தரங்க பரணவிதான ஏன் திடீர் ஓய்வை அறிவித்தார்?

523

ஆரம்ப காலத்தில் தன்னை திலகரத்ன  டில்ஷானுடன் ஒப்பிட்டதாகவும், டில்ஷான் வேகமாக அடித்தாடிய காரணத்தால் தனக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தரங்க பரணவிதான தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தன்னை டெஸ்ட் துடுப்பாட்ட வீரராகவே முத்திரை குத்தியதாகத் தெரிவித்த அவர், தேர்வாளர்கள் வேண்டுமென்றே அணியில் இருந்து தன்னை நீக்கியதாகவும் குற்றம் சுமத்தினார்.

சந்திமாலின் சாதனை முச்சதமும் நிகழ்த்தப்பட்ட அரிய சாதனைகளும்

இலங்கை டெஸ்ட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக சிறிது காலம் விளையாடிய தரங்க பரணவிதான, சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். 

முதல்தரப் போட்டிகளில் 15 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை அடைவதற்கு இன்னும் 540 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அவர் இந்த திடீர் முடிவை அறிவித்தார்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரராக தான் ஓய்வு பெற்றாலும், மிக விரைவில் போட்டி நடுவராக மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குவதற்கு தயாராக இருப்பதாக தரங்க பரணவிதான தெரிவித்தார்

தன்னுடைய பிரியாவிடை அறிவிப்பு குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

”நான் முதல்தரப் போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு தான் 2009இல் இலங்கை அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன். டெஸ்ட் அரங்கில் ஆயிரம் ஓட்டங்களை எனது 11ஆவது போட்டியிலேயே பூர்த்தி செய்தேன்.

Video – சாதனைகளால் அமர்க்களப்படுத்திய Chandi, Dili & Jimmy…!|Sports RoundUp – Epi 129

நான் டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களைக் குவித்தாலும், எனக்கு கிடைத்த வாய்ப்பில் நீண்ட இன்னிங்ஸ்களை விளையாடவில்லை. இதுதான் நான் விட்ட மிகப் பெரிய தவறு. உண்மையில் அணிக்காக நீண்ட இன்னிங்ஸொன்றை விளையாடுவது தான் ஆரம்ப துடுப்பாட்ட வீரரொருவரின் முக்கிய பொறுப்பாகும்

அத்துடன், நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நீண்டகாலம் திலகரத்ன டில்ஷானுடன் தான் விளையாடியிருந்தேன். எனினும், டில்ஷானைப் போல என்னால் வேகமாக அடித்தாட முடியாது. நான் எப்போதும் மெதுவாகத் தான் விளையாடுவேன்

உண்மையில் அணியிலிருந்து என்னை நீக்குவதற்கு எனது மெதுவான துடுப்பாட்டம் தான் முக்கிய காரணமாக இருந்தது என நான் நம்புகிறேன்

ஆனால், என்னை எப்போதும் திலகரத்ன டில்ஷானுடன் தான் ஒப்பிட்டார்கள். என்னை அணியிலிருந்து வெளியேற்றப்படும் போது எனக்கு துடுப்பாட்ட சராசரி 32.58 ஆக இருந்தது.

பரணவிதான தனது ஓய்வை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்

ஆனால், எனக்கு இன்னும் ஒருசில டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிச்சயம் எனது துடுப்பாட்ட சராசரியை அதிகரித்துக் கொண்டு இலங்கை அணிக்காக நீண்டகாலம் விளையாடி இருப்பேன்” என தெரிவித்தார்

இதேநேரம், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏன் அவதானம் செலுத்தவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்

”உண்மையில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு அந்தக் காலத்தில் நான் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை என கூறமுடியாது. எனது ஒருநாள் துடுப்பாட்ட சராசரி 42.77 ஆக இருந்தது. எனினும், என்னை டெஸ்ட் போட்டிகளுக்கான வீரராகவே முத்திரை குத்திவிட்டார்கள். அதுதான் எனக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது

ஒருநாள் போட்டிகளில் எனது இடத்தில் வேறு யாராவது வீரர் விளையாடினால் நிச்சயம் எனக்கு வாய்ப்பு கிடைக்காது. அந்த நேரத்தில் எனக்கு ஏன் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கொடுப்பதில்லை என கேட்டால் நீங்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு மாத்திரம் விளையாடலாம் என பதில் கிடைக்கும்.

Video – உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய Anjelo & Bhanuka |Sports RoundUp – Epi 128

நான் உள்ளூர் T20i போட்டிகளில் இரண்டு வருடங்களும், ஒருநாள் போட்டிகளில் 3 வருடங்களும் சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டேன். ஆனால் ஒருபோதும் இலங்கை ஒருநாள் அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை

2012இல் டெஸ்ட் அணியில் இருந்து என்னை நீக்கினாலும், அந்த வருடத்தில் இருந்து 2018 வரை எனக்கு மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கவில்லை” என அவர் கூறினார்.

இதனிடையே, தனது ஓய்வு அறிவிப்புக்கான காரணத்தை வெளியிட்ட அவர்,  

”எனக்கு தற்போது 38 வயதாகின்றது. இதனால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுகின்ற ஆற்றல் என்னிடம் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த பிறகு தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்தேன். 

2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க

எனினும், உள்ளூர் போட்டிகளில் ஒவ்வொரு தொடரிலும் ஓட்டங்களைக் குவிப்பதற்கு அதிக கவனம் செலுத்துவேன். போட்டிகளின் போது விட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கு அதிக முயற்சிகள் செய்வேன்

அதிலும் குறிப்பாக, இம்முறை உள்ளூர் முதல்தரப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்பே எவ்வாறு 15 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டுவதென்பது பற்றி அதிகம் சிந்தித்தேன். குறிப்பாக எனக்கு அந்த மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 540 ஓட்டங்கள் தான் தேவைப்பட்டது.

ஆனால், இம்முறை பருவகாலத்தில் என்னால் 400 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் எனது ஓய்வை அறிவிப்பதற்கு தீர்மானித்தேன்.  

உண்மையில் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதற்கான தீர்மானத்தை மன உளைச்சலால் எடுக்கவில்லை. நான் கேகாலை மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறிய குடும்பத்தில் இருந்து வந்தவன்

நான் கிரிக்கெட்டிலிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். அதை நினைத்து பெருமையடைகிறேன். ஆனால், நான் விளையாடிய காலத்தில் எனக்கு சின்னச் சின்ன அநீதிகள் இழைக்கப்பட்டன” என தெரிவித்தார்.  

கொரோனாவினால் தள்ளிப்போகும் பாடசாலை விளையாட்டு நிகழ்ச்சிகள்

இந்த நிலையில், தனது எதிர்கால இலட்சியம் குறித்து பேசிய தரங்க பரணவிதான,

”நான் தற்போது பயிற்சியாளர் பாடநெறிக்கான 2ஆம் நிலையை முடித்துவிட்டேன். அதுமாத்திரமின்றி, நடுவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கும் தோற்றியிருந்ததுடன், அதில் 4ஆவது நிலை நடுவராக தரமுயர்த்தப்பட்டுள்ளேன்

எனவே மிக விரைவில் நடுவராக களமிறங்குவதற்கு ஆவலுடன் இருக்கின்றேன்” என அவர் தெரிவித்தார்.  

கேகாலை புனித மரியாள் கல்லூரியில் கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்த தரங்க பரணவிதான, 2009இல் இலங்கை டெஸ்ட் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அறிமுகமானார். 2009 இடம்பெற்ற லாகூர் தீவிரவாத தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவராகவும் அவர் இடம்பெற்றார்.

தனிப்பட்ட காரணத்தால் ஐ.பி.எல். தொடரிலிருந்து ரெய்னா விலகல்

எனினும், இலங்கைக்காக குறைந்தளவு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள அவர், இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 1792 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், 11 அரைச் சதங்களும் அடங்கும்

அத்துடன், 2010இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களைக் குவித்த அவர், இறுதியாக 2012இல் நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே, 222 உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள தரங்க பரணவிதான, எஸ்.எஸ்.சி மற்றும் தமிழ் யூனியன் கழகங்களுக்காக மாத்திரம் விளையாடி 40 சதங்கள் மற்றும் 69 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 14940 ஓட்டங்களைக் குவித்துள்ளமை சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<