ஆசிய இளையோர் சம்பியன்ஷிப்பிற்கு இலங்கையிலிருந்து அறுவர் தகுதி

Asian Youth Athletics Championship 2023

143
Six Sri Lankan Athletes reached Qualifying Standards for the Asian Youth Athletics

உஸ்பெகிஸ்தானில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இலங்கையிலிருந்து 6 வீரர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான விசேட தகுதிகாண் போட்டிகள் கடந்த 22ஆம், 23ஆம் திகிதகிளில் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்படி, இம்முறை ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவு மட்டத்தை 6 வீரர்கள் எட்டியிருந்தனர். இதில் 4 பேர் வீரர்களும், 2 வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். இதில் ஆண்கள் பிரிவில் இருந்து உயரம் பாய்தல் வீரர் லெசந்து அர்த்தவிது மற்றும் பெண்கள் பிரிவில் இருந்து மத்திய தூர ஓட்ட வீராங்கனை நிர்மலி விக்ரமசிங்க ஆகிய இருவரும் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 52.87 செக்கன்களில் நிறைவு செய்த அம்பகமுவ மத்திய கல்லூரியின் அயோமால் அக்கலன்க (அடைவு மட்டம் 54.00 செக்), ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 2.00 மீட்டர் உயரத்தைத் தாவிய கொழும்பு டி. எஸ் சேனாநாயக்க கல்லூரியின் லெசநெ;து அர்த்தவிது மற்றும் திக்வெல்ல விஜித கல்லூரியின் நிலுபுல் பெஹசர தேனுஜ (அடைவு மட்டம் 2.00 மீட்டர்), ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.65 மீட்டர் உயரத்தை தாவிய நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியின் மலிந்தரத்ன சில்வா (அடைவு மட்டம் 4.65 மீட்டர்) ஆகியோர் ஆண்கள் பிரிவில் அடைவு மட்டத்தை எட்டியிருந்தனர்.

இதில் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் கோலூன்றிப் பாய்தல் வீரராக மலிந்தரத்ன சில்வா இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

1500 மீட்டர் ஓட்டப் போட்டியை 4 நிமிடங்கள், 47.89 செக்கன்களில் நிறைவு செய்து முறையே முதலிரெண்டு இடங்களையும் பிடித்த கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையைச் சேர்ந்த நிர்மலி விக்ரமசிங்க மற்றும் துலாஞ்சனா பிரதீபனி ஆகிய இருவரும் பெண்கள் பிரிவில் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவு மட்டத்தை (4 நிமி. 48.00 செக்.) எட்டியிருந்தனர்.

முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த நிர்மலி விக்ரமசிங்க மில்லி செக்கன்களால் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான அடைவு மட்டத்தை தவறவிட்டார். இவர் இறுதியாக கடந்த ஆண்டு குவைத்தில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<