2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க

2619
Lasith Malinga

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான, இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவரும், வேகப்பந்துவீச்சாளருமான லசித் மாலிங்க அடுத்து நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரானது கடந்த மார்ச் மாதம் மிக கோலாகலமாக இந்தியாவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா என்ற கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக முழு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டன. அதில் ஒரு அங்கமாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரும் ஒத்திவைக்கப்பட்டது.

ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகும் மஹேல ஜயவர்தன

பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஐ.சி.சி டி20 உலகக்கிண்ண தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மூடிய மைதானத்திலாவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரை நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவெடுத்தது. அதன்படி இந்தியாவில் தொடரை நடாத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதன் காரணமாக இந்தியாவில் நடாத்த முடியாத நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. 

அதன்படி எதிர்வரும் மாதம் (செப்டம்பர்) 19 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி மற்றும் சார்ஜாவில் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள மூன்று மைதானங்களில் மாத்திரம் ரசிகர்கள் இன்றி மூடிய மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இதற்காக தொடரில் பங்குபற்றும் மொத்த அணிகளும் ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி புறப்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பு சம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான இலங்கையின் லசித் மாலிங்க தனிப்பட்ட காரணமாக முழுமையாக தொடரிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

விளையாட்டு அபிவிருத்திக்கு மஹேலவுடன் கைகோர்க்கும் டயலொக் நிர்வாகி

36 வயதுடைய லசித் மாலிங்க இலங்கை டி20 அணியின் தலைவராக காணப்படுவதுடன், உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் பெயர்போன ஒரு வேகப்பந்துவீச்சாளராக காணப்படுகிறார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு தக்கவைக்கப்பட்ட வீரராக விளையாடிவரும் லசித் மாலிங்க 10 வருடங்களில் 122 இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராகவும் லசித் மாலிங்க சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதற்கு லசித் மாலிங்க முக்கிய வீரராக திகழ்ந்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது ஒரு அனுபவ வேகப்பந்துவீச்சாளரை இழப்பது அணிக்கு பாரிய இழப்பாக காணப்படுவது மாத்திரமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பாரிய இழப்பாக காணப்படுகிறது. 

இந்நிலையில் இந்தவருடம் நடைபெறவுள்ள 13 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு வீரர்கள் மாத்திரமே பங்கேற்கின்றனர். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மாலிங்க இழக்கப்படுகின்ற நிலையில், அடுத்ததாக சகலதுறை வீரர் இசுறு உதான மாத்திரம் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சேர்ஸ் பெங்களுர் அணியில் விளையாடுகிறார். 

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண காலிறுதிப் போட்டி விபரம்

இதேவேளை கடந்த 4 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன 2020 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக இன்று (21) ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணமானமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க