினி பெரேரா, அண்மையில் விளையாட்டுக்கு விடைகொடுத்து குடும்பத்துடன் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிப்பெயர்ந்து விட்டார்.

எனவே பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் சாதனையை மிக விரைவில் முறியடிப்பதற்கான வாய்ப்பு யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவி நேசராசா டக்சிதாவுக்கு கிடைக்கும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

வடக்கின் கோலூன்றிப் பாய்தல் நட்சத்திரம் அனிதா ஜெகதீஸ்வரனுக்குப் பிறகு அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளை ஈட்டி வருகின்ற அவர், கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 22 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.10 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

16 வயது அபிலாஷினிக்கு மற்றுமொரு வெற்றி

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த பரந்தாமன் அபிலாஷினி 3.30 மீட்டர் உயரம் தாவி மூன்றாம் இடத்தைப் பிடித்தார். 16 வயதான இளம் வீராங்கனையான அபிலாஷினியின் அதிசிறந்த உயரமாக இது பதிவாகியது.

கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 16 வயதின் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அபிலாஷினி, 3.00 மீட்டர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

>> கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து மாணவி அபிலாஷினி புதிய சாதனை

அதற்கு முன் கடந்த ஜுன் மாதம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில், 18 வயதின்கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புதிய கனிஷ்ட தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றமை  குறிப்பிடத்தக்கது.

எனவே, 16 வயது நிரம்பிய இளம் வீராங்கனையான அபிலாஷினி தேசிய மட்டத்தில் நடைபெற்ற அடுத்தடுத்து மூன்று மெய்வல்லுனர் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

பரிதி வட்டம் எறிதலில் ஆஷிக்குக்கு 2ஆம் இடம்

ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் போட்டியில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம். ஆஷிக், 44.49 மீட்டர் தூரத்தை எறிந்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 100ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

சண்முகேஸ்வரனுக்கு மீண்டும் பின்னடைவு

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனான மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். போட்டியை அவர் 30 நிமிடங்கள் 56.19 செக்கன்களில் நிறைவு செய்தார்.

முன்னதாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற இந்த ஆண்டின் முதலாவது தகுதிகாண் மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<